புரியாத புதிர் அல்ல! : ரத்தக் காட்டேரி மரம்
சரவணா ராஜேந்திரன்
உலகில் பல நிகழ்வுகள் இயற்கைக்கு மாறானவையாகத் தோன்றலாம். ஆனால், அறிவியல் பார்வையில் அவை யாவும் இயற்கை நிகழ்வுகள்தாம். ஆனால், அதன் அறிவியல் உண்மையை அறியாமல் அவற்றையெல்லாம் மதம் சார்ந்தவைகளாகப் பார்த்து புனிதமானதாகவும், கடவுள் செயல் என்றும் கூறி பல கட்டுக் கதைகளை விட்டு வருகின்றனர். அவற்றை இன்றும் நம்பும் கூட்டம் உலகெங்கும் உள்ளது. அப்படி புரியாத அறிவியல் புதிர்கள் சிலவற்றின் அறிவியல் உண்மைகளைக் காணலாம்.
சுகுத்திரா டிராகன் மரம்
இந்தோனேசிய தீவுகளில் வளரும் ஒரு மரத்தை சாத்தான் மரம் என்றும், ரத்தக்காட்டேரி மரம் என்றும் கூறுவர். காரணம், அதை வெட்டினால் ரத்தச் சிவப்பில் திரவம் வடியும். நீண்ட நாள்களாக அந்த மரத்தினை ரத்தக்காட்டேரி என்றும், சாத்தான் என்றும் கூறிவந்த நிலையில் அதன் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த மரம் உள்ள பகுதியில் மண்ணில் அதிக இரும்புச்சத்து உள்ளது, அந்த இரும்புச்சத்து மரத்தின் திரவத்தோடு கலப்பதால் ரத்தச்சிவப்பு நிறத்தில் அந்தத் திரவம் வடிகிறது.
நமது தமிழ்நாட்டில் சேலம் உள்ளிட்ட சில மத்திய மாவட்டங்களில் இதே போன்று இரும்புச் சத்துகொண்ட மண்ணில் வளரும் தாவரங்களில் அதன் குணம் உள்ளது. அப்பகுதியில் வளரும் சோளம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதே போல் முருங்கை உள்ளிட்ட மரங்களை வெட்டினால் சிவப்பு நிறத்தில் திரவம் வடியும். இது போலத்தான் உலகின் பல இடங்களில் இதே போன்ற ரத்தச்சிவப்பு நிறத்தில் திரவம் வடியும். ஆனால், இந்தோனேசியத் தீவுகளில் வளரும் மரம் அதன் வடிவம் காரணமாக இரவில் அச்சமூட்டும் வகையில் காணப்படுவதால் இதற்கு டிராகன் மரம் -_ பிசாசு மரம் என்று பெயர் வைத்துவிட்டனர்.
ஹிலியர் ஏரி
(Lake Hillier) என்பது தென் மேற்கு ஆஸ்திரேலியத் தீவுக்கூட்டத்தில், ஒரு தீவில் உள்ள ஏரி ஆகும்.
இந்த ஏரியின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கடற்கரைக்கு சில அடி தூரம் இந்த ஏரி இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, அருகில் நீலநிறத்தில் பரந்துவிரிந்த கடல். அங்கிருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள ஒரு நீர் நிலை இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இதற்கு ஒரு கதை வைத்துள்ளனர். அதாவது கடலரசன் தனது மகனின் மீது கோபம் கொண்டு அவனை தூக்கி வெளியே எறிந்து இனி நீ எங்களோடு வரக்கூடாது என்று சொல்லி அவனை இளஞ்சிவப்பாக்கி-விட்டார். இதனால் அவர், இன்றுவரை கடலோடு கலக்காமல் கடற்கரைக்கு அருகிலேயே உள்ளான். இதுதான் கதை. இது இசைப் பாட்டாகக்கூட ஆஸ்திரேலியப் பள்ளிகளில் பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஏரி உப்புநீரால் ஆனது. அந்த உப்பு நீரில் உள்ள பாக்டீரியங்கள் உப்போடு ஹைட்ரஜனேற்றம் செய்து தங்களுக்கான உணவைத் தயாரிக்கின்றன. மேலும் குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருப்பதால் அந்தப் பாக்டீரியங்கள் சூரிய ஒளியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. அந்தத் தண்ணீரை கையில் எடுத்துப் பார்த்தால் தண்ணீர் நிறமற்று இருப்பதைக் காணலாம். ஏரியையும் தென்முனைப் பெருங்கடலையும் நீண்ட, மெல்லிய கடற்கரை பிரிக்கிறது. ஆனால், இன்றும் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் (Guide) பழங்கதைகளைக் கூறி வருகிறார்கள்.