விளையும் பயிர்
1903 ஆம் ஆண்டில் வாழ்ந்த லண்டன் மக்கள் தங்கள் மாலைப் பொழுதினை நாடகம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். பகல் முழுவதும் உழைத்த மக்கள் தங்கள் சோர்வைப் போக்கிக் கொள்ள கூட்டம் கூட்டமாக நாடகக் கொட்டகைக்குச் செல்வர். பல நாடகக் குழுக்கள் இருந்த காலம் அது.
சிறுவன் ஒருவன் தினமும் நாடக ஒத்திகை நடைபெறும் கொட்டகைக்கு வந்து அங்கு நடைபெறும் ஒத்திகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கு கொடுக்கப்படும் சின்னச் சின்ன வேலைகளையும் செய்து வந்தான். ஒருநாள் அங்கு ஷெர்லாக்ஹோம்ஸ் என்ற நாடகத்தின் கடைசிநாள் ஒத்திகை நடைபெற்றது. மறுநாள் நாடகம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.
அந்த நாடகத்தில் வேலைக்காரனாக நடித்த சிறுவனுக்குத் திடீரென காய்ச்சல் வந்துவிட்டது. நாடகத்தை வேறு நாள் மாற்ற முடியாத நிலை. அந்தப் பாத்திரம் பேசும் வசனமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எனவே, உடனே வேறு யாருக்குப் பயிற்சி கொடுப்பது என்று அனைவரும் குழம்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வழக்கம்போல் வந்திருந்த சிறுவனைப் பார்த்ததும் தம்பி நாடகத்தில் ஒரு சிறு வேடம் இருக்கிறது, நடிக்கிறாயா? என்று கேட்டனர். அதற்காகவே காத்திருந்ததுபோல் எஸ் சார் என்றான் சிறுவன். தினமும் ஒத்திகை நடந்தபோது ஆர்வத்துடன் பார்த்ததினால் வசனங்கள் சிறுவனின் மனதில் நன்றாகவே பதிந்திருந்தன. நாடகம் நல்ல முறையில் அரங்கேறியது. நாடகம் பார்க்க வந்திருந்த அனைவரின் கவனத்தையும் தன் பேச்சாற்றலால் – நடிப்பாற்றலால் ஈர்த்தான். நிறைய நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சிறுவனைத் தேடி வர ஆரம்பித்தன. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அந்தச் சிறுவனைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கினார்கள்.. பின்னாளில் திரைப்படங்களில் நடித்ததோடு 80க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, 20க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, பிறரை மகிழ்ச்சியூட்டிய இந்தச் சிறுவன் சார்லஸ் ஸ்பென்ஷர் சாப்ளின் என்ற இயற்பெயரைக் கொண்ட சார்லி சாப்ளின்.