கோமாளி மாமா-22 : சிறப்பு
ஓவியம், கதை: மு.கலைவாணன்
கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க தோட்டத்திற்கு மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.
கோமாளி மாமா வரும் வரை, மண் தரையில் சின்ன சதுரம் வரைந்து நேருக்கு நேர் 3 கற்களை வைத்து விளையாடும் விளையாட்டை மாணிக்கமும் செல்வமும் விளையாடினர்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் மாணிக்கம் மட்டுமே வெற்றி பெற்றான். தோற்றுப் போன செல்வத்திற்குப் பதிலாக, மல்லிகா விளையாடினாலும் தோல்வி அடைந்தாள். இருவரும் மாறி மாறி விளையாடினாலும் மாணிக்கத்தை வெற்றி பெற முடியவில்லை.
விளையாட்டு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும்போது கோமாளி வந்தார். அவர் வந்ததைக்கூட கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாணிக்கம் தொடர்ந்து வெற்றி பெற்றதைப் பார்த்து மகிழ்ந்த கோமாளி “அருமை… அருமை…” என வாய்விட்டுப் பாராட்டினார்.
அவரது குரல் கேட்ட பிறகுதான் கோமாளி மாமா வந்துவிட்டார் என்பது மூவருக்கும் தெரிந்தது.
“ஒரு ஆட்டம் கூட மாணிக்கத்தை ஜெயிக்கவே முடியலே மாமா’’ என்று வருந்தினாள் மல்லிகா.
“எப்படி விளையாடினாலும் அவனேதான் ஜெயிக்கிறான் மாமா’’ என ஆதங்கப்பட்டான் செல்வம்.
“மாமா, வீட்டுலே நானும் அப்பாவும் சில நேரம் விளையாடுவோம். அதனாலே தொடர்ந்து வெற்றி பெற முடிஞ்சுது’’ என்றான் மாணிக்கம்.
“விளையாட்டு மட்டுமில்லே… படிப்பு, எழுத்து, உடற்பயிற்சி, ஓவியம், வேலை எல்லாமே தொடர்ந்து செய்யிற பயிற்சியினாலேயும் விடா முயற்சியினாலேயும்தான் ஒருத்தருக்கு கைவந்த கலையா மாறுது” என்று விளக்கினார் கோமாளி.
“சரிங்க மாமா, நீங்க கதை சொல்லுங்க!” என்றாள் மல்லிகா.
“சரி… கதைக்குப் போவோம். இப்ப நான் சொல்லப் போறது கதையில்லே. உண்மையிலே நடந்த நிகழ்வு. உலகமே பார்த்து வியந்த செய்தி.”
2021 டோக்கியோவில 32ஆவது ஒலிம்பிக்_2020 போட்டி நடந்துதில்லியா…? அதுலே உயரம் தாண்டுதல் போட்டியிலே கத்தார் நாட்டைச் சேர்ந்த முதாஸ் பார்ஷிம், இத்தாலி நாட்டு கியான் மார்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மார்சிம் நொடாசேகு இப்படி பல பேர் பங்கெடுத்துக்கிட்டாங்க.
இறுதியில் முதாஸ் பார்ஷிம், கியான் மார்கோ தம்பேரி இவங்க இரண்டு பேரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளி வாங்கிட்டாங்க.
இந்த இரண்டு பேருலே யாராவது ஒருத்தர் 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுனா அவங்களுக்கு முதல் பரிசான தங்கப் பதக்கம் கிடைக்கும்.
அதுக்காக இரண்டு பேருமே மூன்று முறை முயற்சி செய்தாங்க. ஆனா இரண்டு பேருமே மூன்று தவறுகளைச் செய்து 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்ட முடியல.
தங்கப் பதக்கத்துக்கான இறுதி வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியாம நடுவர்கள் தடுமாறுனாங்க.
கடைசியா யாராவது ஒருத்தர் 2.37க்கு மேலே கொஞ்ச உயரத்தையாவது எட்டுறாங்களான்னு பார்க்க மறுபடி ஒரு தாண்டுதலை நடத்த நடுவர்கள் முடிவு செய்தாங்க. அப்போது இத்தாலி வீரர் தம்பேரி, தனக்குக் காலில் அடிப்பட்டுள்ளதால் போட்டியிலிருந்து விலகுவதாகச் சொன்னாரு அப்போ கத்தார் வீரர் முகமது பார்ஷிம் தானும் விலகினால் என்ன சொல்வீர்கள் என நடுவர்களிடம் கேட்க, பரிசைப் பிரிச்சுக் கொடுப்போம்னு அவங்க சொன்னாங்க. அப்படியே செய்யுங்களென்று சொல்லிட்டாரு பார்ஷிம் எனக் கேட்டார்.
