பிஞ்சுகளே, பிஞ்சுகளே! – தாய்மாரே, தந்தைமாரே சேதி கேளுஙக..
பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,
இந்தக் கொரோனா காலத்தில் உங்களையும் பாதுகாப்பது இப்போது முதல் கவலையா இருக்கு. ஆமாம். முன்பெல்லாம் பெரியவங்களைத்தான் தாக்கும் கொரோனா கொடுந்தொற்று _கோவிட் 19 _ என்று இருந்த நிலை மாறி இரண்டாவது அலையும் குறைந்து வருவது நமக்கெல்லாம் ஆறுதல்தான். ஆனால்… கவலை தரும் செய்தியும் கூடவே வருது; அடுத்த அலை _ மூன்றாம் அலை _ குழந்தைகளை அதாவது உங்களைப் போன்ற பிஞ்சுகளைக் கூட தாக்குமாம்!
கேட்கும்போதே உள்ளத்தில் ரத்தம் பீறிடும் உணர்வு ஏற்படுகிறது.
ஆனால், பயப்பட வேண்டாம். அறிவியல் நம்மைக் காப்பாற்ற அயராது அதன் கடமையைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறதல்லவா?
அதன்படி உங்களைப் போன்ற பிஞ்சுகளைப் பாதுகாக்க அடுத்த கட்டமாக தடுப்பூசி போடப் போகிறார்களாம்.
அதற்கு வேண்டிய ஆயத்தங்களை அரசுகள் வெகுவேகமாகச் செய்து வருகின்றன.
பயப்படாமல் துணிச்சலாக நின்று எதிர்கொண்டு நாம் கொரோனாவை வெல்லுவோம்.
முகக்கவசம், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவுதல், கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளைத் தூய்மைப்படுத்துதல், தேவையின்றி எங்கும் வெளியே போகாமல், யாருடனும் கூடிக் கூடிப் பேசாமல், உருப்படி-யான வேலைகளில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்.
சதா செல்போனையே பார்த்துக்கொண்டு அதனுடன் காலங்கழிப்பது, கொரோனா தொற்-றை விட மோசமான மூளையைத் தாக்கும் நோய். எனவே, பசிக்கு உணவு என்பதைப் போல, தேவைக்கு மட்டும் கைத் தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.
அதிகம் சாப்பிட்டால் செரிமானமின்றி அது வயிற்றுக் கோளாறை உண்டுபண்ணுகிறதல்லவா?
அதுபோல, சதாசர்வகாலமும் செல்போனுடனே உங்கள் நேரத்தையும் நினைப்பையும் செலவழிப்பீர்களேயானால், நாளடைவில் அது உங்கள் மூளைகளைக் கோளாறுக்குள்ளாக்கி விடும் என்று உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் என்பதை நீங்கள் மறக்கலாமா?
எனவே, உடற்பயிற்சி, வீட்டுக்குள்ளேயே விளையாட்டு, தேவைப்படும்போது மட்டும் வெளிஉலகத்தில் காலத்தைச் செலவு செய்தல், பயனுறு வகையில் புதிதாக கற்றல்கள், பயிற்சிகள் _ ஆக்கபூர்வ சிந்தனைகள், குடும்பத்தாருடன் குதூகலமாகப் பழகுதல், பொதுப் புத்தகங்கள் படிப்பு, ஓவியம் மற்றும் படிப்புக்கு அப்பாற்பட்ட கலைகளில் உங்களது ஆர்வம், பாட்டு, கூத்து, நடனம் _ இப்படி எது உங்களுக்கு ஈர்ப்புத் தந்து ஈடுபாடு கொள்ளச் செய்கிறதோ, அதைச் செய்யுங்கள். கட்டுரை எழுதுங்கள். கதைகளை _ அறிவுள்ளவைகளைத் தேடிப் பிடித்துப் படித்துச் சுவைத்து, அறிவுக்குமேல் பலத்தைப் பெருக்குங்கள். கொரோனா காலத்தில் மிகக் கொடுமையான ஒரு செய்தி வந்துள்ளது.
