கடவுளும் கரோனாவும்!
‘கடவுளே மனிதனைப் படைத்தான்’ எனயினும்
கருதிடும் மடமையும் இருக்கிறது – அந்தக்
‘கடவுளை மனிதனே படைத்தான்’ எனும்புதுக்
கருத்தினை மனம்கொள மறுக்கிறது!
‘கடவுளை மற’நீ ‘மனிதனை நினை’யெனக்
கற்பித்த மனிதரை மறக்கிறது – அந்தக்
கடவுளின் மகிமையும் ‘கரோனா’ முகமையில்
காற்றினில் மறைந்தே பறக்கிறது!
கடவுளைத் தொழுவதும் மதங்களின் விதிகளில்
கணித்துள முறைகளில் நடக்கிறது – அந்தக்
கடவுளின் தொழுகையும் தொடர்ந்திடா விதமதில்
கரோனா நுழைந்தே தடுக்கிறது!
கடவுளால் முடிந்திடா மருந்தினை மனிதமும்
கண்டிடும் முயற்சிகள் எடுக்கிறது – அந்தக்
கடவுளின் முகந்தனில் கருந்திரை படர்ந்திடக்
காலமும் விரைந்தே கடக்கிறது!
கடவுளே படைத்ததாய்க் கதைப்பவர் உயிரையும்
கரோனா பறித்தே குடிக்கிறது – அந்தக்
கடவுளும் பயத்தினில் கருவறை இருட்டினில்
கதவுகள் அடைத்தே கிடக்கிறது!
கடவுளைப் படைத்ததாம் மனித்தமும்* பதறியும்
கதறியும் பதைத்தே துடிக்கிறது – எந்தக்
கடவுளின் வரத்தினில் கரோனாவைத் துரத்திநம்
கண்ணீரின் பெருக்கைத் துடைக்கிறது?
*மனித்தம் – மனிதம்*
– தளவை இளங்குமரன்,
இலஞ்சி, தென்காசி மாவட்டம்