பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
எல்லோரும் நலம் தானே!
நெடுநாளைக்குப் பிறகு உங்களில் பலரை உங்கள் ஊரிலேயே வந்து சந்தித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. உலகைச் சூழ்ந்த கொரோனா கொடுந்தொற்று காரணமாக உங்களையெல்லாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இழந்திருந்தேன்.
இப்போது பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதாலும், நோய்த் தொற்று வேகம் குறைந்திருப்பதாலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கூட்டங்களை நடத்திட அனுமதி கிடைத்திருப்பதாலும், காணொலி அரங்குகளிலிருந்து, நேரில் சந்திக்கும் சூழலைப் பாய்ந்தோடி ஏற்படுத்திக் கொண்டேன்.
உங்களுக்கும் மெல்ல மெல்ல பள்ளிகள் திறந்து-விட்டன. இந்த நவம்பர் தொடக்கத்திலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் கூட பள்ளிகள் திறக்கலாம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பையும் நமது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார் அல்லவா! நீங்களும் கவனமாக எச்சரிக்கையாக இருந்து இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
முகக்கவசம் தரிக்க, கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள, தேவையான தனிநபர் இடைவெளியைப் பேண மறவாதீர்!
அதே நேரம் அறிவையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அண்ட வரும் அறியாமை வைரஸ்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பகுத்தறிவு என்னும் தடுப்பூசி அவசியம்.
ஆபத்து எப்போதும் அலங்கோலமாக வருவதில்லை; பல சமயங்களில் அலங்காரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் வரும். மூடநம்பிக்கைகள் என்னும் நஞ்சு, கொண்டாட்டம் என்னும் இனிப்புப் பூச்சோடு வரும். நாம் இனிப்பென்று அவற்றைக் கொள்ளத் தொடங்கினால், உள்ளிருக்கும் நஞ்சு அதன் வேலையைக் காட்டும்.
நம் நாட்டில் தான் எத்தனைப் பண்டிகைகள்? ஒவ்வொரு மதமும் ஏராளமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றன. அவற்றில் அறிவுக்கு உகந்தவை எவை இருக்கின்றன?
இவ்வளவு காலம் சரஸ்வதி பூஜை கொண்டாடிய நாட்டில் தானே, கல்வி வாசனை அறியாதவர்களாகவே பலர் அழுத்தப்பட்டிருந்தனர்? பெரியார் தாத்தா போன்ற நம் தாத்தா பாட்டிகள் வந்து போராடவில்லையானால், பலருக்கு கல்வியே கிடைத்திருக்காதே?
பல்லாயிரக்கணக்கான கருவிகள், கண்டுபிடிப்பு-களைச் செய்த வெளிநாடுகளில் ஆயுத பூஜை உண்டா? நாம் யோசிக்க வேண்டாமா?
எந்தப் பண்டிகையின் கதையாவது அறிவுக்கு பொருந்துகிறதா? அன்பை வளர்க்கிறதா? சூழ்ச்சியால் அவனைக் கொன்றான்; இவனைக் கொன்றான் என்பது நற்குணத்தை வளர்ப்பதா?
தீபாவளி என்னும் பெயரில் காசைக் கரியாக்கும் பண்டிகை ஒன்று வரவிருக்கிறது. அதுவும் இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் பொருளாதார ரீதியாக அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா?
காசு மட்டுமா பூமியே அல்லவா கரியாகிறது. பட்டாசுகள் ஏற்படுத்தும் காற்று மாசு எத்தனை கொடுமையானது என்பதை இப்போது அதிகமாக புதுதில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வசிப்போர் உணர்கின்றனரே! இன்று அவர்களுக்கு _ நாளை நமக்கு! எல்லாமே பூமிக்கும் மனிதர்களுக்கும் நஞ்சு தானே!
ஒரே நாளில் பல லட்சக்கணக்கான டன் உணவுப் பொருள்களை வீணாக்குவதா விழா? சிந்திக்க வேண்டாமா பிஞ்சுகளே!
