ஆடு…மாடு…ஓடு…
விழியன்
போட்டி துவங்க இருந்தது. போட்டியைப் பார்க்க எல்லோரும் வந்துவிட்டார்கள். அது ஒரு விநோதமான ஓட்டப்பந்தயம். இதுவரையில் யாரும் கேள்விப்படாத ஓட்டப்பந்தயம். அப்படித்தான் கதையை ஆரம்பிக்கணும். இரண்டு பேர்களுக்குப் போட்டி. உடனே ஆமைக்கும் முயலுக்கும் போட்டி என்று நினைக்க வேண்டாம். இங்கே வேறு இருவருக்குள் போட்டி. இவர்களால் ஓட மட்டுமல்ல, பறக்கவும் முடியும். ஆமாம்! ஒரு கொசுவுக்கும் ஒரு ஈக்கும் ஓட்டப்பந்தயம்.
என்ன நடந்ததுன்னா… சில நாள்களுக்கு முன்னர் ஒரு வீட்டில் இதே கொசுவும் ஈயும் மிச்சமான தோசை ஒன்றுக்காகப் போட்டி போட்டன. அப்போதுதான் இந்தப் பேச்சு வந்தது. “இனி, நீ இந்த வீட்டுக்குள் வரக்கூடாது’’ என்றது ஈ. “நீ யாருப்பா அதைச் சொல்ல? ரெண்டு பேருக்குமே உணவு கிடைக்குது, அப்புறம் என்ன? நான் பாட்டுக்கு சாப்பிட்டு இருட்டுல வாழப்போறேன். இந்த வீட்டுல யார் ரத்தத்தையாச்சும் உறிஞ்சிட்டா என்னோட இருபத்தைந்து தலைமுறைக்கு புரதச் சத்து கிடைச்சிடும். ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம் என்றது அந்தப் பெண் கொசு. அதெல்லாம் வேலைக்கே ஆகாது, போட்டியில யார் வெற்றி பெறுகின்றார்களோ அவங்க இந்த வீட்டில் எங்க வேண்டுமானாலும் வாழலாம், தோற்பவர்கள் இந்தப் பகுதியைவிட்டே போயிடணும் என்று முடிவானது.
போட்டியில் ஒரு சின்ன மாற்றம் இருந்தது. பறக்கும் போட்டி அல்ல. கால்களால் ஓடும் போட்டி. ஈயும் பறக்க முடியும்; கொசுவும் பறக்க முடியும். ஆனால், வேகமாக யார் ஓடுகின்றார்களோ அவர்களே வெற்றியாளர். அடுத்து, இடத்தினைத் தேர்வு செய்தார்கள். அந்த வீட்டின் கழிவு நீர்த் தொட்டிக்கும் சைக்கிள் நிறுத்துமிடத்திற்கும் இடையே மறைவாக ஓர் இடம் இருந்தது. பத்து முறை இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு அப்படி இப்படி ஓட வேண்டும். பிரச்சனை ஒவ்வொன்றாக வந்தது. ஒன்றில் இருந்து பத்து வரைக்கும் இவர்கள் இருவருக்குமே எண்ணத் தெரியாது. அடியாத்தி! அப்புறம் எப்படி போட்டி நடத்துறதாம்? எறும்புகளுக்குத்தான் நிறைய எண்கள் தெரியும். அதனால் இரண்டு எறும்புகளை இருவரும் நாடினார்கள். எறும்புகளுக்கு இவங்க ஆட்டமே புரியவில்லை. கடைசியாக அவர்களுக்கு விளக்கி விளக்கி ஈயும் கொசுவும் சோர்ந்து போயின. உங்களுக்கு இந்த நடுவர் வேலைக்காக ஒரு சக்கரைக் கட்டியைத் தருகின்றேன் என்றதும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. “என்னப்பா பத்து வரைக்கும் எண்ணனும் அதான’’ என்றார்கள்.
போட்டிக்கான இடம் தயார். போட்டிக்கான நடுவர்கள் தயார். அடுத்து பார்வையாளர்களைக் கூப்பிட வேண்டும். ‘ஓட்டப்பந்தயப் போட்டி. இடத்தைத் தெரிந்துகொள்ள டயர் அடியில் இருக்கும் கொசுவைத் தொடர்புகொள்ளவும்’ என்று ஒரு போஸ்டரைத் தயார் செய்து இரண்டு இடத்தில் வைத்தார்கள். கண்டிப்பாகப் பார்வையாளர்கள் தேவை என இருவரும் கருதினர். ‘அய்யோ, எவ்ளோ பேரு வந்து கேட்கப்போறாங்களோ. பதில் சொல்லியே நேரம் போயிடுமே’ என கொசு கவலையுடன் இருந்தது. ஆனால் போஸ்டர் வைத்து ஒரு நாளாகியும் ஒருத்தரும் விசாரிக்கவில்லை. எறும்புகளிடம் இதைச் சொன்னது. “இன்னாப்பா இப்படி எழுதி வெச்சிருக்கீங்க. இப்படி எழுதினா எப்படி வருவாங்க? இப்ப மக்களுக்கு எல்லாம் போட்டி, நாடகம், எதுவும் பிடிக்கிறது இல்லை. ஏதாச்சும் தடாலடியா நடக்கணும். டி.வியே பார்க்கிறது இல்லைபோல! நான் சொல்ற மாதிரி மாத்துங்க’’ என்றது எறும்பு. “ஈக்கும் கொசுவுக்கும் சண்டை. இதில் உடையப்போவது யாருடைய மண்டை?’’ என எழுதச்சொன்னது. ஆனால், எழுதியதும் நூற்றி நாற்பது பூச்சிகள் வந்து விசாரித்துவிட்டன. “நாங்களே மத்தவங்களுக்கு சொல்லிட்றோம். நீங்க ரெண்டு பேரும் சண்டைக்குத் தயாராகுங்க’’ என்று சொல்லியும் சென்றன.
