தடுப்பூசி
விழியன்
”ராசு, இங்க என்ன எழுதி இருக்குன்னு படி” என்றார் பாட்டி. “ஆரம்ப சுகாதார மய்யம், வளசரவாக்கம்” என்று வேகமாகப் படித்தான் ஆனந்த். ஆனந்த், பாட்டியின் பேரன். கொரோனா தடுப்பூசி போடுவதாகக் கேள்விப்பட்டு பாட்டி இங்கே வந்திருக்கின்றாள். “இங்கதான் ஊசி போடுறதாச் சொல்லி இருக்காங்க ராசு” என இருவரும் வளாகத்தின் உள்ளே சென்றனர். வளாகத்திற்குள் மூன்று மரங்கள் இருந்தன. இரண்டு போலிஸ் வாகனங்கள் இருந்தன. சில கார்களும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் அய்ந்து ஆட்டோக்களும் இருந்தன. மணி பத்தரைதான் ஆகின்றது. ஆனால் வெயிலோ வெயில். ஏப்ரல் மாதம் துவங்கி இரண்டு நாள்தான் ஆகின்றது. சேலையின் ஒரு பகுதியால் ஆனந்தின் தலையை மூடியபடிதான் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“ஆயா, அங்க தான் ஊசி போடுறாங்க போல, இங்கிலீஷ்ல எழுதி இருக்கு” என்று ஒரு திசையைக் காட்டினான். ”உனக்கு இங்கிலீசு எல்லாம் படிக்க வருமா ராசு” என மகிழ்ந்தாள். ராசு என்கின்ற ஆனந்த் ஆறாம் வகுப்பு பயில்கின்றான். ஆறாம் வகுப்பு என்று சொல்லிவிட்டாலும் தொடக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளிக்கு ஒரே ஒரு நாள்தான் சென்று இருக்கின்றான். தொடக்கப்பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும், இல்லையா? நடுநிலைப்பள்ளி இவர்கள் வீட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் தூரம். பெயரை நடுநிலைப்பள்ளியில் பதிவு செய்ததோடு சரி. அந்தப் பக்கம்கூட இன்னும் போகவில்லை. இதோ இந்த கோவிட்-19ஆமே, அதனால் பள்ளிகளைத் திறக்கவே இல்லை.
“மாஸ்க்கை போடுங்க ரெண்டு பேரும். எதுக்கு வந்திருக்கீங்க?” என்று ஒரு வயதானவர் இருவரையும் தடுத்தார். நீல நிற ஆடை அணிந்து இருந்தார்.
“தடுப்பூசி போட்றாங்கன்னு சொன்னாங்க”.
“பாட்டி, இதோ உள்ளதான் போடுறாங்க. ஆனா இதுக்கு மேல குட்டிப் பசங்க எல்லாம் உள்ள போகக்கூடாது. தம்பி நீ இங்கயே இரு. மாஸ்க் போடு” என்றார் அவர். தன் இடுப்பில் செருகி இருந்த மாஸ்க்கில் ஒன்றை ஆனந்திடம் கொடுத்தாள்; தானும் போட்டுக்கொண்டாள். படி ஏறியதும் வெள்ளையுடையில் இருந்தவர் ஏதோ சீட்டுக் கொடுக்க, உள்ளே சென்றுவிட்டார் பாட்டி. ஆனந்த் ஒரு ப்ளாஸ்டிக் இருக்கையில் காப்பாளர் தாத்தாவின் அருகே அமர்ந்துகொண்டான். அவருக்கு முன்பற்கள் நான்கினைக் காணவில்லை. பக்கத்தில் அமர ஆள் வந்ததும் புத்தம் புதிய முகக்கவசம் அணிந்து கொண்டார்.
“என்னடா ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்காப் போறியா?”
“ஆமா தாத்தா. ஆறாப்பு படிக்கிறேன். ஒருவருஷமா போவல”
“ஒழுங்காப்போய் படிச்சிடு ராசா. சீக்கிரம் ஸ்கூல் திறந்திடும்”
அவன் குடும்பம் பற்றி விசாரித்தார். அய்ந்தாவது நிமிடத்தில் பாட்டி வெளியே வந்துவிட்டார். “என்ன பாட்டி, ஊசி போட்டுக்கிட்டியா?” என்றான். “கார்டு வேணுமாம் ராசு. நான் எடுத்து வந்த சீட்டு செல்லாதாம்” என்றாள் பாட்டி. என்ன சீட்டு என்று பார்த்தார் அந்தத் தாத்தா. ஓட்டுப்போட கட்சிகள் கொடுக்கும் துண்டுச் சீட்டு. “ஆதார் கார்டு இருக்கா?’’ என விசாரித்தார் தாத்தா. “இருக்கு’’ என்றார் பாட்டி. “அப்ப போயிட்டு நாளைக்கு எடுத்துட்டு வா’’ என்றார். ஆனால், மற்றொரு நாள் என்றால் முடியாது. தன் வேலை பாதிக்கும். ஆனந்த், “வீட்டில் எங்கே இருக்கு?’’ எனக் கேட்டான். தான் விரைவாக ஓடி எடுத்து வருவதாகச் சொல்லி, பாட்டியை அமர வைத்துவிட்டுச் சென்றான். அரைமணி நேரத்தில் ஓடி வந்தான் வியர்க்க வியர்க்க! திரும்பவும் பாட்டி உள்ளே சென்றார்.
இப்போது கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. “தாத்தா, எத்தனை வருஷமா இங்க இருக்க?” என்று பேச ஆரம்பித்தான் ஆனந்த். அவனுக்கு இவர் வேலை பிடித்து இருந்தது. ஹாயாக உட்கார்ந்துகொள்ளலாம், வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்தான் ஆனந்த். வருபவர்கள் எல்லோரும் இவரைத் தாண்டித்தான் செல்லவேண்டும். சிலரைத் திருப்பி அனுப்பினார். “உங்க வயசுக்கு எல்லாம் ஊசி கிடையாது போங்க” என அனுப்பிவிட்டார். இவர்கிட்டத்தான் மொத்த அதிகாரமும் இருக்கு. “என்ன தாத்தா படிச்சிருக்க?” என்றான். “அந்தக் காலத்துல நாலாப்பு” என்றார் பெருமிதமாக. பாட்டி திரும்ப வெளியே வந்தார். ஒரு சீட்டைக் காண்பித்தார். அதில் அவருடைய வயது, இரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு எல்லாம் எழுதி இருந்தது. “அரை மணி நேரம் ஆகுமாம் ராசு, இப்ப முப்பத்து நாலு போகுதாம். என்னோடது தொண்ணூத்தி நாலாம்” என்றார். “எதிரே இருந்த டீக்கடைக்குப் போவோம்’’ என அழைத்துச் சென்றார். அங்கே டீ குடிக்கச் சென்றாலும் சில்லென்று மோர் இருந்ததைப் பார்த்து ஆனந்துக்கு மோர் மீது மோகம் வந்தது. இரண்டும் பத்து ரூபாய் தான். ஆனால் பாட்டியிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. ஒரு டீ வாங்கி பாதிப்பாதி குடிக்கலாம் என்றார் பாட்டி. ஆனந்திற்கோ அய்ஸ் மோர் குடிக்க வேண்டும்போல இருந்தது. அந்தக் கடைக்காரருக்கு நிலைமை புரிந்தது. முக்கால் க்ளாஸில் அய்ஸ்மோரினை ஆனந்திற்குக் கொடுத்தார். அவன் ஒவ்வொரு துளியாக ரசித்து ரசித்துக் குடித்தான். பாட்டி அந்தக் கட்டடத்தைக் காட்டி “ராசு, அங்க வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் நிக்கிறாரே, அவர் தான் சீட்டுப் போட்டுக் கொடுத்தார். அவர் என்ன படிச்சிருக்கார்ன்னு கேட்டு அதைப் படிச்சிடு தங்கம்” என்றார்.
பாட்டி அரை க்ளாஸ் டீயை மட்டும் குடித்துவிட்டு, காசு கொடுத்துக் கிளம்பிவிட்டார். ஆனந்த் அங்கேயே சில நிமிடங்கள் இருந்தான். ஸ்டைலாக மோர் கலப்பதை ரசித்து ரசித்துப் பார்த்தான். வேண்டியவர்களுக்கு அய்ஸும் சிறிது கொத்தமல்லியும் சிறிது கறிவேப்பிலையும் சேர்த்துக் கொடுத்தார். “அண்ணா, நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டான்.
மீண்டும் காப்பாளர் தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தான். அவர் கண்களாலேயே என்ன, டீ சாப்பிட்டியா என வினவினார். அடச்சே, தாத்தா இங்கே அமர்ந்து இருக்கின்றாரே, இவருக்கு ஏதாச்சும் வாங்கித் தரணுமே எனத் தன்னையே நொந்துகொண்டான். ஒரு வெள்ளைக் கார் உள்ளே மெல்ல நுழைந்தது. ஒரு பெண்மணி ஓட்டி வந்தார். அவர் கட்டடத்திற்குள் வந்ததும் தாத்தா எழுந்து நின்று மாஸ்க்கை சரி செய்து வணக்கம் வைத்தார். திரும்ப உட்கார்ந்துகொண்டார். மதியம் 12:30ஆகிவிட்டது. “தாத்தா, உள்ள போய் பார்த்துட்டு வரட்டா? பாட்டிக்கு ஊசி போட்டிருப்பாங்களா?’ என்றான். கண்டிப்பாக முடியாது என்று தாத்தா சொல்லிவிட்டார். கட்டடத்திற்கு எதிரே சின்னப் பூங்கா இருந்தது. ஆனால் இருக்கும் சூட்டில் எதிலும் அமர முடியாது. அங்கே ஒரு சிகப்பு நிற பெஞ்சில் போய் ஆனந்த் அமர்ந்துகொண்டான். பெஞ்ச் நல்லவேளையாக ஒரு புங்கமர நிழலில் இருந்தது.
திடீரென ஒரு குரல்… “ஆனந்த்….” என்று கேட்டது. அந்த வெள்ளை பேண்ட், சட்டை போட்டுக்கொண்டு சீட்டுக்கொடுத்தவர்தான் சத்தமாக அழைத்தார். பாட்டிக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ என ஓடினான். “நான்தான் அண்ணா ஆனந்த்’’ எனப் பதறியடித்து ஓடினான். “பாண்டியம்மா பேரனா? உள்ள டாக்டர் கூப்பிடுறார் போ” என்று அறையைக் காட்டினார்.
Vaccinating Officer என்று அறையின் வாசலில் இருந்தது. அப்படியே ஒரு மாதிரியான வாசனை. எப்பவாச்சும் பாட்டிக்கு சுரம் அடிக்கும்போது இதே வாசனை தான் வரும். ஒரு இருக்கையில் பாட்டி சிரித்தபடி அமர்ந்து இருந்தார். மருத்துவர் ஒரு பக்கமும் நர்ஸ் ஒரு பக்கமும் இருந்தாங்க. ஊசி போட்டுவிட்டு இருக்காங்க. “நீங்கதான் இவங்ககூட வந்திருக்கீங்களா?” என்றார் மருத்துவர். அவர் முகம் முழுக்க மூடி இருந்தது. எங்கிருந்து குரல் வருகின்றது என்றே முதலில் ஆனந்துக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட ஹெல்மெட் போல மாட்டி இருந்தார். “ஆமா” எனச் சொல்லி தலையாட்டினான்.
“பாட்டிக்கு காது சரியா கேட்கல. அதான் கூட யாராச்சும் வந்திருக்காங்களான்னு கேட்டேன். என்ன படிக்கறீங்க?”
“ஆறாவது சார்” என்றான்.
”வெரிகுட் சேம்பியன். பாட்டியைப் பத்திரமாப் பார்த்துக்க. ஏதாச்சும் பிரச்சனைன்னா இங்க கூட்டிக்கிட்டுவா. ரெண்டு நாள் அசதியா இருக்கும். ஜுரம் அடிக்கலாம். பயப்பட வேணாம், சரியா?”
“ஓக்கே சார்”
”படிச்சு என்னவாகப் போறீங்க” என்றார்.
”சீஃப் (chief) மெடிக்கல் ஆபீசர்” என்றான் உடனடியாக. அந்த அறைக்குப் பக்கத்து அறையின் நுழைவு வாயிலின் மேலே “Chief Medical Officer” என்று எழுதி இருந்தது. அங்கிருந்தவர் இங்கே நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்படியான அறை அமைப்புதான் அது. அவனை அங்கிருந்தே உள்ளே வரச்சொன்னார் அந்தத் தலைமை மருத்துவர். அவர் எதுவுமே செய்யவில்லை. அவர், அவன் கைகளைக் குலுக்கி முதுகில் தட்டிக் கொடுத்தார். ஆனந்துக்கு நிலைகொள்ள முடியாத உற்சாகம். அவர் அறையில் மரத்தில் செதுக்கப்பட்ட வாசகம் ஒன்று இருந்தது…
*பெரிதினும் பெரிது கேள்*