இந்த தீபாவளிப் பண்டிகைக்குச் சொல்லப்படும் கதை எப்படிப்பட்டது? அது எவ்வளவு அறிவுக்கொவ்வாத பண்டிகை என்பதை பெரியார் தாத்தா எளிமையான சில கேள்விகள் மூலமே வெளிப்படுத்திவிட்டார்களே!
* பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?
* அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்?
* ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு, பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது?
* வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?”
இந்த அறிவுப்பூர்வமான வினாக்களுக்கு இதுவரை யாராவது விடை சொல்லியிருக்-கிறார்களா? பெரியார் தாத்தா கேட்ட கேள்விகளுக்கு எவரும் விடை சொன்ன-தில்லையே! காரணம், அக் கேள்விகள் பகுத்தறிவின் அடிப்படையிலானவை அல்லவா?
எனவே தான் இத்தகைய மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்கிறோம்.
கொண்டாட்டங்கள் கூடாது; விழாக்கள் கூடாது என்பதல்ல நாம் சொல்ல வருவது!
கொண்டாட்டங்களும், விழாக்களும் பகுத்தறிவுக்கு உகந்தவையாக, அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டாமா? விளைச்சலை, உழவை, இயற்கையைக் கொண்டாடும் பொங்கல் போன்ற நன்றித் திருவிழா இருக்கலாமே! அறிவியலைச் சொல்லும் விழாக்கள், நட்பை, அன்பை, காதலைக் கொண்டாடும் விழாக்கள், குடும்பங்கள், நண்பர்கள் ஒன்று சேரும் மகிழ்வுத் திருவிழாக்கள் அவரவர் வசதிக்கேற்ற நாள்களில் கொண்டாடப்படலாம்.
இயற்கையின் வியப்புகள் கொண்டாடப்படலாம். அவற்றிற்கான காரணங்களை அந்தச் சமயங்களில் அறிவியல் பார்வையோடு அறிந்து கொள்ள போட்டிகள் நடத்தப்படலாம்.
ஞீமீக்ஷீஷீ ஷிலீணீபீஷீஷ் ஞிணீஹ் (நிழல் இல்லாத நாள்) போன்றவற்றைக் கொண்டாடினால், அவற்றின் மூலம் புவியின் சுழற்சி, சூரியக் குடும்பத்தின் அமைப்பு போன்றவற்றை அறியலாம். மருத்துவர்களுக்கு விழா நடத்தி, நம் உடல் நலன் பற்றிய அறிவு பெறலாம். விளையாட்டுத் திருவிழாக்களை நடத்தலாம்.
கொண்டாட்டங்களில், விழாக்களில் நன்றி உணர்வும், மனிதநேயமும், அறிவியல் சிந்தனையும், இயற்கை உணர்ச்சியும் பெருக வேண்டுமல்லவா?
மதமாகப் பிரிந்து நில்லாமல், மனிதர்களாக ஒன்றிணைந்து இத்தகைய விழாக்களை நாம் கொண்டாட வேண்டாமா? நம் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதில் பெருமைப்பட வேண்டியவற்றிற்கு மகிழவும், நமக்காக உழைத்தவர்களை, போராடியவர்களை நினைவுகூரவும் தானே விழாக்கள் வேண்டும்!
உலகம் கொண்டாடும் பொதுமைத் திருவிழாக்கள், அறிவுப் பெருவிழாக்களை நாமும் முன்னெடுப்போம்! பண்பாடு என்பது பழைமையில் இல்லை; வாழும் முறைமையில் இருக்கிறது. நம் பண்பாடு என்பது அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் பண்பாடு! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லோரையும் உறவினர்களாகக் கருதும் பண்பாடு!
அத்தகைய பண்பாட்டை வளர்க்கும் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்! மகிழ்ந்திருப்போம்!
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி