பிப்ரவரி-28 தேசிய அறிவியல் நாள் – பகுத்தறிவியல்!
அனைத்து மாந்தர் மூளையிலும்
ஆறாம் அறிவும் இருந்தாலும்
வினைகள் செய்யும் யாவருக்கும்
வேண்டும் நல்ல பகுத்தறிவு!
பகுத்தே அறியும் திறமைதான்
பாரில் விளங்கும் அறிவியலாம்;
தகுதி யற்ற தைத்தள்ளித்
தனிமெய் காணல் பகுத்தறிவு!
பண்டைக் கால நம்பிக்கை
பழுதா என்றே ஆராய்ந்தே
உண்மை தன்னைக் கண்டுணரும்
உயர்ந்த கல்வி அறிவியல்தான்!
மூடச் செயல்கள் யாவினையும்
முற்றாய்க் களைந்து பகுத்தறிவால்
கேட கற்றி மெய்யுரைத்தல்
காசி னியிலே அறிவியல்தான்!
கண்ணை மூடிக் கொண்டிங்கே
கற்பனை தன்னை நம்பிடுவோர்
கண்ணைத் திறக்கும் பகுத்தறிவே
கற்கும் அறிவியல் மெய்ப்பாடம்!
அறிவியல் விதைக்கும் சிந்தனைகள்
அவனி தன்னை மேம்படுத்தும்;
மறிபோல் வாழும் மாந்தரையே
மாற்றி மண்மேல் உயர்த்திடுமே!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர்