ஓரு பக்கக் கதை : சரியாச்சா? தெரியலையே!
பா.கேழினி
முன்னொரு காலத்தில் ஒரு சிற்றூரில் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசதி மிகுந்தவராகவும் இருந்தார்.
ஆனால், கண் பார்வை அவருக்கு மங்கலான பார்வை. அதைக் குணமாக்கி நல்ல பார்வை பெற விரும்பினார்.
அதற்காக ஒரு மருத்துவரை வரவழைத்து குறையைக் குணமாக்க வேண்டினார். குறை நீங்கிவிட்டால் நல்ல சம்பளமும், ஒரு பரிசும் தருவதாகக் கூறினார். அப்படிக் குணமாகாவிடில் எதுவும் தருவதில்லை என்றும் கூறினார்.
மருத்துவர் கண் சிகிச்சையில் மிகவும் தேர்ந்தவராகையால் பாட்டியின் நிபந்தனையை ஏற்றார். மருத்துவர் நாள்தோறும் பாட்டி வீட்டுக்கு வந்து மருந்து போட்டுச் சென்றார்.
வாரக் கணக்கில் மருத்துவர் மருந்து போட்டுச் சென்றதில் பாட்டிக்குப் பார்வை தெரிய ஆரம்பித்தது. மீண்டும் எல்லோரையும் போல பார்க்க முடிந்தது.
மருத்துவர் நாள்தோறும் மருந்து போட்டுச் செல்கையில், பாட்டியின் பார்வைக் குறையைப் பயன்படுத்தி அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச் சென்றார்.
நல்ல பார்வை பெற்ற பாட்டி வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களைக் காணாததால் திடுக்கிட்டார்.
கண் பார்வையைக் குணமாக்கிய மருத்துவர் பாட்டியிடம் ஊதியத்தையும் நல்ல பரிசையும் கேட்டார்.
“என் பார்வை நன்கு தெரியவில்லை. என் வீட்டில் நான் வைத்திருந்த விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் எதுவும் தர முடியாது’’ என்று கூறினார் பாட்டி.
மருத்துவர் பஞ்சாயத்துக்குச் சென்றார். பாட்டி பஞ்சாயத்தில், “மருத்துவர் கூறுவது உண்மைதான். கண்கள் குணமானால் ஊதியமும் பரிசும் தருவதாகக் கூறினேன்.
மருத்துவம் செய்யத் தொடங்கும் முன் என் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் இருந்தன. அவற்றை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. ஆகையால், என் கண்கள் குணமாகவும் இல்லை. ஒப்பந்தப்படி நான் எதுவும் அவருக்குக் கொடுக்க வேண்டியதுமில்லை” என்றார்.
கண் மருத்துவருக்கு பஞ்சாயத்து திருடன் பட்டம் சுமத்தித் தீர்ப்பு வழங்கியது.
அவர் திருடிய பொருள்கள் அவருக்குரியன அல்ல. பாட்டியின் பொருள்களாக இருப்பதால் அதுவே அவரின் ஊதியமும் பரிசும் ஆகும் என்றனர் பஞ்சாயத்தார். பாட்டியும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாள்.
தீர்ப்பு சரியா? நீங்களும் கருத்துச் சொல்லலாம்.