மர்மராவின் தலைவலி
விழியன்
ரம்ணா என்ற ஆந்தை டாக்டரைப் பார்க்க எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். இந்த டாக்டரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. முதலில் வருபவர்களை முதலில் பார்க்க மாட்டார். ஆனால், உயர வரிசையில் பார்ப்பார். அதாவது குள்ளமாக இருப்பவர்களை முதலிலும் அதிக உயரமானவர்-களைக் கடைசியிலும் பார்ப்பார். காட்டின் சகல உயிரினங்களும் இவரிடம் மருத்துவம் பார்க்க வந்துவிடும். மருத்துவம் மட்டுமல்ல. தேவையெனில் எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார். உயர வரிசை என்பதால் நம்முடைய நண்பன் மர்மரா கடைசியாக நின்றுகொண்டிருந்தார். நண்பன் மர்மரா ஓர் ஒட்டகச்சிவிங்கி. நீண்ட வரிசையில் நின்று நின்று அவர் கால்கள் வலித்தன. நடு இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் ரமணா டாக்டரைச் சந்திக்க முடிந்தது. அவரே அன்றைய கடைசி நோயாளி. நோயாளி என்றால் ரமணா டாக்டருக்குக் கோபம் வந்துவிடும். ‘கடைசி விருந்தினர்’ அப்படித்தான் சொல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். மர்மராவிற்கு மருத்துவம் பார்க்க மரக்கிளையின் மீது பறந்து சென்றார் ஆந்தையார்.
“என்ன பிரச்சனை?’’ என்று கேட்டதற்கு, “தினமும் காலையில் தலையில் அடிபட்டு விடுகிறது அதனால் தலை வலிக்கிறது. எனக்கு எதாச்சும் மருந்து கொடுங்கள்’’ என்றது ஒட்டகச்சிவிங்கி மர்மரா.
”தலையை எதில் இடித்துக் கொள்கின்றாய் நண்பா?” என்று கேட்ட ஆந்தைக்கு அந்தப் பதில் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், மர்மரா இடித்துக்கொள்வது மேகத்தின் மீது. அந்தக் காலத்தில் எல்லாம் மேகங்கள், இரவில் மரத்தின் மீது உறங்கிவிட்டு விடியற்காலையில் கிளம்பி வானத்தில் பறக்கும். (ச்சும்மனாச்சும் கதைக்கு) அப்படி மேகங்கள் மரத்தைவிட்டுக் கிளம்பும் அதே நேரத்தில் மர்மராவும் தூங்கி எழுவதால் ‘டமால்’ என்று தலையில் இடித்துவிட்டு மேகம் மேலே போய்விடும். தலையைத் தேய்த்து விடக்கூட யாரும் இல்லாமல் ஒட்டகச்சிவிங்கி அல்லாடும். அதனால்தான் தலைவலி. டாக்டர் ரம்ணா யோசித்தது. இதற்கு மருந்து தீர்வல்ல. நிரந்தரமாகத் தீர்வு வேண்டும் என நினைத்தது. மறுநாள் காட்டின் பஞ்சாயத்துக் கூட்டத்திற்கு வா எனச் சொல்லிவிட்டு மருத்துவமனையை மூடியது.
பஞ்சாயத்துக் கூட்டத்தில் டாக்டர் ரம்ணாவிற்கு தனி மதிப்பு உண்டு. ரம்ணா சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். மர்மராவின் பிரச்சனையைச் சொன்னார் ரம்ணா. கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
“டாக்டர் அய்யா, நீங்க ஏன் மர்மராவிற்கு ஒரு மாத்திரை கொடுத்து அதைக் குள்ளமாக்கக் கூடாது? அவ்ளோ பெரிய கழுத்தைப் பார்க்கவே எனக்குச் சோர்வாகிடுது” என்றார் குள்ள நரி.
“யாருப்பா அது குள்ள நரியா? உனக்கு மாத்திரை கொடுத்து, யானை மாதிரி மாத்திடவா? அவங்கவங்க இருக்கிற மாதிரி தானே இருக்கணும்” என வெடுக்கென்று பேசினார் ஆந்தையார். கக்கபுக்க புக்க கக்கவென பஞ்சாயத்தே சிரித்தது.
“மர்மரா, நீ ஏம்பா அவ்ளோ சீக்கிரம் எழுந்துக்கற?” எனக் கொட்டாவி விட்டபடியே கேட்டார் கரடியார்.
கூட்டத்தில் யாரும் பதில் சொல்லும் முன்பே பஞ்சாயத்தில் கூடியிருந்த அனைவரும் சிரித்தனர். “ஏன்பா ஒருத்தன் சுறுசுறுப்பா இருந்தா புடிக்காதே” என்றார் டாக்டர்.
