ஜீன்ஸ் பை!
நெகிழிப் பயன்பாட்டில் இருந்து விடுதலை பெற என்னால் ஆன சிறிய பங்கு.
வீட்டில் என்னுடைய பழைய ஆடைகளை எடுத்து பிறருக்கு கொடுக்க எனது அம்மா வைத்திருந்தார்கள். பிறருக்குக் கொடுக்கும்போது பழையதைக் கொடுத்தால் அவர்களின் மனம் வேதனைப்படும். இதனால் நான் அந்த ஜீன்ஸ் பேண்டில் சில பொருள்களைச் செய்து என்னுடன் படிக்கும் மாணவிகளுக்குத் தரலாம் என்று சிந்தித்தேன்.
அதன்படி ஜீன்ஸ் பேண்டின் கால்பகுதியை தண்ணீர் புட்டி அளவிற்கு வெட்டி அதனை தண்ணீர் புட்டி கொண்டு செல்லும் பைபோல் மாற்றிக் கொடுத்தேன்.
அதேபோல் இடுப்புப் பகுதியை வெட்டி தைத்து அதனுடன் கைப்பிடி இணைத்து கடைக்குக் கொண்டு செல்லும் பையாக மாற்றினேன். இதனால் நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க என்னால் ஆன முயற்சியைச் செய்தேன்.
அதேபோல் பெரியவர்கள் வைத்திருக்கும் பணப் பை (Money purse) போன்று ஜீன்ஸில் சில பகுதிகளை மணிபர்சாக மாற்றித் தைத்து எனது தோழர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தனர்.
வறியவர்களுக்கு நாம் பயன்படுத்திய பழைய ஆடைகள், பொருள்களைக் கொடுப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. (சில நேரங்களில் நம்மால் அதுதான் இயலும், அது அவர்களுக்குத் தேவை என்றால் அப்படியே கொடுப்பது தான் சரி) அவர்கள் இடத்தில் நாம் இருந்து, நமக்கு ஒருவர் பழைய ஆடையைத் தந்தால் நாம் ஏற்றுக் கொண்டாலும் நமக்கும் புத்தாடைகள் கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும்.
ஆனால், இதுபோன்று பழைய ஆடைகளில் கைவினைப் பொருள்களைச் செய்து கொடுத்தால் வாய்ப்பற்ற பிள்ளைகளும் மகிழ்வார்கள். அவர்கள் வீட்டிலும் மகிழ்ச்சி அடைவார்கள்.
– ஆஸ்தா சரவணா, 6ஆம் வகுப்பு,
வேளாங்கன்னி மெட்ரிகுலேசன் பள்ளி, அசோக் நகர், சென்னை.