சிறார் கதை: மனிதக் காட்சி சாலை
கோவை.லெனின்
அத்தனை மாணவர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆண்டுக்கு ஒரு முறை பள்ளியில் சுற்றுலா செல்வார்கள். அது, சிற்றுலாதான். காலையில் புறப்பட்டால் மாலையில் திரும்பிவிடுவார்கள். ஆனாலும், அந்த ஒருநாள் பொழுது மாணவ-மாணவியருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும்.
இந்த முறை அவர்கள் செல்வது, உயிரியல் பூங்கா. வனவிலங்குகள் தொடங்கி பல விலங்குகளும் பறவைகளும் நிறைந்திருக்கும் இடம். அறிவை வளர்க்கும் பொழுதுபோக்கு என்பதால் ஆசிரியர்களும் அந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தார்கள்.
மாணவ _ -மாணவியர் பயணம் செய்யும் பேருந்து புறப்பட்டது. உள்ளே, உற்சாகமாகப் பாட்டுப்பாடி, கைதட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆசிரியர்களில் ஒருவர், “எல்லாரும் ஜாலியா இருக்கலாம். அதே நேரத்தில் நமக்கு ஆறறிவு என்பதையும் மறந்திடக் கூடாது. நாம பார்க்கப் போகிற இடத்தில்தான் அய்ந்தறிவு உயிரினங்கள் இருக்கின்றன. நாம அதுங்களப் போல நடந்துக்கக் கூடாது” என்றார். மற்ற ஆசிரியர்கள் சிரித்தனர்.
ஆசிரியர் சொன்னதை மாணவப் பட்டாளம் கேட்டுக் கொண்டது. வம்புதும்பு ஏதுமின்றி, உற்சாகப் பயணத்தை மேற்கொண்டார்கள். இரண்டு மணி நேரத்தில், உயிரியல் பூங்காவுக்குச் சென்று சேர்ந்தனர்.
வரிசையில் நின்று உள்ளே சென்றார்கள்.
“மூன்று மூன்று பேராக அணி சேர்ந்து கொள்ளுங்கள். எந்த அணியும் பிரிந்துவிடக் கூடாது” என்றார் இன்னொரு ஆசிரியர். அதுபோலவே மாணவர்கள் நடந்து கொண்டனர்; நடந்து சென்றனர்.
உயிரியல் பூங்காவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாகத் தாவிக் கொண்டிருந்தன.
“டேய்.. உங்க தாத்தா” என்று ஒரு மாணவன் இன்னொரு மாணவனைப் பார்த்துச் சொன்னான்.
“இல்லைடா.. அது உங்க பாட்டன்” என்று பதில் சொன்னான் அந்த மாணவன்.
அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்த சீனியர் மாணவன் ஒருவன், “டேய் அது நம்ம எல்லாருக்குமே முப்பாட்டன்தான்” என்றான். மாணவர்கள் அவனைப் பார்த்தனர். “நீ சொல்ல வந்தது சரிதான். ஆனால், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும். இந்தக் குரங்குகள் நம் முப்பாட்டன்கள் அல்ல.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதர்களான நாமும், பேரினக் குரங்குகள் (Ape) என்று நாம் சொல்லும் சிம்பன்சி, கொரில்லா, ஒராங்குட்டான் போன்றவையும் வெவ்வேறு காலகட்டங்களில் கிளை பிரிந்து வளர்ந்த பேரினங்கள். அதனால் குரங்குகள் எல்லாம் ஒருவகையில் நமக்கு அங்காளி பங்காளிகள்தாம்” என்று ஆசிரியர் விளக்கியதும் மாணவர்கள் சிரித்தனர்.
ஒரு மாணவர் தமிழாசிரியரிடம், “அய்யா.. குல்லா வியாபாரி கூடையில் வைத்திருந்த தொப்பியை ஒரு குரங்கு எடுத்துக்கிட்டுப் போனது என்று பாடம் நடத்துனீங்களே? அந்தக் குரங்கு இங்கே இருக்குமா?” என்று கேட்டான் குறும்பாக.
“இவ்வளவு ஆர்வமா இருக்கியே.. நீயே கேட்டுப் பாருப்பா.. உன் பாஷை அதற்குப் புரியும்” என்றார் தமிழாசிரியர். மாணவர்களிடம் சிரிப்பலை எழுந்தது.
“சார்.. காக்கா இங்கே இருக்குமா?” என்று ஒரு மாணவன் கேட்டதும், “இருக்குமே.. அண்ணாந்து பாரு..” என்றான் இன்னொரு மாணவன்.
வானத்தில் காகங்கள் பறந்து கொண்டிருந்தன.
“இதை உங்க வீட்டு வாசலிலிருந்தே பார்க்கலாம். நாம இதற்காகவா உயிரியல் பூங்காவுக்கு வந்தோம்? இதுவரை நீங்கள் பார்க்காத விலங்குகளைப் பார்க்கத்தான் வந்தோம்” என்றார் ஆசிரியர்.
மயில், மான், நாரை, முள்ளம்பன்றி, நீர்யானை எனப் பல விலங்குகளையும் பறவைகளையும் ஆர்வமாகப் பார்த்தபடியே சென்றனர் மாணவ-மாணவியர்.
“யானைக்கும், நீர் யானைக்கும் இரண்டு வித்தியாசம் சொல்லுங்க?” என ஆசிரியர் ஒருவர் கேட்டார்.
“யானை தரையில் இருக்கும்; நீர் யானை தண்ணீரில் இருக்கும். யானைக்குத் தும்பிக்கை உண்டு. நீர்யானைக்குத் தும்பிக்கை கிடையாது” என்றார் ஒரு மாணவி. ஆசிரியர் உள்பட எல்லாரும் கைதட்டினார்கள்.
“பூனை, புலி, சிறுத்தை மூன்றுக்கும் என்ன ஒற்றுமை?” என்று கேட்டார் இன்னொரு ஆசிரியர்.
“மூன்றுமே கறி, மீன் சாப்பிடும்” என்றாள் ஒரு மாணவி. மற்றவர்கள் சிரித்தனர்.
“ஏன் சிரிக்கிறீங்க? அவள் சொன்னது சரிதான். ஆனால், அதையும் தாண்டி மூன்றுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதுதான் ஒற்றுமை” என்ற அறிவியல் உண்மையை விளக்கிச் சொன்னார் ஆசிரியர்.
பெரிய கூண்டுக்குள் உடம்பில் கோடுகளுடன் இருந்த புலியையும், புள்ளிகளுடன் இருந்த சிறுத்தையையும் மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“இதெல்லாம் காட்டு விலங்குகள். நாம் காட்டின் உள்பகுதிக்குப் போக முடியாது என்பதால் அந்த விலங்குகளை இங்கே வசதியா உலவுற மாதிரி கொண்டு வந்து வைத்து, நாமும் பாதுகாப்பா பார்க்கிற மாதிரி செய்திருக்காங்க. அதனாலதான் இதற்குப் பேரு உயிரியல் பூங்கா” என்று அறிவியல் ஆசிரியர் விளக்கினார்.
அடுத்து, யானையைக் காட்டிய ஆசிரியர், இந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் உள்ள வித்தியாசத்தையும், தண்ணீரில் முதலை பலசாலியாக இருப்பதையும், தரையில் அது பலம் இழந்து விடுவதையும் விளக்கிக் கூறினார்.
மாணவ _ -மாணவியர் அதிக நேரம் நடந்ததால் களைத்து விட்டனர். ஆசிரியர்களுக்கும் களைப்பு ஏற்பட்டது. எல்லாரும் பழச்சாறு குடித்தனர். அப்போது விலங்குகளுக்கு உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு போட்டனர். அவை சாப்பிடுவதை எல்லாரும் ஆர்வமாகக் கவனித்தனர்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்தனர். பறவைகள் சரணாலயம், வெளிநாடுகளைச் சேர்ந்த விலங்குகள் ஆகியவற்றை ரசித்தனர். கடைசியாக, சிங்கங்கள் உலவும் இடங்களுக்கு பூங்காவிற்குரிய பாதுகாப்பு வாகனங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் சென்றனர்.
ஆண் சிங்கங்களும் பெண் சிங்கங்களும் உலவிக் கொண்டிருந்தன. பாதுகாப்பான வாகனத்தில் இருந்தபடியே, சிங்கங்களை ரசித்தனர். காட்டு ராஜாவான சிங்கத்தை நாட்டுக்குள் பார்ப்பதில் ஆச்சரியம் ஏற்பட்டது.
பயனுள்ள சிற்றுலா முடிந்ததும், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு எல்லாரும் பேருந்தில் ஏறினர்.
பயணத்தின்போது அறிவியல் ஆசிரியர், “உயிரியல் பூங்காவுக்கு பழைய பேர் என்ன தெரியுமா? மிருகக் காட்சி சாலை” என்றார்.
ஒரு மாணவன் சொன்னான், “சார்.. நமக்குத்தான் அது ‘மிருகக் காட்சி சாலை’. விலங்குகளுக்கு அது ‘மனிதக் காட்சி சாலை’. நாங்க செய்த சேட்டைகளை எல்லா விலங்குகளும் வேடிக்கை பார்த்திருக்கும்” என்றான்.
ஆசிரியர்களும் மாணவர்களும் ரசித்துச் சிரித்தனர்.