இதற்கு நடுவர்கள் தங்கத்தை பகிர்ந்து தர சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு வீரர்களும் கட்டிப் பிடித்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
“மாமா நானும் இதுபற்றி ஆசிரியர் தாத்தா எழுதினதைப் படிச்சேன்’’ என்றாள் மல்லிகா.
“ஆமா சரியாச் சொன்னாய் இது தொடர்பா பார்ஷிம் சொல்லும்போது,’’ நான் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தாரு.
தடகளத்தில் மட்டுமல்ல வெளியிலேயும் நாங்க நல்ல நண்பர்கள். இப்போ எங்க கனவு நனவாகியிருக்கு. இந்தக் கனவிலிருந்து கண்விழிக்க நான் விரும்பலே. இந்த நாளுக்காகத்தான் 5 ஆண்டுகளா காத்திருந்தேன். பல காயங்கள் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கு. இன்னைக்கு இரண்டு பேரும் இந்தத் தருணத்தைப் பகிர்ந்து கொண்டோம். இது உண்மையில் மதிப்பு மிகுந்தது”ன்னு தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், ரியோவில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் பார்ஷிம்.
ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டில் காலிலே ஏற்பட்ட காயத்துனாலே பெரும்பாலான போட்டிகள்லே பங்கேற்க முடியலே. அந்த நேரத்திலே முதாஸ் பார்ஷிம் காயத்திலிருந்து குணமாகி மறுபடி விளையாட வருவதற்கு பெரும் ஆதரவு தந்திருக்காரு கியான்மார்கோ.
இப்படிப்பட்ட உண்மையான நட்புதான் தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்துக்கிறதுக்குக் காரணமா இருந்திருக்கு.
இதைப் பகிர்ந்துகொண்ட அந்த நாள்தான். உலக நண்பர்கள் நாளான ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை. எந்த விளையாட்டுலேயும்… பங்கேற்கிற போட்டியாளர்கள், தாங்கள் வெற்றி பெறணும், முதல்லெ வரணும்னுதான் நினைப்பாங்க.
ஆனா… கத்தார் நாட்டு முதாஸ் பார்ஷிமும், இத்தாலி நாட்டு கியான் மார்கோ தம்பேரியும்… வெற்றியைச் சமமா பகிர்ந்துகொண்ட முறை எல்லாரையும் வியக்க வைத்தது.
“விளையாட்டுலே போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது. விளையாட்டை விளையாட்டாப் பாக்கணுமே தவிர, விபரீதமாப் பார்க்கவும் கூடாது. விளையாடவும் கூடாது” என்று தனக்குத் தெரிந்த தகவலைச் சொல்லி முடித்தார் கோமாளி.
“ஆமா மாமா! ஒலிம்பிக் வீரர்கள் மாதிரி விட்டுக் கொடுக்கிற மனசும்… அடுத்தவரை விளையாட்டுலே வெற்றி பெறுவதைவிட அவங்க மனசை வெற்றி பெறுவதும்தான் சிறப்புன்னு புரிஞ்சுது” என்றாள் மல்லிகா.
“தங்கப் பதக்கமா இருந்தாலும்… தகுதியான நண்பரோட பகிர்ந்துக்க முடியும்னு இந்த நிகழ்ச்சி புரிய வைக்குது” என்றான் செல்வம்.
“வெற்றியைக்கூட எனக்குன்னு நினைக்காம நமக்குன்னு நினைக்கிற நல்ல மனசு எல்லாருக்கும் வேணும்” என்றான் மாணிக்கம்.
“விளையாட்டுலே மட்டுமில்லே, வாழ்க்கையி-லேயும் இப்படி விட்டுக் கொடுத்தலும் பகிர்தலும் இருந்தா, சிறப்பு தானா வந்து சேரும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் கோமாளி மாமா.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பைப் போல மூவரும் அவர் பின்னாலேயே நடந்தனர்.
– மீண்டும் வருவார் கோமாளி