உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (PHILIPPINES)
சந்தோஷ்
2018ஆம் ஆண்டு (7.7.2018) டவாவோ நகரில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவர் ரோட்ரிகோ டுட்டெர்டே உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அறைகூவல் விடுத்துப் பேசினார். அது எதைப் பற்றியது தெரியுமா பிஞ்சுகளே! “கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சாட்சி இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினார். பிறகு, அந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில், “கடவுளைப் பார்க்க முடியும், பேச முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆதாரங்களைக் கொடுத்தால் உடனடியாகத் தான் பதவி விலகத் தயார்’’ என்று கூறியிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் பார்வையில் உலகத்தைப் பார்க்கும் தலைவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அதன்பின் 2021இல் அவர் அரசியலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நாட்டில் நாள்தோறும் எரிமலை வெடிப்பும் பூகம்பமும் நிகழ்ந்துகொண்டே இருக்-கும். பல்வேறு இன மக்களை உள்ளடக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றிப் பார்ப்போம்.
புவியியல்:
- தலைநகரம்: மணிலா
- பரப்பளவு: 3,00,000 சதுர கிலோ மீட்டர்கள்.
- உலகின் அய்ந்தாவது நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட நாடு.
- புவி அமைப்பில் 1160 40` மற்றும் 1260 34` கிழக்கு நெடுங்கோட்டிற்கும், 400 40` மற்றும் 210 10` வடக்கு அகலக் கோட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது.
- மூன்று வகையான காலநிலையும் நிலவும்.
- அதிக அளவு வெப்பநிலை 26.60சி (79.90தி) குறைந்த அளவு வெப்பநிலை 18.30சி (64.90தி).
அமைவிடமும் எல்லையும்:
- தென்கிழக்கு ஆசியாவிலுள்ள, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு.
- இந்நாடு மொத்தம் 7,107 தீவுகளைக் கொண்டுள்ளது.
- வடக்கே தாய்வானும், மேற்கே தென்சீனக் கடலும், தென்மேற்கே புரூணை தீவுகளும், தெற்கே செலேபெஸ் கடலும், கிழக்கில் பலாவு என்னும் தீவு நாடும் அமையப் பெற்றுள்ளது.
வரலாறு:
- 709,000 ஆண்டுகளுக்கு முன்பே பிலிப்பைன்ஸில் ஹோமினியர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
- கி.மு.2200இல் ஆஸ்ட்ரோனேசியர்கள் இத்தீவினை அடைந்தனர்.
- கி.மு.1000 வாக்கில் தீவுக் கூட்டத்தில் வசிப்பவர்கள் நான்கு வகையான சமூகக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர்.
- பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட லாகினா செப்புத் தகடு குறிப்பு கி.மு.1300களில் கடலோரக் குடியிருப்புகள் வர்த்தக மய்யங்களாகச் செயல்பட்டு வந்துள்ளதைக் காட்டுகிறது.
- 10ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் இந்திய கலாச்சாரப் பண்புகள் இந்து அரசர் மஜா பாஹித் பேரரசு வழியாகப் பரவியிருந்தது.
- 15ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் சுலு தீவுக் கூட்டத்தைக் கைப்பற்றி நிருவாகம் செய்தனர்.
- 10 முதல் 16ஆம் நூற்றாண்டுகளில் பிலிப்பைன்ஸில் பல்வேறு அரசியல் அமைப்புகள் ஆதிக்கம் செய்துள்ளன. அவை மைனிலா, டோண்டோ, நமயன், பங்கசினன், செபு, புடுவான், மகுயிண்டனாஸ், லானாவ் ஆகியவையாகும்.
- 14 முதல் 16ஆம் நூற்றாண்டுகளில் உள்நாட்டுப் போர் உச்சத்திலிருந்தது.
- 1521இல் ஸ்பானியர்கள் தீவுகளைக் கைப்பற்றி உரிமை கோரினர்.
- 1565 முதல் 1821 வரை ஸ்பானியர்கள் பிலிப்பைன்சை மெக்சிகோவை தளமாகக் கொண்டு ஆண்டுவந்தனர்.
