உறுப்புகளால் உயர்க!
கண்கள் இரண்டும் இருக்கையிலே
கல்வி நூல்கள் படித்திடலாம்;
எண்ணும் எழுத்தும் கற்றிட்டால்
என்றும் உலகை வென்றிடலாம்!
காதி ரண்டின் வழியாய்நீ
*காசி னியினை வென்றோரின்
நீதி யாவும் கேட்டிடலாம்;
நீயும் உலகை வென்றிடலாம்!
நாவால் உரைக்கும் நல்லுரையால்
நற்சிந் தனையைப் பரப்பிடலாம்;
மேவாப் புகழின் மேதையென
மெய்யாய் உலகை வென்றிடலாம்!
கரங்கள் இரண்டும் இருக்கையில்நீ
கடின மாக உழைத்திடலாம்;
இரந்தே உண்டு வாழாமல்
இங்கே எதையும் வென்றிடலாம்!
இரண்டு கால்கள் இருப்பதனால்
எங்கெங் கும்நீ எட்டிடலாம்;
மரம்போல் நின்று மடியாமல்
மண்ணைக் கடந்தும் வென்றிடலாம்!
தோள்கள் இரண்டும் இருக்கையிலே
துணிவாய்ச் சுமையைச் சுமந்திடலாம்;
தூள்தூள் ஆகும் துன்பங்கள்;
தோல்வி யின்றி வாழ்ந்திடலாம்!
தலையின் உள்ளே அறிவிருக்க
தரையை வெல்லப் பயமெதற்கு?
மலையைக் கூடப் பொடித்தேநீ
மண்ணை வென்று காட்டிடலாம்!
இதயத் துள்ளே மனிதமுடன்
எல்லா உறுப்பும் செயல்பட்டால்
உதய மாகும் புதுவிடியல்;
உனதே வெற்றிச் சாதனைகள்!
*காசினி – உலகம்
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை