மாணவராட்சி
ஓட்டுப்போடும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்
நிவிமகி
தேர்தல் என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது மாநில _ ஒன்றியத் தேர்தல்கள் அல்லது கல்லூரி, தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் தேர்தல்களே. அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலையும் பார்த்திருப்பீர்கள். இவை எல்லாவற்றிலும் வாக்களிப்பவர்கள் இளைஞர்களில் இருந்து முதியவர்கள் வரைதான். தேர்தல், வாக்களிப்பு இவற்றைப் பற்றி பாடப் புத்தகத்தில் வருவதை மட்டுமே சிறுவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். இது தவிர வேறு எவ்வித விழிப்புணர்வும் அவர்களிடத்தில் இல்லை. ஆனால், இவற்றைத் தகர்க்கும் வகையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் மாணவர்களிடையே வாக்களிப்பு, தேர்தல் முறைகள் மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆண்டு தோறும் தேர்தல் நடத்துகின்றனர்.
ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஆறு ஆசிரியர்களும் 140 மாணவர்களும் உள்ளனர். இந்த ஆண்டுக்கான மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத் தலைவர், விளையாட்டுத் தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய அய்ந்து பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி மனுத்தாக்கல் நடைபெற்றது, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிரச்சாரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 6.7.2022 அன்று காலை 10:00 மணி முதல் மாலை அய்ந்து முப்பது மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் மாணவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளும் வாக்களிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி மொத்தம் 413 பேர் வாக்களித்தனர்.
வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம், சின்னங்கள் ஒதுக்கீடு, விரலில் மை என்று சட்டசபைத் தேர்தல் போல் நடத்தியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் நடைபெறும். பணியைச் சரிவரச் செய்யாத நிருவாகிகள் மீது உறுப்பினர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
வெற்றி பெறும் நிருவாகிகள் தினமும் காலை தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கம், உணவு, விளையாட்டு தொடர்பான பணிகளைச் செய்வார்கள் என்று தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிளமெண்ட் விமல் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கடமை பற்றி இன்னும் சரிவரப் புரிந்துகொள்ளாத மக்கள் இருக்கும் நமது நாட்டில் இப்படி சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு ஜனநாயகக் கடமை மற்றும் அதன் மூலம் விழிப்புணர்வைப் பெருக்கும் வகையில் தேர்தல் நடத்துவது பாராட்டத்தக்கது.