மரபு விளையாட்டு : நூற்றுக் குச்சி
இனியன்
காய்ந்த தென்னை ஓலை குச்சி வைத்து விளையாடலாம். 2 முதல் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் வட்டமாக அமர்ந்து விளையாடலாம்.
ஒரு சாண் அளவில் 10 சிறிய குச்சிகளும், இரண்டு சாண் அளவுக்கு ஒரேயொரு பெரிய குச்சியும் தேவை.
மொத்தமிருக்கும் 11 குச்சிகளையும் கலைத்து தரையில் வீச வேண்டும். பெரிய குச்சி மீது ஏதாவது ஒரேயொரு சிறு குச்சியாவது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கலைத்துப் போட்டவர் தொடர்ந்து விளையாட முடியும்.
இப்போது கீழே இருக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் போது பக்கத்து குச்சியின்மேல் பட்டுவிட்டாலோ அல்லது சிறிதளவு அசைந்தாலுமே விளையாடுபவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். அடுத்த நபர் விளையாடத் தொடங்க வேண்டும்.
முதல் குச்சியையோ அல்லது தனித் தனியாகப் பிரிந்திருக்கும் குச்சிகளையோ எடுக்க மட்டுமே நேரடியாக கையைப் பயன்படுத்த வேண்டும். மற்ற குச்சிகளை எடுக்க கையில் இருக்கும் குச்சிகளையே பயன்படுத்த வேண்டும்.
எத்தனை குச்சிகளை ஒருவர் எடுக்கிறாரோ அத்தனை புள்ளி அவருக்கு.
பெரிய குச்சிக்கு 100 புள்ளி மதிப்பு.
சிறிய குச்சிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 10 புள்ளி மதிப்பு.
ஒரே ஆட்டத்தில் ஒருவர் அத்தனை குச்சிகளையும் எடுத்துவிட்டால் அவர் தொடர்ந்து அடுத்தடுத்த முறையும் விளையாடிக் கொண்டே இருக்கலாம்.
ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் அவரவர் எடுத்த புள்ளிகளின் மதிப்பைக் குறித்து வைத்துக் கொண்டு எத்தனை சுற்று வரை விளையாடப் படுகிறதோ அதுவரை விளையாடலாம். இறுதியில் முடிக்கும் போது யார் அதிகப் புள்ளிகள் பெற்றிருக்-கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.
குச்சிகளை ஒருவர் எடுக்கும் போது மிக உன்னிப்பாக மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிது அசைந்தாலுமே கவனிக்க முடியும்.<
Gadgets இல்லாத போன தலைமுறையின் விளையாட்டுகளைத் தமிழ்நாடெங்கும் தேடிக் கண்டுபிடித்து, அதை மேலும் பல குழந்தைகளோடு சேர்ந்து ஆடிவரும் இனியன், இந்த இதழில், நம் அம்மா அப்பா காலத்துக் குழந்தைகளுக்குத் தெரிந்த சில விளையாட்டுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.