இரவு படுக்கும் முன்னர் இதை எல்லாம் சொல்லிச் சொல்லி ஈயும் கொசுவும் சிரித்துக்கொண்டன. இன்னொரு முக்கியமான நடுவரை மறுநாள் காலை அழைத்தனர். “நான் என்னப்பா இந்தப் போட்டியில நடுவர்? அதான் எறும்புகள் இருக்கே’’ என்று கரப்பான் மறுத்துவிட்டது. “அட தலைவரே, நாங்க பறக்காம காலில்தான் ஓடுகின்றோமா என தரையில் இருந்து பார்க்க ஒரு நடுவர் வேண்டும். நீங்க மட்டும்தான் கவுந்து அடிச்சு எங்க போட்டியைப் பார்த்து கால்களால்தான் ஓடுகின்றோம் என்று சரிபார்க்க வேண்டும். “சரி’’ என ஒப்புக்கொண்டது. ஆனால், ‘நான்கு அய்ந்து பூச்சிகள் என்னை கவுத்துப் போட ஏற்பாடு மட்டும் செய்யுங்க’ என்றது.
போட்டிக்குத் திரும்ப வருவோம். பார்வையாளர்கள் வந்தாச்சு. இரண்டு எறும்பு நடுவர்கள் வந்தாச்சு. மேலங்கி போட்டு (நடுவர் மாதிரி தெரியணுமாம்) வந்திருந்தார்கள். கரப்பான் வந்தாச்சு. கூடவே டான்டூன் எறும்பும் வந்திருந்தது. அது ஒரு கேமராவை எடுத்து வந்திருந்தது. போட்டி முடிக்கும்போது யார் முதலில் முடிக்கறீங்கன்னு தெரிஞ்சிக்க கேமரா அவசியம், நான் இலவசமா போட்டோ எடுத்துத் தரேன்னு தானாக வந்திருந்தது. கரப்பானைக் கவிழ்க்க முயன்றார்கள். பின்னர் ஒரு செங்கல் மீது ஏறி தானாக கவிழ்ந்து விழுந்தது. எல்லாம் தயார். இப்ப போட்டியாளர்கள் ஈயும் கொசுவும் மட்டும் வந்து ஓட வேண்டியதுதான் பாக்கி.
இதோ வந்துவிட்டார்கள்.
“கொசுதான் ஜெயிக்கும்’’ என்று ஒரு சாரரும், “ஈக்கு எத்தனை கால் தெரியுமா? அதான் ஜெயிக்கும்’’ என ஒரு சாரரும் இருந்தனர். ஈ வேகமாக ஓடமுடியாது, கொசுவைவிட கனம் அதிகம். நேத்துதான் மனுஷ ரத்தம் குடிச்சிருக்கு, சல்லிசா வெற்றி கொசுவுக்குத்தான். ஒரே இரைச்சலும் கூச்சலும். வாய்வழியாகச் செய்தி சென்று ஆயிரம் பூச்சிகள் கூடிவிட்டன. கொயிங்…என்று சத்தம் வேறு.
“இருவரும் தயாராக இருங்க. ஆடு மாடு ஓடுன்னு சொன்னதும் ஓடணும்’’ என்று எறும்பு கட்டளையிட்டது.
ஆடு..
மாடு…….
ஓ…………
அப்ப ஒரு அபாயக்குரல்!
“ஓடுங்க… ஓடுங்க… அது நம்மை தாக்க வருது…’’ எனக் கத்திக்கொண்டே ஒரு பெரிய கொசு பறந்து வந்தது. அதன் பின்னால் சில அடிகளில் பூச்சி மருந்துடன் ஒரு பெரியவரின் கால்கள் இவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தன.
அடுத்த மைக்ரோ விநாடியில் ஆயிரம் பூச்சிகளும் காணவில்லை. ‘அடேய் இங்க தானடா இருந்தீங்க’ என்று சொல்லும் அளவிற்கு! போட்டோ எடுக்க வந்த எறும்பும், நடுவர் எறும்பும் ‘சர்ர்ர்ர்க்’ என்று புற்றுக்குள் சென்றுவிட்டன. இப்போது இருப்பது ஈயும் கொசுவும் கரப்பானும் மட்டும்தான்.
“நீங்க ஓடிடுங்க செல்லங்களா’’ என்றது கரப்பான்.
“ஓட்டம் என்ன… பறந்தே போயிடுவோம். உங்கள எப்படி விட்டுப்போறது கரப்பான் அண்ணே’’ என்று பாவமாகக் கேட்டது ஈ.
“பூமியில அணுகுண்டு வெடிச்சாலும் தில்லா ஒன்னும் ஆகாம நிப்போம்லே! பூச்சி மருந்து எனக்கு டானிக் சாப்பிட்ற மாதிரி. ஓடிப்போங்க’’ என்றது.
பூச்சி மருந்து அடிக்கவும்… ஈயும் கொசுவும் பட்டாசாகப் பறக்கவும் சரியாக இருந்தது. அந்தத் தெருவின் கடைசி காம்பவுண்டில் இடித்துக்கொண்டு கீழே விழுந்தன. மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியது.
“இனி ஓட்டப்பந்தயம் கேப்ப?’’ – என்றது கொசு.
“வா, வீட்டுக்குள்ள போய் என்ன சாப்பாடு கிடைக்குதுன்னு பார்ப்போம் முதல்ல’’ – என்றது பசியுடன் ஈ.