அசத்தும் அறிவியல் : மேஜிக் பால்
அறிவரசன்
தேவையான பொருள்கள்:
* பால்
* உணவு நிறமி (கேசரி தூள் போல) அல்லது ஸ்கெட்ச் பேனாவின் நிறமியை கெட்டியாகத் தண்ணீரில் கலந்து, அதில் சில துளிகளைப் பயன்படுத்தலாம்.
* பாத்திரம் கழுவும் சோப் / டிஷ் சோப் ஆயில்
* பஞ்சு சுற்றப்பட்ட குச்சி (EarBuds)
பரிசோதனை செய்வது எப்படி?
1. ஆழமற்ற ஒரு வாணலியில் மெல்லிய படலமாக சிறிதளவு பால் ஊற்றவும்.
2. பாலில் உணவு நிறமித் துளிகள் சேர்க்க வேண்டும்.
3. பின்னர் பஞ்சு சுற்றப்பட்டு குச்சியை எடுத்து பாத்திரம் கழுசும் சோப் ஆயிலில் முக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
4. பின்னர் அக் குச்சியை பாலில் வைக்கவும். அதை ஓர் இடத்தில் அழுத்தி சுமார் 15 விநாடிகள் அதிலேயே வைத்திருங்கள்
என்ன நடக்கிறது?
பாலில் உள்ள வண்ணங்கள் சிதறி ஓடுவதைக் காணலாம்.
ஏன் நடக்கிறது?
பால் பெரும்பாலும் நீரால் ஆனது. அத்துடன் வைட்டமின்களும், தாதுக்களும், புரதங்களும் சிறிதளவு கொழுப்பும் கலந்த கரைசலாகும். பாலில் உள்ள கொழுப்புகளும் புரதங்களும், புதிதாகச் சேர்க்கப்படும் சோப் துளிகளால் எளிதில் புறத் தூண்டலுக்கு (EarBuds) உள்ளாகக் கூடியவை .
பாலில் சோப் துளி பட்டதும், இவ்வாறு வண்ணச் சிதறல் நடக்கும் ரகசியம் அந்தச் சிறிய துளி சோப்பின் வேதிப் பொருள்களில் உள்ளது.
சோப்பில் உள்ள மூலக் கூறுகளின் கட்டமைப்பை (Molecular Structure) மைசேல்ஸ் (Micelles) என்கிறோம். இந்த மைசேல்சில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று நீரில் இருந்து விலகக் கூடிய தன்மை கொண்ட (Water fearing) ஹைட்ரோ போபிக் எனப்படும் துருவமற்ற பகுதி. மற்றொன்று நீரை ஈர்க்கும் தன்மை கொண்ட (Water loving) ஹைட்ரோ ஃபிலிக் எனப்படும் துருவ மேற்பரப்பு.
பாலில் இருக்கும் கொழுப்பு ஒரு ஹைட்ரோபோபிக் மட்டுமே. எனவே அது தண்ணீரில் கரைவதில்லை. எனவே, சோப் துளியைச் சேர்க்கும் போது சோப்பில் உள்ள ஹைட்ரோபோபிக், பாலில் உள்ள ஹைட்ரோ போபிக்குடன் சேர்ந்துவிடும். சோப்பில் உள்ள ஹைட்ரோஃபிலிக் பாலில் உள்ள தண்ணீருடன் சேர்ந்துவிடும்.
சோப்பின் மூலக்கூறுகள் பாலில் ஊள்ள கொழுப்பு மூலக் கூறுகளுடன் சேர, சுற்றிச் சுற்றி ஓடுகையில், அந்தக் கொழுப்பு வளைந்து, உருண்டு, திருப்பம் பெற்று அனைத்துத் திசைகளிலும் ஹைட்ரோபோபிக் மூலக்கூறுகளுடன் ஒன்றாக இணைகின்றன. இண்ட கொழுப்பு மூலக்கூறுகள் ஓடுவது ஜிம்னாஸ்டிக்ஸ் போன்று காட்சி அளிக்கும். சரி, இதில் இந்த உணவு நிறமிகளின் பங்கு என்ன? அவற்றை எதற்குச் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? பாலின் வெண்மை நிறத்தில், மேலே சொன்ன வேதி விளைவுகளை நாம் பார்க்க இயலாது. அதனால் தான் உணவு நிறமிகளையோ, அல்லது ஸ்கெட்ச் பேனாவின் வண்ணத் துளிகளையோ பயன்படுத்துகிறோம். பாலின் ஹைட்ரோபோபிக், சோப்பின் ஹைட்ரோபோபிக்கால் தேடிச்செல்லப்படுவதைக் காணவே இது பயன்படுகிறது. நடக்கும் வேதிவினைக்கும், நிறமிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை – நமக்கு வண்ண வேடிக்கை காட்டுவதைத் தவிர!
சோப்பு பாலுடன் சமமாகக் கலந்தவுடன் இந்தச் செயல் மெல்ல மெல்ல குறைந்து இறுதியில் நின்றுவிடும். அதிகக் கொழுப்பு உள்ள பாலில் இந்த வண்ண வேடிக்கை அதிகம் நடக்கும்.
பாலில் மேலும் கொழுப்பு இருக்கிறதா என்று பார்க்க, இன்னும் ஒரு துளி சோப் சேர்க்க முயற்சிக்கலாம். அப்படிச் செய்தால், முதல் முறை நடந்த நடனத்தில் ஒரு கூட்டாளரைக் (ஹைட்ரோ போபிக்) கண்டுபிடிக்காத கொழுப்பு மூலக்கூறுகள் பாலில் இருப்பதை நாம் காணலாம். செயல்முறையை மீண்டும் தொடங்க மற்றொரு துளி சோப்பைச் சேர்க்கவும்.