புரியாத புதிர் அல்ல! : நிறம் மாறும் பச்சோந்தி மலை
பாறைகள் உருவாவதற்கும் மலைகள் உருவாவதற்கும் வேறுபாடு உண்டு.
எரிமலை, கண்டங்கள் மோதல், பிளவு படுதல் போன்றவற்றால் மலைகள் உருவாகின்றன, எரிமலையால் மலைகள் உருவாவதற்கு எடுத்துக்காட்டு தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையின் அடிவாரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க மேலே மலை மேலே ஏற ஏற வெப்பநிலை குறைந்து -7 டிகிரி செல்சியஸ் ஆகிவிடும்.
அதே போல் கண்டங்கள் மோதலில் உருவானது இமயமலை. கண்டப் பிளவுகளின் போது ஏற்பட்ட மேடுகள் பெரும் மலைகளாக உருவாகின்றன. எடுத்துக்காட்டு: மேற்குத் தொடர்ச்சி மலை. இமயமலை தோன்றுவதற்கு 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பே மேற்குத்தொடர்ச்சி மலை உருவாகிவிட்டது.
சிறுமலைக் குன்றுகள் எப்படி உருவாகின என்பதை நாம் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு என்னும் குன்றை நாம் இப்போது பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய பழங்குடியினரால் உலுரு என்று அழைக்கப்படும் குன்றுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ஆயர்ஸ் பாறை. இது ஆஸ்திரேலியாவின் மய்யப் பகுதியில், அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறை ஆகும். இது எலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 450 கிமீ (280 மைல்) தூரத்தில் உள்ளது. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுரு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.
உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கதிர்கள் இதில் பட்டு ஊதா, அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும். இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.0
இந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது. இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.
வரலாற்று ரீதியிலும், புவியியல் ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம்.
இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகடும் ஒரு கதை சொல்லும்.
எந்த ஒரு அடர் மரமோ உயரமான பகுதியோ இல்லாமல் வெற்று வெளியில் தெளிவான வானம், நிலவின் வெளிச்சம், நிலவு மறைப்பு (அமாவாசை) காலத்தில் பளிச்சென மின்னும் விண்மீன்கள் பழங்குடியின மக்களின் கற்பனைக் கதவுகளைக் கொஞ்சம் அதிகமாகவே திறந்துவிட்டது.
பொதுவாக ஆசியக் கண்டம், தென் துருவத்தில் முடியும் தென் அமெரிக்க கண்டம், வடதுருவத்தில் துவங்கும் வட அமெரிக்க கண்டம் என எல்லா இடங்களிலும் வானமும் விண்மீன்களும் ஒரே மாதிரியான தோற்றமளிக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அப்படி அல்ல, ஆஸ்திரேலியாவில் நமது பால்வெளிமண்டத்தின் திரட்சிகள் தெளிவாகத் தெரியும். அதன் ஊடே இவர்களாகவே விண்மீன் திரள்களை கங்காரு, ஈமு மற்றும் இதர ஆஸ்திரேலிய விலங்குகளாக கற்பனை செய்துகொண்டனர்.
ஒவ்வொரு புனித இரவிலும் அந்த விலங்குகள் பூமிக்கு வந்து தங்களின் குட்டிகளை இங்கே விட்டுவிட்டுச் செல்வதாக அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நீரு என்ற பாம்பு தங்களின் குட்டிகளை பூமியில் விட வரும்போது குனியா மக்கள் அதைப் பார்த்துவிட்டதாகவும். இதனை அடுத்து அந்த நீரு பாம்பை அடித்துக் கொன்றுவிட்டதாகவும். அந்தப் பாம்புதான் இந்த மலையாக மாறிவிட்டது என்றும் கூறுகின்றனர். வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மற்ற விலங்குகள் அனைத்தும் இனிமேல் பூமிக்குப் போகக்கூடாது என்றும் கூறி அப்படியே விண்மீன்களாக மாறி வானிலேயே இருந்துவிட்டன என்று கதை கட்டிச் சொல்வார்கள்.
படைப்பின் அடையாளமாக இந்த மலை கருதப்படுவதால் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இதனைப் புனிதமாகக் கருதுகின்றனர்.
இந்த மலையில் யாரும் ஏறக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் அதை லட்சியப்படுத்தாமல் மலைமேல் ஏற, நீண்ட ஆண்டுகளாக இதனால் மோதல் ஏற்பட்டு கொலைகள் நடந்தன.
பிறகு நீண்ட போராட்டத்தின் காரணமாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இம்மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அங்கு கொலைகள் எதுவும் நிகழவில்லை. மக்களும் பழங்குடியினரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து மலைமீது ஏறுவதைத் தவிர்க்கின்றனர். பழங்குடியின மக்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வோடு கவனித்து, பரிசுகள் கொடுத்து அனுப்புகின்றனர்.
மக்களின் மூடநம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் உள்பட மக்கள் அதிகளவில் அங்கு புழங்கத் தொடங்கினால், அம் மலையின் இயற்கைத் தன்மை அழிந்து விடும் ஆபத்து உண்டு என்பதால், இத்தகைய தடையும் பின்பற்றப்பட வேண்டியது தானே?