ஒரு கிராமத்தில், (ஆரணி அருகே கே.வி.குப்பமாம்) 7 வயது சிறுவனைப் பேய் பிடித்துவிட்டது என்று கருதி, அந்தத் தாய்க்கு பேய் மூடநம்பிக்கை இருந்ததால் அதனை விரட்டுகிறோம் என்று அந்தப் ‘பிஞ்சை’ அடித்தே கொன்றுவிட்டார்கள் என்பது நமது நெஞ்சைப் பிழிய வைக்கின்றது.
“பேயாவது பிசாசாவது?’’ என்று நீங்கள் எல்லாம் தைரியமாகப் பேசுவதை நாங்கள் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், கிராமத்துத் தாய்க்கு புத்தி வேலை செய்யவில்லையே! என்ன செய்ய? அதற்குக் காரணம், அறியாமை! அறியாமைதான்!
கடவுள் மூடநம்பிக்கை போன்றதே பேய், பிசாசு, மந்திர _ தந்திர மூடநம்பிக்கை எல்லாம்!
பெரியார் தாத்தா ரொம்ப காலத்துக்கு முன்பே ‘பேய், பிசாசு, பூதம் இதெல்லாம் கற்பனையில் கடவுள் என்ற கற்பனைக்கும் அண்ணன்! என்று நல்லா பிரச்சாரம் செய்தும்கூட, இன்னமும் இதுமாதிரி கிராமத் தாய்மார்களிடம் பகுத்தறிவு போய்ச் சேராத காரணத்தாலே இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலச் சிந்தனை, செயல் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் என்றால், எவ்வளவு கொடுமை!
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுதி எம்.ஜி.ஆர் நடிச்ச படத்திலே உங்களை மாதிரி பிஞ்சுகளுக்கு எது நல்லது, எது நஞ்சு என்று அறிவுறுத்துகிற கருத்துகளைக் கொண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நல்ல குரலில், கேட்க இனிமையாக இருக்கும் வண்ணம் பாடிய பாட்டை நீங்களும் கேட்டு இருப்பீர்களே, அதுதான் இப்போ ஞாபகத்துக்கு வருகிறது!
அறிவியலாக இருப்பதால் பெரியார் கருத்தை _ எக்காலத்திலும் எவராலும் தடுக்கவே முடியாது. பாட்டாக, கூத்தாக, நடிப்பாக எப்படியும் அது நுழைந்து அறிவு வெளிச்சத்தை நிச்சயம் தரவே செய்யும். யாராலும் தடுக்க முடியாது.
கொரோனாவுக்கு எப்படி தடுப்பூசி பாதுகாப்போ அதுபோல, மூடநம்பிக்கை நோய்க்கு பகுத்தறிவுக் கருத்து, பெரியார் தாத்தா கொள்கை முக்கியம் என்பது இப்போது புரிகிறது இல்லையா?
என்ன தாத்தா, அந்தப் பாட்டைச் சொல்ல மறந்துட்டீங்களா? அப்படீன்னு தானே நீங்க கேக்கறீங்க.. இல்லே, இல்லை மறக்கவில்லை _ இதோ அந்தப் பாட்டு _ கேட்டுச் சுவையுங்கள்.
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா – நீ எண்ணிப் பாரடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி – உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி – உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி – உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம் பழைய பொய்யடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உன்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
(இசைக் கருவியில் இந்தப் பாடலை எப்படி வாசிக்க வேண்டும் என்று இசைக் குறிப்பும் இவ்விதழில் இடம் பெற்றிருக்கிறது. அதையும் பழகுங்கள்)
இப்போ இந்தப் பாட்டை மாத்தி, தாய் _ தந்தையருக்கும், பெரியவங்களுக்கும் கூட “தாய்மாரே, தந்தைமாரே சேதி கேளுங்க’’ என்று புத்தி சொல்லிப் பாடணும்போல இருக்கில்லே?
எனவே, பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் பெரியவர்களுக்கு புத்தி சொல்லுகின்ற காலம் மாறுது.
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி