காரணமின்றி ஏற்காதீர்கள் : திராவிடம் என்ற சொல் தமிழா? திராவிடர் என்று சொல்வது தவறா?
திராவிடர், திராவிடம் என்னும் சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் என்கின்றனர் சிலர். ஆனால், இது தப்பான கருத்து.
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபே என்று ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணர் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
தமிழ், தமிழ, தமில, த்ரமிள, த்திரவிட, திராவிட என்று காலங்காலமாய் திரிந்து உருவானது. எனவே, திராவிடம் என்பது வடசொல் அல்ல. தூய தமிழ்ச் சொல் என்பதை உறுதிபடக் கூறியுள்ளார்.
தமிழ் என்பது ஒவ்வொரு காலத்திலும் எப்படித் திரிந்து திராவிடம் ஆனது என்பதற்கு வரலாற்றுச் சான்று உள்ளது.
மகாவம்சம் என்னும் பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) எனும் சொல் தமிழைக் குறிக்கிறது.
ஸ்வேதாம்பர சைனர் எனும் பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்னும் சொல் காணப்படுகிறது.
‘த்ரமிள’ எனும் சொல் வட இந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி.597-_-608இல் செதுக்கப்பட்டவை. இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.
‘த்ராவிள’ எனும் சொல் சைனக் கணங்கள் என்னும் நூலிலும் காணப்படுகிறது.
கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிபிடகா எனும் புத்த வாய்மொழி இலக்கிய மூலம் இந்தியாவில் அந்தக் காலத்தில் மூன்று முக்கிய மொழிகள் இருந்ததாகவும் அவை மாகதி, அந்தகா, தமிள ஆகியவை ஆகும் என்று அறிகிறோம். இங்கு ‘அந்தகா’ ஆந்திரத்தையும், ‘தமிள’ தமிழையும் குறிக்கின்றன.
திரிபிடகா இலக்கியத்துக்கு கி.பி.5ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய தம்ம பாலாவும் அந்தக் காலத்தில் மாகதி, அந்தகா, தமிள ஆகிய மூன்றும்தாம் முக்கிய மொழிகளாக இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
தமிழ் ஆழ்வார்களின் பாடல்களில் திராவிட வேதம் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட நந்திவர்மன் தமிழ் மன்னர்களைத் திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
ஸ்டென் கொனோவ் எனும் மொழியியல் வல்லுநர் தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிட என்னும் சொல் தோன்றியதாகக் கருதுகிறார். ஏ.எல்.பாஷம் என்பவர் தமிழ் என்னும் சொல் தமிழ், தமிழ, தமில, த்ரமிள, த்ரமிட, த்ரவிட என்று மாறியதாகக் கூறியுள்ளார். அதேபோல் ‘திராவிட்’ என்று பார்ப்பனர்கள் தங்களை அழைத்துக் கொள்வதை வைத்து இது சமஸ்கிருதச் சொல் என்பதும் தப்பு.
திராவிடர்கள் வாழ்ந்த தென்னிந்தியப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்கள் என்பதைக் குறிக்கவே அவர்கள் தங்களை திராவிட் என்று அழைத்துக் கொண்டனர். இந்தியா முழுக்க பார்ப்பனர்கள் பரவி வாழ்ந்த நிலையில் தெற்கே தமிழர்கள் மிகையாக வாழும் திராவிடப் பகுதியில் வாழும் பார்ப்பனர் என்று தங்களை வேறுபடுத்திக் காட்டவே ‘திராவிட்’ என்று அழைத்துக் கொண்டனர். இங்கு திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கிறது; இனத்தைக் குறிப்பதல்ல.
எனவே, திராவிடம் என்னும் சொல் மொழியியலில் ஒரு பெருங்குடும்பத்தின் பொதுப் பெயராகவும், இன அடிப்படையில் இந்தியாவில் வாழ்ந்த மூத்த குடியினரைக் குறிக்கும் சொல்லாகவும பயன்படுகிறது. இன்றைய சூழலில், இவற்றைத் தாண்டி திராவிடம் என்பது சமத்துவத்துக்கான கருத்தியலாகவும் வளர்ந்திருப்பதாலும், அது தமிழ்நாட்டை மய்யமாகக் கொண்டிருப்பதாலும் ‘நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்’ என்று நாம் பூரிப்பது சரியானதே!