நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளே, பெற்றோரிடம் சொல்லத் தயங்காதீர்!
சிகரம்
நல்லவர்கள், கெட்டவர்கள், தீயவர்கள், கொடியவர்கள் என்று யாரையும் பார்த்த அளவில் சொல்லிவிட முடியாது. பழகும்போதுதான் தெரியும்.
நாம் மிகவும் நம்பக் கூடியவர்களே நம்மை மோசம் செய்வதும், உறவினர்களே நமக்குக் கேடு செய்வதும், நண்பர்களே துரோகம் செய்வதும் இன்றைக்கு நிறைய நடப்பதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
எனவே, யாரிடமும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது. இதற்கு சில விழிப்புணர்வுகள் பிஞ்சுகளுக்கு வேண்டும்.
நம் பக்கத்துவீட்டு அண்ணன்தானே, நம்ம வீட்டில் குடியிருக்கும் மாமாதானே, நமக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்தானே, நம்மை அழைத்துச் செல்லும் டிரைவர்தானே, நம்மை தூக்கி வளர்த்த உறவினர்தானே என்ற நம்பிக்கையில் எவரையும் முழுமையாய் நம்பிவிடக் கூடாது. அவர்களின் செயல்களை நன்கு கவனிக்க வேண்டும். சிறு சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டும்.
காரணம், சிறு குழந்தைகளிடம்கூட தப்பாக நடக்கின்ற கொடிய நிகழ்வுகள் இப்போது எல்லா இடங்களிலும் அதிகம் நடக்கின்றன.
வீட்டில் தனிமையில் படம் வரைந்து கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை எதிர் வீட்டிலுள்ள 24 வயது ஆண் தூக்கிச் சென்று, சிதைத்துக் கொன்று எரித்த நிகழ்வு இங்கு நடந்துள்ளது. தன்னிடம் படிக்கின்ற மாணவியிடம் தப்பாக நடக்கின்ற ஆசிரியர்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன. பாசத்தோடு கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது போன்று தப்பாக நடந்து கொள்கின்றவர்களில் நண்பர்கள், உறவினர்கள், வயதானவர்கள் என்று எல்லா தரப்பினரும் உண்டு. எனவேதான் எல்லாரிடமும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும், எல்லாரையும் நம்பிவிடக் கூடாது என்று முன்னமே கூறினேன்.
ஆசையாகத் தின்பண்டம் வாங்கித் தருபவர், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தப்பாக நடந்திருக்கிறார். பிள்ளைகளைக் கடத்துகின்றவர்கள்கூட மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றிக் கடத்துகிறார்கள். எனவே, எது உண்மையான பாசம், நட்பு, உறவு, உதவி என்பது உடனே தெரியாது. பழகப் பழகத்தான் தெரியும். எனவே, எல்லாரிடமும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.
பிள்ளைகள் ஒரு நாள் பொழுதில், வாகன ஓட்டியுடன், ஆசிரியர்களுடன், நண்பர்களுடன், உறவினர்களுடன், கடைக்காரர்களுடன், காவல்காரர்களுடன், பொதுமக்களுடன் பக்கத்து வீட்டாருடன் பழகுவார்கள். அவ்வாறு பழகும்போது அவர்களின் செயல்களில், நம்மிடம் நடந்து கொள்கின்ற முறையில், நம்மைத் தொடுகின்ற விதத்தில் கெட்ட நோக்கம் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், அதை அன்றைக்கே வீட்டில் பெற்றோரிடம் சொல்லி விட வேண்டும் அல்லது பெரியவர்களிடம் சொல்லிவிட வேண்டும்.
இருவகைத் தப்புகள்
பிள்ளைகள் மீது இரண்டு வகையிலான தப்புகள், வன்முறைகள், அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
1. நேரடிச் செயல்பாடுகள்:
தப்பாகத் தொடுதல், தொடக்கூடாத இடங்களைத் தொடுதல், கட்டிப் பிடித்தல், முத்தமிடுதல், சீண்டல், உரசுதல் போன்றவை.
2. மறைமுகச் செயல்பாடுகள்:
கண்சாடை காட்டுதல், சைகை செய்தல், இரட்டைப் பொருளில் வார்த்தைகளைக் கூறுதல் போன்றவை.
பிஞ்சுக் குழந்தைகள் இவற்றைத் துல்லியமாக, சரியாகக் கண்டறிய இயலாது. ஆனால், ஏதோ தப்பு செய்கிறார் என்பது நிச்சயம் புரியும். அப்படி அறியும்போதே அன்றைக்கே தங்கள் பெற்றோரிடம் அதுபற்றிக் கூறிவிட வேண்டும்.
பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்களிடம் பிறர் தப்பு செய்கிறார் என்பதை எளிதில் அறிய முடியும். அப்படித் தெரிந்ததும் நடந்த செயலைத் தங்கள் பெற்றோரிடம் காலம் தாழ்த்தாது அன்றைக்கே தெரிவித்துவிட வேண்டும்.
தயக்கம் கூடாது
பெற்றோர் தப்பாக நினைப்பார்களோ, தப்பு செய்தவர்கள் கோபப்படுவார்களோ என்று தயங்கவே கூடாது. இந்தத் தயக்கம்தான் தப்பு செய்கின்றவர்கள் தொடர்ந்து தப்பு செய்வதற்குக் காரணமாகவும், ஊக்குவிப்பாகவும் அமைந்துவிடுகிறது.
பிள்ளைகள் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டால் பெற்றோர் தப்பு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதை உரியவர்களிடம் சொல்லி, மேற்கொண்டு தப்பு நடக்காமல் தடுத்து விடுவர். மாறாக, எதையும் பெற்றோரிடம் சொல்லாமல் மறைப்பதுதான் பின்னாளில் பெரிய பாதிப்பு ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவே, பெற்றோரிடம் அல்லது பெரியவர்களிடம் உடனே தப்பான செயல்பற்றி பிள்ளைகள் தெரிவித்துவிட வேண்டும். எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் வாழ வேண்டும். எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் பிள்ளைகள் செயல்பட வேண்டும்.
பாடத் திட்டம்
பிஞ்சுப் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி ஆசிரியர்களும், பெற்றோர்களும் விளக்கிச் சொல்ல வேண்டும். உடற்கூறுகள் பற்றிய பாடங்களைத் தெளிவாகக் கற்பிக்க வேண்டும்.
வயது கூடக் கூட உறுப்புகளின் மாற்றம், உணர்வுகளின் மாற்றம், வளர்ச்சி பற்றியும், அப்போது எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும், எப்படி நடக்கக் கூடாது, எவற்றைச் செய்யக் கூடாது என்பவற்றை வளர் இளம் பிள்ளைகளின பாடங்களிலே கற்பிக்க வேண்டும். பெற்றோர் சொல்லத் தயங்குகின்ற செய்திகளை ஆசிரியர்கள்தான் சொல்லித்தர வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஆண்களுக்குத் தனியே, பெண்களுக்குத் தனியே ஆண், பெண் மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு, பாலுணர்வு பற்றி விளக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு உடலுறுப்புத் தூய்மை பற்றி விளக்க வேண்டும். தப்பு நடக்கும்போது, குற்றம் செய்யப்படும்போது தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் பாடப் புத்தகங்களிலே உள்ளது. அதற்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.