புரியாத புதிர் அல்ல! : மிதக்கும் வீட்டில் மனித எலுக்கூடுகள்
சரவணா ராஜேந்திரன்
தென் அமெரிக்காவின் பெரு மற்றும் பொலிவியாவின் எல்லையில் உள்ள அந்தீசு மலைத் தொடரின் என்டோர்கிக் அல்டிபிலனோ (endorheic Altiplano) பகுதியின் வடமுனையில் பிரதேசத்தில் பெரு மற்றும் பொலிவியா எல்லைகளுக்கு இடையில் கடுமையான பாலைவனத்தின் எல்லையில் உள்ளது இந்த நன்னீர் ஏரி.
‘டிடிகாகா’ ஏரி (Lake Titicaca) 41 தீவுகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் சில தீவுகள் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. மிகவும் அதிசயமான ஏரி என்று இதைக் கூறுவதற்குக் காரணம், இந்த ஏரியில் காய்ந்த புற்களால் ஆன மிதக்கும் வீடுகள் உண்டு.
குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இறந்துவிட்டால் அந்த காய்ந்த புல் வீட்டில் அந்த உடலை வைத்து ஏரியில் மிதக்க விட்டு விடுவார்கள். பிறகு வேறு வீட்டை கட்டிக்கொள்வார்கள். கி.பி.1500களில் அய்ரோப்பியர்கள் முதன் முதலில் இந்த ஏரியைக் கண்டுபிடித்தனர். அப்போது மிதந்துகொண்டு இருந்த சில காய்ந்த புல்வீடுகளை ஆய்வு செய்த போது சில எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டனர். முதலில் அவர்களுக்கு இது மிகவும் அச்சமூட்டும் விதமாக இருந்தாலும் பிறகு பூர்வீக மக்களோடு தொடர்பு கொண்டு இந்த எலும்புக்கூடுகள் குறித்துக் கேட்டு அறிந்த போது இறந்தவர்களின் உடலை அப்படியே புல்வீட்டுக்குள் வைத்து வீடுகளை ஏரியில் மிதக்கவிடுவது தெரியவந்தது.
செவ்விந்தியர்களின் மூதாதையர்களான மாயா இனமக்கள் இயற்கை சக்திகளை மகிழ்விப்பதாக எண்ணிக் கொண்டு போரில் கைது செய்யப்பட்டவர்களையும் தங்கள் குழுவில் உள்ளவர்களையும் பலி என்கிற பெயரில் கொடூரமாகக் கொலை செய்துவந்தனர். அப்போதே நாகரிகமாக வாழ்ந்த இன்கா சமூகத்தின் ஒரு சிறிய மக்கள் குழு அமைதியான வாழ்க்கையை எதிர்நோக்கி 11ஆம் நூற்றாண்டில் இந்த ஏரியில் வாழ்க்கையைத் துவங்கினர்.
கடுமையான நீண்ட மலைத்தொடரையும் மற்றும் அதன் பிறகான கடுமையான பாலையையும் தாண்டி இந்த ஏரிக்கு வரவேண்டி உள்ளதால் இந்த ஏரியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைத் தாக்க யாருமே முயலவில்லை. இவர்களின் முக்கிய உணவு இந்த ஏரியின் வாழும் மீன்களும் ஏரிக் கரைகளில் விளையும் சோளம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களும்தான். நாகரிகமாக வாழ்ந்த இவர்களைப் பற்றி, பிற்காலத்தில் வந்தவர்கள் இவர்களின் நம்பிக்கைகளை வைத்து பல்வேறு கட்டுக்கதைகளை உருவாக்கி விட்டனர். மற்ற படி, இன்று தென்னமெரிக்காவின் முக்கிய சுற்றுலா பகுதியக இந்த ஏரி உள்ளது.