- 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டத்தில் உள்நாட்டுப் போரினால் ஸ்பெயின் சில பகுதிகளையும், சுலு சுல்தான்கள் சில பகுதிகளையும் நிருவகித்தனர்.
- அதன்பின் வந்த காலகட்டத்தில் அமெரிக்க போர்ப் படைகள் நுழைவினால் புதிய குடியேற்றங்கள் நடைபெற்றன.
- 1898இல் புரட்சியாளர் அகுனால்டோ ஸ்பெயின் _ அமெரிக்கப் போரைத் தொடங்கி நடத்தினார். 1898 ஜூன் 12இல் ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார்.
- 1899இல் சில தீவுகள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்கா பிலிப்பைன்ஸின் சுதந்திரத்தை அங்கீகரிக்காததால் மீண்டும் போர் நடைபெற்றது. போரில் வென்ற அமெரிக்காவின் அரசாங்கம் அங்கு நிறுவப்பட்டது.
- டாஃப்ட் குழுவின் ஆய்வுக்குப் பின் 121 அரசாங்கச் செயல்பாடுகள் பிலிப்பைன்ஸில் செயல்பட அனுமதி அளித்தது.
- 1935இல் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கு காமன்வெல்த் அந்தஸ்து வழங்கப்பட்டது.
- 1942 இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அரசு ஜப்பானியப் பேரரசின் பொம்மை அரசாகச் செயல்பட்டது.
- 1945இல் ஜப்பானியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1946இல் மானுவல் ரோக்சாஸ் குடியரசுத் தலைவராக இருந்தபோது மணிலா ஒப்பந்தத்தின் மூலம் ஒரு சுதந்திர நாடாக அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டது.
அரசு முறைகள்:
ஃபெர்டினாண்ட் மார்க்கோ
- குடியரசுத் தலைவர் ஆட்சி முறையைக் கொண்ட ஜனநாயக அமைப்பு முறை.
- நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் செயல்படுகிறார்.
- குடியரசுத் தலைவர் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
- இரு அவைகள் கொண்ட அமைப்பு முறை, செனட் சபை மேலவையாகவும், பிரதிநிதிகள் சபை கீழவையாகவும் செயலாற்றுகின்றன.
- குடியரசுத் தலைவர்: ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் (ஜூனியர்) (Ferdinand Marcos)
- செனட் சபையின் உறுப்பினர்கள் 24 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் சட்டமன்ற மாவட்டங்களிலிருந்து துறை வாரியான பிரதிநிதித்துவத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- குடியரசுத் தலைவரால் தேர்வு செய்யப்படும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதி அதிகாரத்தினைச் செயல்படுத்துவர்.
பொருளாதாரம்:
- நாணயம்: பிலிப்பைன்பெசோ (Philippinepeso)
- மின்னணுக் கருவிகள், ஆடையணிகள், செம்புத் தயாரிப்புகள், தேங்காய் எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், பழங்கள் முதலியவை முதன்மையான ஏற்றுமதிப் பொருள்களாகும்.
- விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சேவைகள் மற்றும் உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறை கொண்ட நாடு.
- சுற்றுலாத் துறையும், ஏற்றுமதித் துறையும் பொருளாதாரத்தின் அடித்தளமாகப் பார்க்கப்படுகின்றன.
- ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது.
மொழியும் மக்களும்:
- மக்கள் பிலிப்பினேயர் என அழைக்கப்-படுகின்றனர்.
- மக்களின் அலுவல் மொழியாக பிலிப்பினோவும் ஆங்கிலமும் பேசப்படுகின்றன.
- மேற்கூறிய இரு மொழிகளும் அரசாங்கம், கல்வி, ஊடகம், வணிகத்திற்கும் பயன்படுத்தப்-படுகின்றன.
- 175 தனிப்பட்ட மொழிகளைக் கொண்ட இனக் குழுக்கள் வாழ்ந்து வருவதால், அவரவர் மொழிகளும் பேசப்படுகின்றன.
- மக்களின் திருவிழா கொண்டாட்டங்கள் பிலிப்பைன்ஸ், மலாயா வழிமுறைகளில் நிகழ்த்தப்படுகின்றன.போக்குவரத்து:
- மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டதால் போக்குவரத்து கட்டமைப்பில் வளர்ச்சி குன்றியதாக உள்ளது.
- பேருந்துகள், வாடகைக் கார்கள், மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளன.
- ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குச் செல்ல வான்வழிப் பயணம் செயல்பாட்டில் உள்ளது.
- வானூர்தி போக்குவரத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு அளவில் ‘பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் சிறப்பாக இயக்கப்-படுகிறது.
- தீவுக் கூட்டங்களை இணைக்கும் வகையில் படகுப் போக்குவரத்தும் முக்கியமானது.
விளையாட்டு:
- குத்துச்சண்டை, சேவல் சண்டை, கைப்பந்தாட்டம், கால்பந்து, கராத்தே, இறகுப் பந்தாட்டம், சதுரங்கம் எனப் பல்வேறு விளையாட்டுகளும் மக்களால் விளையாடப்-படுகின்றன.
- கூடைப்பந்தாட்டத்தில் தொழில்முறை சார்ந்த வீரர்கள் பலரும் உள்ளனர்.
- மக்களின் மரபுவழி விளையாட்டுகளான லக்சங்பகா, படின்டெரோ, பிகோ ஆகியவை சிறுவர் அளவில் விளையாடப்படுகின்றன.
- ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.
உணவு முறைகள்
- அரிசி முக்கிய உணவு.
- அடோபா (Adobo) (பன்றிக் கறியை சோயா சாஸ் கலந்து வறுத்த உணவு), கினில்லாவா(Kinilaw) (மீன்களுடன் காய்கறி வறுத்த உணவு), பாலாட்(Balut) (வாத்து முட்டையின் மத்திய பகுதியில் வேகவைத்த உணவு), இன்னசால் (Inasal) (வறுத்த கோழி உணவு), பன்றியின் பாகங்களை வினீகரில் ஊற வைத்த உணவு, கோழி இறைச்சியாலான சிசரோனை (Chicharon) வறுவல் என இறைச்சி உணவுகளை முதன்மையாகக் கொண்டு சாப்பிடுகின்றனர்.
பிற தகவல்கள்:
- பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையம் தலைநகர் மணிலாவில் உள்ளது.
- அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் உலகளவில் மூன்றாமிடம்.
- நூற்றுக்கணக்கான எரிமலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 20 முறை நிலநடுக்கம் ஏற்படுகிறது.
- ஸ்பெயின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக இத்தீவுக்கு 1542ஆம் ஆண்டு ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ்(Ruy Lopez de villalobos) என்பவர் பிலிப்பைன்ஸ் தீவுகள் என்று பெயரிட்டார்.
- உலகத்தில் அதிகளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யும் நாடு.
- இங்குள்ள பலாவன் தீவு உலகத்திலேயே அழகான தீவு என அழைக்கப்படுகிறது.
சுற்றுலாத் தலங்கள்:
- உலகிலேயே சிறந்த பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட நாடு. கடற்கரைகள், தீவுகள், மழைக்காடுகள், மலைகள் உடைய இயற்கை வளம் சூழ்ந்த பகுதியாகும்.
- மயோன் எரிமலை, மலாபாஸ்குவா தீவு, வெள்ளைக் கடற்கரை, பிலிப்பைன்ஸ் கழுகு மய்யம், சாக்லேட் ஹில்ஸ், பனாவ் அரிசி மொட்டை மாடிகள், சாண்டியாகோ கோட்டை போன்ற பல இடங்கள் ஆசியாவின் பல பகுதிகளிலிருந்து பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாகும்.
- நாட்டின் வழக்கத்தில் உள்ள சினுலாக் திருவிழா, ஹிகாண்டஸ் திருவிழா, கடயவான் திருவிழா போன்றவை சுற்றுலா செல்வோரைக் கவரக்கூடியன.
- உலகின் சிறந்த டைவிங் தலங்கள் உள்ளன. கடல் உணவுகள் சிறப்பு பெற்றவை.