உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா
சின்னஞ்சிறு அகவையிலே பாப்பா – நீயுன்
சிந்தனையை வளர்த்திடணும் பாப்பா
அன்புடனும் பண்புடனும் பாப்பா – நீ
ஆளாகிப் புகழ்பெறணும் பாப்பா
முன்னோர்தாம் சொன்னார்கள் என்றே – நீ
முழுவதையும் ஏற்காதே பாப்பா
உண்மையெனில் ஒப்பிடுக பாப்பா – நீ
உள்ளதைத்தான் நம்பிடணும் பாப்பா
இல்லாத ஒருபொருளை பாப்பா – நீயும்
இருக்குதெனச் சொல்லாதே பாப்பா
கல்லாதார் கற்பனையை பாப்பா – நீயும்
கடுகளவும் மதிக்காதே பாப்பா
கல்பொம்மை மண்பொம்மை பாப்பா – உனக்குக்
காட்டிஅதைக் கடவுளென்பார் பாப்பா
எல்லாம்அவன் செயலென்பார் பாப்பா – உன்னை
ஏமாற்றக் கதையளப்பார் பாப்பா.
உன்அறிவு சொல்லும்வழி பாப்பா – நீயும்
ஓயாது வினவிடணும் பாப்பா –
நுண்ணறிவால் உணர்ந்திடணும் பாப்பா – நல்ல
நூல்படித்துத் தெளிவுறணும் பாப்பா.
– பெரு.இளங்கோ, திருவொற்றியூர்