முதியோரை வாழ்த்துவோம்
எங்கள் வீட்டுக் கூடத்தில்
எழிலாய் மீசைத் தாத்தாவும்
சிங்கம் போலே வீற்றிருப்பார்;
சிரித்தால் பொக்கை வாயர்தான்;
அங்கே அருகே வெற்றிலையை
அழகாய் மடிக்கும் பணியினிலே
தங்கப் பல்லைக் கொண்டிட்ட
தாயிப் பாட்டி அமர்ந்திருப்பாள்;
படுக்கச் செல்லும் முன்னாலே
பாட்டி நீதிக் கதைசொல்வாள்;
அடுக்க டுக்காய் விடுகதைகள்
அழகாய்த் தாத்தா கூறிடுவார்;
வீட்டில் தாத்தா பாட்டியுடன்
விளையா டுதலே கொண்டாட்டம்;
பாட்டி தாத்தா இல்லாதோர்
பாடோ என்றும் திண்டாட்டம்;
மூத்தோர் கூறும் அறிவுரையை
முழுதாய் நெஞ்சுள் ஏற்றிடுவோம்;
மூத்தோர் முதியோர் யாவரையும்
முதலில் போற்றி வாழ்த்திடுவோம்!<
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை