விண்வெளியில் ஈர்ப்பு விசையே இல்லையா?
அபி
“நுண்ணீர்ப்புவிசையில், எங்களின் முழு உடல் உறுதியை சரியாக வைத்துக் கொள்ளவும், குறிப்பாக எங்கள் எலும்புகளை பாதுகாக்கவும், உடற்பயிற்சி இன்றியமையாதது. விண்வெளியில், உடற்பயிற்சியும் எங்கள் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது. உங்கள் அனைவரையும் பார்த்ததிலும் பேசியதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி” என கூறி தனது உரையை முடித்தார் அந்த விண்வெளி வீரர். விழாவும் அதன் சலசலப்பும் முடிந்தாலும், வீட்டுக்குச் செல்ல இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. அதனால் மாணவர்கள் அவரவர் வகுப்பில் இருந்தனர். ஆறாம்வகுப்புக்கு அறிவியல் ஆசிரியர் வரும் போது சில் வண்டுகளாக இருந்த மாணவர்கள், நிமிடத்தில் அமைதியாகினர். ஆசிரியர் லீலாபிளாரென்ஸ் என்றால் மாணவர்-களுக்குக் கொள்ளைப் பிரியம். அவருக்கு மாணவர்களின் கேள்விகள் என்றால் கொள்ளைப் பிரியம். வகுப்பில் விழா பற்றி கருத்துகளைக் கேட்டு முடித்து, “விண்வெளி வீரரின் பேச்சில் ஏதேனும் சந்தேகமா?” என்றார்.
எப்போது இப்படிக் கேட்பார் என்பது போல கைகள் மேலே உயர்ந்தன. அவர் எப்போதும் அனைவரின் கேள்விகளையும் முதலில் கேட்டு விட்டுப் பின்னரே பதில் அளிப்பார். அப்படி கேட்டு முடித்தபோது, பெரும்பாலான கேள்விகள், “விண்வெளியில் ஈர்ப்பு விசையே இல்லை அப்போது நுண்ணீர்ப்பு விசை (Micro Gravity) எப்படி வந்தது?’’ என்பதாக இருந்தது. அதனால் அந்த கேள்வியில் இருந்தே தொடங்கினார். “ஈர்ப்புவிசை இல்லாத பகுதி இந்த அண்டத்தில் எங்குமே இல்லை. சூரியனின் ஈர்ப்பு விசையில் பூமி இருக்குது, பூமியின் ஈர்ப்பு விசையில் நிலா இருக்குது. அதோடு, தூரம் அதிகமாக அதிகமாக, ஈர்ப்பு விசையின் சக்தி (Gravity’s Strength) குறைகிறது. நம் பள்ளிக்கு வந்த விண்வெளி வீரர், பன்னாட்டு விண்வெளி மையத்தில் இருந்தார். அங்கு புவிஈர்ப்பு விசையின் தாக்கம் குறைவாக இருப்பதால், விண்வெளி வீரர்கள் முதல் பொருட்கள் வரை மிதக்கின்றன. அது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. இருக்கிறது. இப்படி மிக மிகக் குறைவாக இருக்கும் ஈர்ப்பு விசை தான் நுண்ஈர்ப்புவிசை.” என்றார் லீலா மேடம்.
“ஈர்ப்புவிசை இருக்கும் போது ஏன் அங்கு பொருட்கள் எல்லாம் மிதக்கின்றன?” என்ற கேள்விக் கணைக்கு பதில் அளிக்கத் தொடங்கினார் ஆசிரியர்.’’ ஒரு பொருளைப் புவியீர்ப்பு விசையைத் தவிர வேறு எந்த ஒரு விசையின் தாக்கமும் இல்லாமல் உயரத்தில் இருந்து கீழே போட்டு, அது கீழே விழுவதை ‘இயல் வீழ்வு’ (திக்ஷீமீமீ திணீறீறீ) என்று சொல்லுவோம். பன்னாட்டு விண்வெளி மையத்-தோடு, உள்ளே இருக்கும் வீரர்கள், பொருட்கள் என அனைத்தும் இயல் வீழ்விலேயே இருக்கும். அதனால் தான் அவை மிதந்து கொண்டு இருக்கிறது போல் நமக்கு தெரிகிறது.’’ என்றார். “இயல்வீழ்வில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி மையம் பூமியை நோக்கி வந்தாலும் ஏன் பூமியைத் தொடவில்லை?” என்று வகுப்பை நோக்கிக் கேட்டதும், அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்னவா இருக்கும் என முணுமுணுத்தனர். பதில் தெரியவில்லை என்பதை உணர்ந்த லீலா ஆசிரியர் “பன்னாட்டு விண்வெளி மையம், மணிக்கு 27,580 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகம் தான் பன்னாட்டு விண்வெளி மையத்தைப் பூமியில் வந்து மோதாமல் இருக்கச் செய்கிறது” என்ற போதுதான் மாணவர்களின் முகத்தில் இருந்த கேள்விக் குறி மறைந்தது. என்ன தான் முகத்தில் இருந்த கேள்விக்குறி மறைந்தாலும், அடுத்த கேள்வியோடு, கையை உயர்த்தினான் தமிழ். “வகுப்பு ஆரம்பிக்கும் போது சூரியனின் ஈர்ப்பு விசையில் பூமி இருக்குனு சொன்னீங்க, அதோடு ஈர்ப்பு விசையில்லாத பகுதி அண்டத்தில் இல்லனும் சொன்னீங்க, அப்போ சூரியன் எதோட ஈர்ப்புவிசையில இருக்கு?’’ எனக் கேட்டான். “ரொம்ப நல்ல கேள்வி தமிழ்… சூரியன்….’’ என்று ஆரம்பிக்கும் போதே சரியாக மணி அடித்தது. ஆசிரியரோ, “சரி, மணி அடிச்சாச்சு, எல்லாம் வீட்டுக்குப் போகிற எண்ணத்துக்கு வந்துட்டு இருப்பீங்க. அதனால, தமிழின் கேள்விக்கு, நீங்களே பதில் தேடிட்டு வரணும். சரியா சொல்கிறவங்களுக்கு ஒரு பரிசு. நல்ல கேள்வி கேட்ட தமிழுக்கும்தான்’’ என்று சொன்னதும், ‘நான் தான் சொல்லுவேன், நான் தான் சொல்லுவேன்’ என்றபடி அனைவரும் ஆசிரியருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினர். “சரி, சூரியன் எதனோட ஈர்ப்பு விசையில இருக்கு???’’ ஒவ்வொரு தடவையும் அந்த டயலாக் சொல்லனுமா?! சரிசொல்றேன். “பதிலா? நான் சொல்லமாட்டேனே பௌ, பௌ!!’’
கடந்த பிப்ரவரி இதழில்
‘ஒரு மனிதன் செவ்வாய்க் கோளுக்குச்
சென்று திரும்ப எத்தனை ஆண்டுகளாகும்?’
என்றொரு கேள்வி கேட்டீங்களே அபி,
பதில் வரவிலையே இன்னும்!
யாராவது எழுதி அனுப்புறாங்களா
பார்ப்போம்!