புரியாத புதிர் அல்ல! நெருப்புச் சுடர் சாமியா?
சரவணா ராஜேந்திரன்
இமாச்சலப் பிரதேசம் கங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் 8 இடங்களில் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது, நெருப்பு எரியும் பகுதியில் கோவில் போன்ற ஒன்றை அமைத்து பல்வேறு சாமி பெயர்கள் வைத்துள்ளனர்.
நமது தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளான மய்யப் பகுதியிலும் காவிரி டெல்டா பகுதிகளிலும் அவ்வப்போது திடீரென்று தரையில் இருந்து தீச்சுவாலை எழுந்து அடங்கும், இதனை ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பார்கள். தரையின் ஆழத்தில் உள்ள இயற்கை எரிவாயு இடைவெளி கிடைக்கும் இடங்களில் வெளிவந்து இவ்வாறு தீப்பிடிக்கும்.
ஆனால், இமயமலையில் இந்த தீச்சுவாலை ஏற்படுவது வித்தியாசமானது.
இமயமலை என்பது நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் மகள் என்று கூட கூறலாம். மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை உருவாவதற்கு 120 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி விட்டது, ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து பிரிந்த இந்திய நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் மெல்ல மெல்ல நகர்ந்து ஆசியக் கண்டத்தில் மோதியதால் தான் இமய மலை உருவாகியது. இமயமலை என்பது நாம் நினைப்பது போல் கடினமான பாறைகளால் ஆனது கிடையாது. இரண்டு நிலப் பரப்புகள் மோதலால் ஏற்பட்ட மேடுதான் அது. அதனை நன்கு பார்த்தாலே தெரியும். அலைகள் மேலெழும்பியது போல் தோன்றும்.
முக்கியமாக இமயமலைத் தொடர் மணற் பாறைகளால் ஆனது. இதன் மேலடுக்கு பூமியின் மிகவும் ஆழத்தில் உள்ள பகுதி வெளிவந்து உருவானது, இந்தப் பகுதிகளில் காற்றறைகள் கோடிக்கணக்கில் உள்ளன. இந்த காற்றறைகளில் பூமியின் மய்யத்தில் இருந்த வாயுக்கள் நிறைந்துள்ளன.
கிட்டத்தட்ட நமது வீட்டில் உள்ள எரிவாயு உருளை போன்றதுதான். ஆனால், இந்தக் காற்றறைகள் ஆயிரம் கோடிக்கணக்கான சிலிண்டர்களில் உள்ள எரிவாயுவைக் கொண்டவை. இந்தக் காற்றறைகளில் உள்ள வாயுக்கள் தொடர்ந்து ஏற்படும் அழுத்தம் காரணமாக இடைவெளிகளில் வெளிவரத் துவங்கும். இப்படி வெளிவரத் துவங்கும்போது அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கும். இமயமலையில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வாயுக்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், இந்தியப் பகுதிகளில் இருக்கும் மூடநம்பிக்கையும், வைத்துப் பிழைக்கும் கூட்டமும், இதனை ஜுவாலா முகி (நெருப்பு முகம் கொண்ட சாமி) என்ற பெயரில் கோவில் கட்டி இதன் மூலம் மக்களை ஏமாற்றி வருவாய் பார்க்கத் துவங்கி விட்டது.
இதே காற்றறைகளில் உள்ள வாயுக்களைக் கொண்டு சீனா, திபெத் பீடபூமியில் ரயில் தண்டவாளம் போட பயன்படுத்தியது. மேலும் பல இடங்களில் பெரிய குழாய்களை அமைத்து அந்த வாயுக்களை வெளிக்கொண்டு வந்து நவீனத் தொடர்பே இல்லாமல் வாழும் திபெத்தின் இமயமலைக் கிராமங்களில் உணவு சமைக்கவும், குளிரில் இருந்து வெப்பத்தை பெற்றுக் கொள்ளவும் பயன்படும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் ரயில் தண்டவாளங்களில் பனி மூடாமல் இருக்கவும், இந்த வாயுவினால் தரைப்பகுதி உயராமல் இருக்கவும் பல இடங்களில் ஆழமான துளைகளைப் போட்டு வாயுக்களை வெளியேற்றி பல பாதுகாப்பு அரண்களையும் செய்துள்ளனர். ஆனால், இந்தியாவிலோ இதுகுறித்து மூடக் கதைகளைப் பரப்பி வைத்துள்ளனர்.
சக்தி என்ற பெண்சாமி இறந்த பிறகு அதன் கணவரான சிவன் அந்த உடலை எடுத்துகொண்டு ஆடினாராம். அப்படி ஆடும்போது இறந்துபோன சாமியின் உடல் இந்தியாவின் பல இடங்களிலும் விழுந்ததாம். அப்படி விழுந்த உடலின் நான்கு பாகங்கள்தான் இந்த ஜுவாலாமுகி சாமி என்று கதை விட்டுகொண்டு இன்றும் பெருங்கூட்டம் இங்கே செல்கிறது.
இந்த ஜுவாலா முகி கோவிலில் வித்தியாசமாக இருக்கும். எல்லா இந்துக் கோவிலிலும் கருவறைக்கு உள்ளே சிலை இருக்கும். ஆனால், இங்கே சிலை இருக்காது. தீச்சுவாலை வரும் இடங்களை எல்லாம் சிறிய அறைபோன்று செய்து வைத்துள்ளனர்.
ஏன் அங்கே சிலை வைக்க முடியாது என்றால் தொடர்ந்து வரும் தீச்சுவாலையால் கற்சிலைகள் சிதைந்துபோகும். ஆகவே, அங்கு சிலைகளை வைக்காமல் 8 இடங்களில் தீச்சுவாலை வரும் அறைகளுக்குப் பல்வேறு சாமி பெயர்களை மட்டும் எழுதி இந்தச் சாமி இங்கு தீச்சுவாலையாக உள்ளார் என்று கதைவிட்டுள்ளனர்.