நினைவில் நிறுத்துவோம் : உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?
சிகரம்
பிஞ்சுகளே, ஒரு நாள், ஒரு மாதம், ஓர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். அது மட்டுமல்ல, தமிழர்களுக்கு எது புத்தாண்டு என்பதையும் உங்களுக்கு மிகச் சரியாக, ஆதாரங்களோடு எளிமையாகக் கூறப் போகிறேன்.
தமிழர்களின் காலக் கணக்கீடு அனைத்தும் இயற்கை நிகழ்வுகளை ஒட்டி, அறிவுப்பூர்வமாகச் செய்யப்பட்டவை என்பதையும், அதை இந்து மத சாஸ்திரமே ஏற்கிறது என்பதையும் கீழே அறியலாம்.
ஒரு நாள் என்பது என்ன? சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். என்று சொல்வோம். அதாவது பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் காலம்.
ஒரு மாதம் என்பது என்ன? ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதாவது நிலவு ஒரு முறை பூமியைச் சுற்றிவர ஆகும் காலம். நிலவை வைத்து மாதம் கணக்கிடப்பட்டதால் மாதத்திற்குத் திங்கள் என்ற பெயர் வந்தது. நிலவுக்குத் திங்கள் என்று வேறு பெயர் உண்டு என்பதால்.
அதேபோல் ஆண்டு என்பது என்ன? சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு. என்று சொல்வார்கள்.
அதாவது பூமி, ஒருமுறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்.
நம்முடைய பார்வைக்கு சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். சித்திரையில் தலை உச்சியில் இருக்கும். பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் மார்கழி இறுதியில் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு. சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு ஆண்டு கணித்தனர்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம்) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொள்ளப்பட்டது.
சித்திரையில் சூரியன் தலை உச்சியில் இருக்கும். ஒரு கோடியிலிருந்துதான் கணக்குத் தொடங்குவார்களே தவிர, தலை உச்சியிலிருந்து கணக்குத் தொடங்க மாட்டார்கள். எனவே, சித்திரையில் ஆண்டுத் தொடக்கம் என்பது தப்பு. தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பதே சரி.
ஆரியர்கள் உட்பட எந்தவொரு இனமும் இவ்வுலகில் மொழி, நாகரிகம், பண்பாடு, கலை, வணிகம், கட்டுமானம், வானியல், கணிதம், இசை என்று எதையும் அறிந்திராத நிலையில் அனைத்திலும் உயர்ந்து நின்ற இனம் தமிழினம். அதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்ய முடியும். உறுதியும் செய்யப்பட்டுள்ளது. அப்படி காலக் கணக்கீட்டிலும் உலகில் முன்னோடி தமிழர்களே.
இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் மொழி உட்பட எல்லாவற்றையும் தமிழர்களிடமிருந்தே பெற்றனர். அவர்களுக்கென்று எதுவும் இல்லை. எல்லாமும் தமிழரிடம் பெறப்பட்டவையே.
நாம் மேலே விளக்கியபடி சூரியன், நிலவை வைத்து தமிழர்கள் செய்த காலக் கணக்கீட்டை அவர்களும் ஏற்று அவர்களின் முதன்மைச் சாஸ்திரமான மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதிக் கொண்டனர். மனுதர்மம் முதல் அத்தியாயத்தில் 65 முதல் 67 வரையிலான ஸ்லோகங்களில் இதைக் காணலாம். சுலோகம் 65 நாள் பற்றியும், சுலோகம் 66 மாதம் பற்றியும் சுலோகம் 67 ஆண்டு பற்றியும் கூறுகிறது.
சுலோகம் 65: பகல் இரவு சேர்ந்தது நாள். அதாவது காலை முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்கிறது மனுஸ்மிருதி. தமிழர்கள் கூறிய சூரிய தோற்றம் முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்பதை மனுஸ்மிருதி ஏற்கிறது.
சுலோகம் 66: முழு நிலவு (பவுர்ணமி) தொடங்கி அமாவாசை வரை 15 நாள்கள் (கிருஷ்ண பட்சம்) அதன் பின் முழு நிலவு வரை 15 நாள்கள் (சுக்கில பட்சம்) இரண்டும் சேர்ந்து 30 நாள் ஒரு மாதம் என்கிறது மனுஸ்மிருதி.
தமிழர்கள் கூறிய ஒரு முழு நிலவு தொடங்கி மீண்டும் முழு நிலவு வரும் வரை ஒரு மாதம் என்பதை மனுஸ்மிருதி ஏற்கிறது.
சுலோகம் 67: தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதம் உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயணம். உத்தராயனம் தொடங்கி தட்சிணாயணம் முடிய ஓராண்டு என்று மனு சாத்திரம் கூறுகிறது.
சூரியன் வடக்கு நோக்கல் தொடங்கி வடக்கே சென்று மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கை அடையும் வரையிலான காலம் ஓராண்டு என்ற தமிழர் ஆண்டுக் கணக்கை மனுஸ்மிருதி ஏற்கிறது. இதில் முக்கியமான கருத்து ஆண்டு தொடக்கம் தை மாதம் என்பதை மனுதர்மம் 67ஆவது ஸ்லோகம் ஏற்கிறது என்பதே.
எனவே தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம் என்பது தமிழர் மரபுப்படியும், மனுதர்ம சாஸ்திரப்படியும் உறுதியாகிறது. எனவே, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம். அதுவே தமிழர்க்கும், அவரது மரபுக்கும் சரியானது.
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்பது மூடப் புராணக் கதையின் அடிப்படையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. சமஸ்கிருத வருடத்தை தமிழ் ஆண்டு என்று கொண்டாடச் செய்த சதி.