நிகழ்வு: சின்னமனூரில் சிறார் கொண்டாட்டம்!
பாலு மணிவண்ணன்
வீட்டு முற்றத்தில் செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் சாரா. யாரோ, தன் பின்னாடி வந்து ஊஞ்சலைப் பிடித்து நிறுத்தவும் சட்டென்றும் இறங்கிப் பார்த்தால்?…… ஜியா!
“என்னடி வீட்டுப் பக்கமே ஆளைக் காணோம்?”
“ஊருக்கு கிளம்பிகிட்டிருந்தேன்டி”
“எந்த ஊரு?”
“சின்னமானூரு. எங்க அண்ணா, அவங்க ஸ்கூல்ல ஒரு ஃபங்ஷன், கட்டாயம் நீ வான்னு கூப்பிட்டான் அதான்!”
“என்னவாம்?”
“சிறார் கலை, இலக்கியக் கொண்டாட்டம்னு செம ஜாலியா இருக்குமாம்.”
எது? பாட்டு, டான்ஸ், பளிஞ் சடுகுடு மாதிரியா
“ம்ஹூம்”
“கோலம்… கோலாட்டம் மாதிரியா?”
“சீச்சீ… அதெல்லாம் பொம்பளப் புள்ளைங்களுக்கு மட்டும்னு நடத்துவாங்க… பசங்க எல்லாம் கோலம் போடக் கூடாதுங்கிற மாதிரி! இது ஆண், பெண் பேதமில்லாமல் நடத்துற நிகழ்ச்சி. இது வேற”
“கலை, இலக்கியக் கொண்டாட்டம்ன்னா வேற என்னடி?”
“புக் வாசிக்க வைக்கிறாங்க”
“புக்…கா? நம்ம மிஸ்தான் புக்க வாசி வாசின்னு
உயிரை எடுக்குறாங்க, அங்கயுமா?”
“அங்க… நமக்குப் பிடிச்சமாதிரி கதைகளைக் கொடுத்து படிக்கச் சொல்றாங்க. புத்தகம் படிச்சதும் அதைப் பற்றி சொல்லச் சொல்றாங்க.”
“உடனே எப்படி மனப்பாடம் பண்ணிச் சொல்ல முடியும்?”
“ஒன்னிய யாரு மனப்பாடம் பண்ணச் சொல்றா? நாமளே நம்ம இஷ்டத்துக்கு கத விடலாம். புத்தகம் படிக்க 3,4 வாரம் அவகாசமும் உண்டு. விழா நடக்குற கடைசி நாள் நம்ம போகணும்.”
“ம்?”
“ம்! போன முறை தர்மபுரியில நடந்தப்போ எங்கக்காவுக்கு முதுகுல தட்டிக் குடுத்து, வேற ஒரு புக் ப்ரைஸா குடுத்தாங்களாம்.”
“வேற ஒன்னும் குடுக்கலியா?”
“ஒரு மூனாவது படிக்கிற பொண்ணு, இவ்வளவு அழகா கதை சொல்றியேன்னு பாராட்டியிருக்காங்க.”
“பார்க்கப் போன எல்லாத்துக்கும் பரிசு குடுத்தாங்களா?”
“எல்லாத்துக்கும் புத்தகம் குடுக்கல; நல்ல அனுபவம் குடுத்தாங்கன்னு எங்க அக்கா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி ஒவ்வொரு ஊராப் போயி இப்பிடி நம்மளுக்கு படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்திட்டு வராங்களாம்!
அப்பிடிப் படிச்சு, இப்ப கதை எழுதுற ஒரு அக்கா இந்த முறை சின்னமனூரில் வந்து பேசப் போறாங்க.
சும்மா செல்ல (Cell) நோண்டிக்கிட்டிருக்குறத விட்டுட்டு புத்தகத்தைப் படிச்சா பகுத்தறிவு வளரும்னு சொன்னாங்க.
இந்த முறை 18 புத்தகங்களைப் பற்றி 18 பேர் பேசப்போறாங்க. அதில் நம்ம பெரியார் பிஞ்சு வெளியீடுகளும் இருக்கு
“சரி, வேற என்ன எல்லாம் உண்டாம்?”
“ஒரு அக்கா கோமாளி வேடம்போட்டு ஒரே ஜாலி பண்ணுவாங்களாம். இதை எல்லாத்தையும் நடத்துறது நம்ம மொட்ட இனியன் மாமா”
“ஆஹா… அப்படின்னா நானும் எங்க அம்மா கிட்ட கேட்டுட்டு சின்னமனூருக்குக் கிளம்புறேன். ஜூலை -30 அங்க போய் கொண்டாடுகிறோம்.”