அசத்தும் அறிவியல்!
இத்தனை புரூஸ்லீக்கள் வந்தது எப்படி?
வியப்பூட்டும் பன்முகப் பிரதிபலிப்புகள்
முடி திருத்தும் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள் எப்போதும் நம்மைக் கவர்பவை தானே! நீண்டு தொடரும் பிம்பங்களில் நாம் நிச்சயம் முகம் காட்டி விளையாடுகிறோம் அல்லவா? அவை எப்படி தோன்றுகின்றன? அந்தக் காலத்தில் சார்லி சாப்ளின் நடித்த ‘தி சர்க்கஸ்’ படத்திலும், பின்னர் புருஸ்லீ நடித்த ‘எண்டர் தி டிராகன்’ திரைப்படத்திலும் இடம்பெற்ற கண்ணாடிக் காட்சிகள் பெரும் புகழ்பெற்றவை. அறிவியல் கண்காட்சிகளில் கண்காட்சிகளில் கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அரங்குகள் வெறும் நகைப்புக்காக மட்டும் அல்ல. அதன் பின் உள்ள அறிவியலை அறிந்து கொள்ளவும் தான்.
பன்முகப் பிரதிபலிப்புகளைப் (Multiple Reflection) புரிந்துகொள்வதும் காட்சிப்படுத்துவதும் கடினம். உங்களிடம் ஒரு தட்டையான கண்ணாடி இருந்தால், பொருளிலிருந்து வரும் ஒளி, கண்ணாடியில் ஒரு முறை பிரதிபலிக்கும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகள் இருந்தால், நீங்கள் பன்முகப் பிரதிபலிப்புகளை உருவாக்கலாம்.
தட்டையான (Plain)கண்ணாடிகள் பிரதிபலிக்கும் வகையில் மேற்பரப்பைக் கொண்டுள்ளன. அவை கண்ணாடியின் முகத்திலிருந்து 180 டிகிரிக்குள் ஒளியைத் திருப்பித் தருகின்றன. இந்தக் கண்ணாடிகளை குளியலறைகள், படுக்கையறைகள் மற்றும் வாகனங்களில் நாள்தோறும் பயன்படுத்துகிறோம். ஒரு தட்டையானக் கண்ணாடியில் பார்க்கும்போது, அது பிரதிபலிக்கும் பொருள்களின் இட வல மாற்றமடைந்த பிம்பத்தை நாம் பார்க்கிறோம்.
‘இரண்டு கண்ணாடிகளின் கோணம் ஒரு பொருளின் பிரதிபலிப்பை எவ்வாறு மாற்றுகிறது?’ என்பதை ஒரு சோதனையின் மூலம் இப்போது பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
- பாகைமானி
- இரண்டு ஒரே மாதிரியான, சிறிய சமதளக் கண்ணாடிகள்
- சிறிய பொருள் (நாணயம், சிறிய உருவம் போன்றவை)
- காகிதத் துண்டு
- பேனா
- ஒட்டும் பசை நாடா
செய்முறை
1. படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இரண்டு கண்ணாடிகளையும் மடக்கித் திறக்கும் கதவுகள் போல் பசைநாடாவால் ஒட்டவும். இதைச் செய்ய திறந்து மூடுவதற்கு வசதியாக, இரண்டு விளிம்புகளுக்கு இடையில் (ஒரு அங்குலத்தில் 1/16 பங்கு) சிறிது இடைவெளி விட வேண்டும்.
2. ஒரு காகிதத்தில் பாகைமானியைப் பயன்படுத்தி 30, 36, 45, 60, 90, 120 மற்றும் 180 டிகிரி கோணங்களைக் குறிக்கவும்.
3. குறிக்கப்பட்ட கோணங்களின் மேலே உங்கள் கண்ணாடி கதவுகளை வைக்கவும்.
4. நீங்கள் சோதிக்கும் முதல் கோணம் 180 டிகிரியாக இருக்கும்.
5. கண்ணாடியின் நடுவில் உங்கள் பொருளை வைக்கவும். எத்தனை பிம்பங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்?
