சிறார் கதை: த்தோ.. த்தோ..
கோவி.லெனின்
கதிருக்கும் நிலாவுக்கும் வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.
அவர்களின் தாத்தா வீட்டில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. ஒன்று, ஜெர்மன் ஷெப்பர்டு. மற்றொன்று, ராஜபாளையம் வகை. முதியவர்கள் வாழும் வீட்டுக்கு அவை இரண்டும்தான் செக்யூரிட்டிகள். முன்பின் தெரியாத யாரும் அந்த இரண்டு நாய்களையும் தாண்டி, வீட்டுக்குள் நுழைந்துவிட முடியாது.
நாய் என்று யாராவது கூப்பிட்டால் தாத்தா, பாட்டி இருவருக்கும் கோபம் வந்துவிடும். ராஜா, டைகர் என்றுதான் கூப்பிட வேண்டும். நிலாவும் கதிரும் தாத்தா – பாட்டி வீட்டுக்குச் சென்றால் அவர்களுக்குக் கூட்டாளிகள் ராஜாவும் டைகரும்தான்.
கதிர், இரண்டு நாய்களையும் குளிப்பாட்டுவான். நிலா, உணவு கொடுப்பாள். அவர்கள் எங்கே போனாலும், ராஜாவும் டைகரும் கூடவே செல்வார்கள். அவர்-களுடன் சேர்ந்து விளையாடு-வார்கள். பேரக் குழந்தைகளுக்குத் தோழர்களாகவும், தங்களுக்குப் பேரப்பிள்ளைகள் போலவும் இருக்கும் ராஜாவையும் டைகரையும் கொஞ்சிவிட்டுத்தான் தாத்தாவும் பாட்டியும் நாள்தோறும் படுக்கப் போவார்கள்.
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தாத்தா – பாட்டி வீட்டுக்கு வந்தால், முதலில் டைகரையும் ராஜாவையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, தங்கள் வருகையைப் பதிவு செய்யும் வகையில் அவற்றிடம் ‘ஷேக்ஹேண்ட்’ கொடுத்துவிட்டுத்தான் உள்ளே போவார்கள்.
தாத்தாவையும் பாட்டியையும் சந்திப்பதற்கான சரியான நேரம் இல்லை என்றால் ராஜாவும் டைகரும் ஷேக்ஹேண்ட் கொடுக்காது. அதைப் புரிந்து கொண்டு, அக்கம் பக்கத்தாரும் “அப்புறம் வருகிறோம்” என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்.
தங்களுக்குச் சோறு வைத்தாலும், தாத்தாவும் பாட்டியும் சாப்பிட்டுவிட்டார்களா என்று தெரிந்துகொண்ட பிறகே டைகரும் ராஜாவும் சாப்பிடுவது வழக்கம். இத்தனை அன்பு கொண்ட உயிரினங்களை ‘நாய்’ என்று சொல்வதைத் தாத்தாவும் பாட்டியும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? நிலாவும் கதிரும்கூட, நாய் என்று மற்றவர்கள் சொல்வதை விரும்பவில்லை.
நாய் என்பது கெட்ட வார்த்தையல்ல. அது, நன்றியுள்ள உயிரினம். ஆனால், மக்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை இழிவாகத் திட்டுவதற்கே, அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதால், அர்த்தம் மாறிவிட்டது. அதனால், கதிருக்கும் நிலாவுக்கும் நாய் என்ற வார்த்தையைவிட ராஜா, டைகர் என்ற பெயர்கள்தான் பிடித்திருந்தன.
தாத்தா – பாட்டி வீட்டிலிருந்து அவர்கள் புறப்படும்போது, டைகரையும் ராஜாவையும் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. தங்கள் வீட்டுக்கு வந்ததும், ஒரு டைகரோ ராஜாவோ வளர்த்தால் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கும் ஆசையாக இருந்தது.
அம்மா – அப்பாவிடம் தங்கள் ஆசையைச் சொன்னார்கள்.
“நாம இப்ப குடியிருப்பது வாடகை வீடு. அக்கம் பக்கத்தில் சின்னக் குழந்தைகள் இருப்பதால், அவங்க வீட்டில் இருப்பவங்க பயப்படுவாங்க. புகார் பண்ணுவாங்க. அதனால, நாம சொந்த வீட்டுக்குப் போனதும் ஒரு டைகரை வளர்க்கலாம்” என்றார்கள்.
கதிருக்கும் நிலாவுக்கும் மனமே சரியில்லை.
“எப்பம்மா சொந்த வீட்டுக்குக் குடிபோவோம்?” என்று கேட்டார்கள்.
“அடுத்த ஆண்டு போய்விடுவோம். உங்களுக்கு ஸ்கூலும் மாறிடும்”
“நான் இப்ப படிக்கிற ஸ்கூலில்தான் படிப்பேன். மாற மாட்டேன். இங்கேதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க” என்றான் கதிர்.
“அப்படியென்றால் நம்ம வீட்டுக்கு டைகர் வராது” என்றார் அப்பா.
“டேய்… டேய்… நாம புது வீட்டுக்குப் போய், புது ஸ்கூலில் சேர்ந்து, புது ஃப்ரெண்டுகளோடு பழகலாம்டா” என்றாள் நிலா.
கதிருக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், புது வீட்டுக்குப் போவதற்கே ஓர் ஆண்டு ஆகும் என்கிறாரே, அம்மா. அதுவரை என்ன செய்வது என்று யோசித்தான்.
மறுநாள், பள்ளி முடிந்து கதிரும் நிலவும் வேனில் வந்து இறங்கினார்கள். வீட்டுக்கு கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும். அப்போது, தெருவில் இரண்டு நாய்கள் சுற்றிக் கொண்டிருந்தன.
அதில் ஒன்றைப் பார்த்து, “டைகர்” என்றான் கதிர்.
இன்னொரு நாயைப் பார்த்து, “ராஜா” என்றாள் நிலா.
அவை திரும்பிப் பார்க்கவில்லை.
“இது நம்ம ராஜாவும் டைகரும் இல்லைடா” என்றாள் நிலா.
“நம்ம ராஜாவாகவும் டைகராகவும் இவற்றை மாற்றிடலாம்” என்றான் கதிர்.
“எப்படி?” என நிலா கேட்டாள்.
கதிர் அந்த இரண்டு நாய்களையும் பார்த்து, “த்தோ… த்தோ…” என்று கூப்பிட்டான். இரண்டும் அவர்களை நெருங்கி வந்தன.
டைகர் என்று கதிர் கூப்பிட்ட நாய்க்கு, அவன் தன்னிடமிருந்த பிஸ்கட்டில் கொஞ்சம் போட்டான்.
“டேய்.. எனக்கு அம்மா கொடுத்தனுப்பிய பிஸ்கட்டை சாப்பிட்டுட்டேன்டா…” என்றாள் நிலா கவலையுடன்.
“இந்தா… மிச்ச பிஸ்கட்டை உன் ராஜாவுக்குக் கொடு” என்றான் கதிர்.
நிலாவும் அதேபோல செய்தாள்.
அவர்களின் ‘டைகரும்’, ‘ராஜாவும்’ வால் ஆட்டியபடியே பிஸ்கட்டைச் சாப்பிட்டன.
“ஷேக்ஹேண்ட்… ஷேக்ஹேண்ட்…” என்று கதிர் சொல்ல, புது ராஜாவுக்கும் புது டைகருக்கும் அது புரியவில்லை. நிலாதான், அவற்றின் முன்கால்களில் ஒன்றை எடுத்து தன் கையில் வைத்து, “இதுக்குப் பேருதான் “ஷேக்ஹேண்ட்” என்றபடி கை குலுக்கினாள்.
அவை வாலை ஆட்டிக்கொண்டே தெருவில் ஓடின.
அன்று இரவு கதிரும் நிலாவும் படுத்திருக்கும்போது, தங்களின் டைகர் – ராஜா பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இரவில் அவை இரண்டும் எங்கே படுத்திருக்கும்? அவற்றுக்கு அம்மா – அப்பா இருப்பாங்களா? அல்லது தங்கள் தாத்தா – பாட்டி வீடு போல ஏதாவது இருக்குமா? என்றெல்லாம் அவர்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள். இருக்குமா? இருக்காதா? என்று தெரியாமலேயே உறங்கிவிட்டார்கள்.
அடுத்த நாள் காலையில், அவர்களின் ஸ்கூல் வேன் ஹார்ன் அடித்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அப்போது டைகரும், ராஜாவும் நின்று கொண்டிருந்தன. ‘ஷேக்ஹேண்ட்’ கொடு என்று இருவரும் சொன்னதும், அவை ஷேக்ஹேண்ட் செய்தன.
“ஈவ்னிங் வரும்போது பார்க்குறோம்.. பை… பை…” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
மாலையில் கதிரும் நிலாவும் வீட்டுக்கு வரும்போது, டைகரும் ராஜாவும் காத்திருந்தன. அவற்றுக்கு பிஸ்கட் தந்தார்கள். அவை ‘ஷேக்ஹேண்ட்’ கொடுத்தன.
நாள்தோறும் இது தொடர்ந்தது.
இரவில் படுத்திருக்கும்போது கதிரிடம் நிலா சொன்னாள், “டேய்.. நாம இந்த வீட்டிலேயே இருந்திடலாம்டா…” என்றாள்.
“ஆமா.. இங்கேயே இருக்கலாம். ஒருவேளை, புதுவீட்டுக்குப் போனா ராஜாவையும் டைகரையும் கூப்பிட்டுக்கிட்டுப் போயிடலாம்” என்றான் கதிர்.
இருவரும் ஆசைப்பட்டது போலவே அவர்களுக்குப் புது உறவுகள் கிடைத்துவிட்டன.