காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா?
சிகரம்
மதம் என்பது கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கருத்துகள் கூறுவது.
கடவுள் உருவமற்றது, கருணையே வடிவமானது, அது உலகைப் படைத்து இயக்குகிறது என்றும், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது; எல்லாம் அதன் செயல் என்றும் கடவுளை நம்புகின்றவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடவுளுக்கு மனிதனைப் போல உருவம் கற்பித்து, மனைவி, பிள்ளைகள் உண்டு என்று சொல்லி கதையும் கூறுகின்றனர். இவை மேலே சொன்ன கடவுள் பற்றிய கருத்துக்கு எதிரான கருத்துகள்.
கடவுளை நம்பும் எவரும் கடவுளைப் பார்த்ததில்லை. எனவே, உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கடவுளைப் பற்றி வேறு வேறு நம்பிக்கைகள், கருத்துகள் கூறப்பட்டன. அதனால், உலகில் பல மதங்கள் பல பகுதிகளில் உருவாக்கப்பட்டன. எனவே, மதக் கருத்துகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டன.
ஒரு மதம் கடவுளுக்கு உருவம் இல்லை என்றது; மற்றொன்று கடவுள் மனிதனாக வந்து போதித்தார் என்றது.
மக்களை நல்ல வழியில் நடத்த, அன்பை வளர்க்க வேண்டிய மதங்கள் அதற்கு மாறாக நடைமுறையில் செயல்பட்டன.
மதங்களுக்கிடையே மோதல், சண்டை, கொலை. உலகில் மதச் சண்டையால் அழிந்தவர்களே அதிகம்.
இந்தியாவில் சிவனையும், திருமாலையும் வணங்கியவர்கள் மோதிக் கொள்கின்றனர். இந்த இருவரும் சமணர்களை ஆயிரக்கணக்கில் அழித்தனர். சமணர்கள் கட்டிய கோயில்களை இடித்தனர்.
இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமியர் மசூதியை இடித்தனர். சிலுவைப் போர்கள் வரலாற்றில் மத மோதலைக் காட்டுகின்றன. மதத்தைக் காப்பாற்ற, வளர்க்க கொலை வெறி கொண்டு, கூர்வாள் ஏந்தி, குண்டுகள் வெடித்து கொன்று குவிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்குள்ளே இரு பிரிவாக மோதிச் சாகின்றனர்.
அன்பைப் போதித்த புத்தர் கொள்கையை ஏற்றுக் கொண்ட சிங்களர்கள் தமிழ் இனத்தையே கொலை வெறி கொண்டு அழித்தனர்.
புத்தம் உயிர்களை நேசிக்கச் சொன்னது. ஆனால், புத்தரை வணங்கி அவர் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் கொலை வெறி கொண்டு அலைகின்றனர்.
மதம் மக்களிடம் அன்பை வளர்த்திருந்தால், இப்படியெல்லாம் நிகழுமா?
அக்காலத்தில் மட்டுமல்ல; இக்காலத்திலும் மதவெறி கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்கின்றனர் என்றால், மதம் அன்பை, கருணையை, பாசத்தை வளர்த்தது என்று எப்படிக் கூற முடியும்?
மதம் மனித நேயத்தை, மனிதப் பற்றை, உயிர் நேயத்தை, உறவை, ஒற்றுமையை வளர்த்திருந்தால் மத மோதல்களே வரக் கூடாதே! மதம் பாசத்தை வளர்த்திருந்தால் எல்லா மதத்தவரும் உடன் பிறந்தவர்களாய் ஒன்றுபட்டல்லவா வாழ்வர்? மதம் கருணையை வளர்த்திருந்தால் மனித ஒற்றுமை ஓங்கி வளர்ந்திருக்குமே! ஆனால், இவையெல்லாம் வளரவில்லை.
எனவே, மதம் மனிதப் பற்றை வளர்க்கவில்லை; மத வெறியை, மத மோதலை, மத வெறியைத்தான் வளர்த்திருக்கிறது.
பகுத்தறிவுச் சிந்தனை தான் உலகில் மனித நேயத்தை வளர்க்கிறது. மதவாத மோதல்களை ஒழிக்கப் போராடுகிறது. நவீன உலகைப் படைக்கிறது.