6. இரண்டு கண்ணாடிகளுக்கு இடையில் பொருளைச் சரியாக நடுவில் வைத்து, கண்ணாடியைப் பாகைமானியால் குறிக்கப்பட்ட மற்ற கோணங்களில் ஒவ்வொன்றாக நகர்த்தவும்.
7. 180 டிகிரிக்கு அடுத்து 120 டிகிரி அடுத்து 90 டிகிரி அடுத்து 60, 45. 30…
கவனிக்க வேண்டியவை
- ஒவ்வொரு கோணத்திலும் எத்தனை பொருள்களைப் பார்க்கிறீர்கள்?
- நீங்கள் எத்தனை பொருள்களைப் பார்ப்பீர்கள் என்பதைக் கணிக்க கோணத்தில் ஏதேனும் உதவி உள்ளதா?
- பிரதிபலித்த ஒவ்வொரு பிம்பமும் அதே பிரகாசமா?
அடுத்த சோதனை
ஒரு காகிதத்தில் ஒரு சொல்லை எழுதி, கண்ணாடிகளுக்கு இடையில் 60 டிகிரியில் வைக்கவும். இரண்டாவது பிரதிபலிப்பை அதாவது (பிரதிபலிப்பின் பிரதிபலிப்பு) உன்னிப்பாகப் பாருங்கள். நீங்கள் எழுதிய சொல்லைப் படிக்க முடிகிறதா? இது ஏன் நடக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
விளக்கம்
1. நீங்கள் கண்ணாடிகளை நெருக்கமாக நகர்த்தும்போது (அதாவது அவற்றுக்கு இடையேயான கோணத்தைக் குறைக்கும் போது) பிம்பங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதைக் காண்பீர்கள்.
2. பிரதிபலிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவை மங்கலாகும்.
3. பிரதிபலிப்பின் பிரதிபலிப்பைப் பார்க்கும்போது, கண்ணாடியில் உள்ள உரையைப் படிக்க முடியும்.
4. கண்ணாடிகள் பிரதிபலிக்கும் போது, அந்த பிம்பம் இடவலமாகத் திரும்பி (Reverse) இருக்கும், ஆனால் நீங்கள் எதையாவது இரண்டு முறை பிரதிபலித்தால், அது நேராகத் தெரியும்.
5. ஒவ்வொரு கண்ணாடிக்கும் ஒளி நேர்கோட்டில் செல்வதால், ஒளியானது பொருளிலிருந்து உங்கள் கண்ணை அடையும் முன் கண்ணாடிகளுக்கு இடையே பல முறை முன்னும் பின்னுமாகத் தோன்றும்.
6. நீங்கள் பார்க்கும் பொருள்களின் எண்ணிக்கைக்கும் கண்ணாடிகளை வைத்திருக்கும் கோணத்திற்கும் தொடர்பு உண்டு. பிம்பங்களின் எண்ணிக்கைக் கணக்கிட கீழ்காணும் சூத்திரம் உதவும்.
பிம்பங்களின் எண்ணிக்கை = 360/, -1
இதில் தீட்டா (,) என்பது
கண்ணாடிகள் வைக்கப்பட்டிருக்கும் கோணத்தைக் குறிக்கும்.
எ.கா:
கண்ணாடிகளை 90 டிகிரியில் வைத்தால்…
360 /1 -1 =4-1 =3 பிம்பங்கள்
இந்த சூத்திரத்தில் 360 எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? கோணங்களை 360 டிகிரி என்ற அளவில் தானே பயன்படுத்துகிறோம். அதனால் தான் சூத்திரத்தில் 360 வந்தது.
7. கண்ணாடிகளுக்கு இடையே உள்ள கோணத்தைக் குறைத்தால் நீங்கள் அதிக பிம்பங்களைப் பார்க்கலாம்.
8. கண்ணாடிகள் 0 டிகிரி கோணத்தை நெருங்க நெருங்க மேலும் மேலும் பிம்பங்கள் தோன்றும். 0 டிகிரி கோணத்தில், அதாவது இரண்டு கண்ணாடிகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் போது, எண்ணற்ற பிரதிபலிப்புகள் (Infinite) தோன்றுகின்றன.