சிறார் கதை: வீடு… விளையாடு…
கோவி.லெனின்
மழை பெய்து கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்றாலும் வெளியில் போக முடியவில்லை. கதிர், நிலா இருவரும் எப்போது மழை நிற்கும் என்று ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தார்கள்.
மெதுவாக வாசலுக்கு வந்து, மழைத் தண்ணீரில் கைககளை நீட்டினான் கதிர்.
வீட்டுக்குள்ளே இருந்து அப்பாவின் அதட்டலான குரல் கேட்டது. “என்ன பண்ணுறே கதிர்? மழையில நனையக்கூடாது” என்றார்.
“கையை மட்டும்தாம்ப்பா நனைத்தேன்” என்றான் கதிர்.
“கையும் உன்னோடதுதானே.. அடுத்தவங்க ளுடையது இல்லையே..” என்றார் அப்பா.
அப்போது அம்மாவின் குரலும் கேட்டது.
“கதிர்.. நிலா.. நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேதான் இருக்கணும்” என்று அதட்டினார்.
நிலாவும் கதிரும் பெற்றோரின் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் இருந்தார்கள். மழை தொடர்ந்து பெய்தது.
“வீட்டுக்குள்ளே இருக்கிறது போர் அடிக்குது” என்றான் கதிர்.
“விளையாடலாமா?” என்றாள் நிலா.
“இந்த ரூமுகுள்ளே கிரிக்கெட் விளையாட முடியுமா?” என கதிர் கேட்டான்.
“கிரிக்கெட் விளையாட முடியாது. கேரம், செஸ், பல்லாங்குழி இப்படி விளையாடலாம்” என்றாள் நிலா.
கதிருக்கு ஆர்வம்தான். ஆனால், “கேரம்_-செஸ் போர்டுகளைத் தேடணும். பல்லாங்குழிக்கு சோழி இல்லையே..” என்றான்.
“வார்த்தை விளையாட்டு விளையாடலாமே” என்றாள் நிலா.
“அது என்ன கேம்?” என்று கதிர் கேட்டான்.
அதற்கு நிலா, “நான் நம்ம வீட்டில் உள்ள ஒரு பொருளைச் சொல்வேன். அது யாருக்கு உரிமையானதுன்னு நீ சொல்லணும். அதுபோல நீ சொல்ற பொருளுக்குச் சொந்தக்காரங்க யாருன்னு நான் சொல்வேன்” என்றாள்.
“வித்தியாசமா இருக்கே.. இந்த விளையாட்டுக்கு பேர் என்ன?’’ என கதிர் கேட்டதும், “வீடு கேம் அப்படின்னு பேரு வச்சிக்கலாம். நாமதானே விளையாடப் போறாம். ஒலிம்பிக்குக்கா போகக் போறோம்” என்று நிலா சிரித்தாள்.
விளையாட்டு ஆரம்பமானது.
கதிர்: “ஸ்கூட்டர்?”
நிலா: “அப்பா”
கதிர்: “கரெக்ட்டா சொல்லிட்டே”
நிலா: “வாக்கிங் ஸ்டிக்”
கதிர்: “தாத்தா”
நிலா: “ம்… கரெக்ட்”
கதிர்: “ஓகே.. ஆளுக்கு ஒரு மார்க். இப்ப நான் கேட்குறேன்… புடவை?”
நிலா: “அம்மா”
கதிர்: “பந்து”
நிலா: “நிலா. அதாவது, என்னோடது”
கதிர்: “இல்லை.. என்னோடது”
நிலா: “எனக்குதான் அப்பா வாங்கிக் கொடுத்தாரு”
கதிர்: “என்னைத்தான் அம்மா விளையாடச் சொன்னாங்க”
நிலா: “ஓ.கே.. அதை விட்டுடலாம்.. வேற கேளு”
கதிர்: “வீல்சேர்”
நிலா: “பாட்டி”
கதிர்: “கிச்சன்”
நிலா: “அப்பா”
அவள் பதில் சொன்னதும் கதிர் பலமாகச் சிரித்தான். நிலா கண்டுகொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்டாள்.
நிலா: “புக் செல்ஃப்”
கதிர்: “அப்பா”
அவன் பதில் சொன்னதும் நிலா சிரித்தாள். கதிர் அவளிடம், “நான் சரியாத்தானே சொன்னேன். அப்பாதானே புத்தகங்கள் வாங்கிட்டு வந்தாரு. அதனால புக் செல்ஃப் அவரோடதுதானே?”
“ஓ.. அப்படியா?” என்று கேட்ட நிலா, “கிச்சனுக்கான மளிகை சாமான்களும் அப்பாதானே வாங்கித் தர்றாரு. அப்ப கிச்சன் அவரோடதானே?” என்றாள்.
“அதெல்லாம் இல்லை.. அம்மாதான் சமைக்கிறாங்க. அதனால கிச்சன் அம்மாவோடதுதான்” என்று அடம் பிடித்தான்.
இருவரும் சத்தமாகப் பேசிக்கொள்வதைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் அங்கே வந்தார்கள். தங்களுடைய விளையாட்டையும் அதில் ஏற்பட்ட குழப்பத்தையும் நிலாவும் கதிரும் விவரித்தார்கள்.
அதைக் கேட்டுவிட்டு அப்பா சொன்னார், “வீடே நம்முடையதுதான். படிக்கிறவங்களுக்கு எல்லாருக்குமே புக் செல்ஃப் சொந்தம். நிலாவும் கதிரும்கூட ஸ்கூல் புக்ஸை படிச்சபிறகு இதைப் படிக்கலாம்” என்றார்.
“ஆமாம்” என்ற அம்மா, “கிச்சனில் நான்தான் சமைக்கணும்னு கிடையாது. அதுமாதிரி நானேதான் கூட்டிப்பெருக்கணும், துவைக்கணும்னும் கிடையாது. என்னோட வேலையை அப்பாவும் பங்கு போட்டுக்குவாரு. நான் ஒரு பொருள் வாங்கணும்னா அவரோட ஸ்கூட்டரை ஓட்டிக்கிட்டுப் போவேன். அதனால, இப்போதைக்கு நம்ம வீட்டுல டிரஸ் மட்டும்தான் தனித்தனி. மற்றதெல்லாம் எல்லாருக்கும் சொந்தம்” என்றார்.
“அப்படின்னா சரி.. நாளைக்கு நானும் நிலாவும்தான் சமைக்கப் போறோம்” என்றான் கதிர்.
“உங்க விளையாட்டு, எங்களை சோதிக்கப் போகுதா?” என்று அம்மாவும் அப்பாவும் சிரித்தனர்.