“மர்மரா, நீ நல்லா கதைவிட்ற. எங்காச்சும் மேகம் இடிச்சு தலை வலிக்குமா? அது அவ்வளவு கனமாவா இருக்கும்?” என்றது- வரிக்குதிரை.
“மேல போயிட்டா அப்படி இருக்கும். இரவு ஒட்டுமொத்த மேகமும் ஒன்னா கூடி சின்னதா கனமா மாறிடும். இரவுல தூங்கிட்டு காலைல எழுந்து மேல போகப்போக தனித்தனியா பிரிஞ்சிடும்” என்று மர்மரா விளக்கியது.
கடைசியாக அந்த மேகத்தை மிரட்டி மரத்தில் இருந்து அகற்றுவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி முதலில் கரடி செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கரடி எழுந்து பேசுவதற்கு முன்னர் மேகம் அன்றைய தினம் கிளம்பிவிட்டது. அடுத்த நாள் காட்டெருமை சென்று “யே மேகமே, இங்கிருந்து ஓடிவிடு” என்றது. மேகம் கண்டுகொள்ளாமல் அன்று இரவு மீண்டும் மரத்தில் வந்து தங்கியது. மறுநாள் புலியொன்று “ஏ வெள்ளை மேகமே, ஒழுங்கு மரியாதையா இடத்தைக் காலி செய்” என்றது. மேகம் கண்டுகொள்ளவில்லை. அடுத்த நாள் சிங்கம் சென்று “உனக்குச் சொன்னாப் புரியாதா மேகமே. உடனே கிளம்பு. திரும்பி வராதே” என்று கர்ஜித்தது. மேகம் எதுவும் நடக்காததுபோலவே மீண்டும் வந்தது. ஒரு மாதம் முழுவதும், ஒவ்வொரு விலங்காகச் சென்று மிரட்டி வந்தது. யார் சொல்லியும் கேட்கவே இல்லை. பஞ்சாயத்தில் இது குறித்துப் பேசும்போது ஒரு முள்ளம்பன்றி நான் போய்ப் பேசுகின்றேன் என்றது. எல்லோருமே சிரித்தார்கள். யானை, புலி, சிங்கம், கரடி, சிறுத்தை, காண்டாமிருகம் எல்லாருமே சொல்லிட்டோம். முள்ளம்பன்றி நீ சொன்னா கேட்டுக்கப்போகுதா என்று கைக்கொட்டிச் சிரித்தார்கள். “சரி, போ! போய் சொல்லிப் பாரு’’ என்றார்கள்.
மறுநாள் காலை முள்ளம்பன்றி சென்றார். அன்று மாலை மேகம் வரவே இல்லை. எல்லோருக்குமே ஆச்சரியம். மர்மராவிற்கு மகிழ்ச்சி. டாக்டர் ரம்ணாவிற்கும் முள்ளம்-பன்றிக்கும் நன்றி சொல்லி வாழ்த்து அட்டையை வரைந்தது நம்ம நண்பன். ஆனால், பஞ்சாயத்து மக்களுக்கு ஆச்சரியம் குறையவே இல்லை. அடுத்த கூட்டத்தில் விசாரித்தார்கள்.
“என்ன சொல்லி மிரட்டிவெச்ச முள்ளம்-பன்றியே? நீ கீறிவிடுவேன்னு சொன்னியா?” என்று கிண்டலாகக் கேட்டார் கரடியார்.
“இல்லை. அதனிடம் சென்று ‘அன்பான மேகமே. உன்னால் ஒரு விலங்கு தினமும் சிரமப்படுகின்றது. நீ மற்றவர்களுக்குச் சிரமமாக இருக்கலாமா? அதோ அந்த மலைமீது சென்று உறங்கிக்கொள். யாருக்குமே தொந்தரவு இருக்காது என்றேன்’’ என்றது. கூட்டமே அமைதியாகக் கேட்டுக்-கொண்டது.
அப்போது வானத்தில் ஒரு பேச்சுக்குரல் கேட்டது. யாருடையது? – காகம்? குருவி? மேகம்? பருந்து? இல்லை. சூரியனின் பேச்சுக்குரல் -“ஏ மேகமே… சீக்கிரம் நகர்ந்து போ! சிறுவர்கள் ஆனந்தமாக விளையாடுவதை மறைக்கின்றாய். போ போ போன்னு சொல்றேன் இல்ல” எனக் கூச்சல்.
சரி, சரி, நமக்கெதுக்கு அந்தக்கதை எல்லாம்?