சிறுவர் கதை
கண்ணிர் வடித்த சிலி
வசீகரன்
ஒரு குளம் இருந்தது. அதில் எப்போதும் நீர் நிரம்பியே இருக்கும். சுற்றிலும் மரம் செடி கொடிகள் என எழிலாக இருக்கும்.
அந்தக் குளத்தில் சிலி என்கிற மீனும், கண்ணு என்கிற தவளையும் நண்பர்களாக இருந்தன. சிலி, கண்ணுவை ஒருபோதும் பிரிய விரும்புவதில்லை. ஆனால், கண்ணுவோ அடிக்கடி குளத்தை விட்டு வெளியேறி ஊர் சுற்றக் கிளம்பிவிடும். இது சிலிக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது.
“நீ அடிக்கடி எங்கே காணாமல் போய் விடுகிறாய்?’’ என்று சிலி கோபமாகக் கேட்டது. அதற்கு கண்ணு, “அதுவா… நான் குளத்தை விட்டு வெளியேறி சுற்றிவிட்டு வருகிறேன். அங்கே எனக்கு உன்னைப் போல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு நேரம், இந்தக் குளத்திலேயே அடைந்து கிடக்கச் சொல்கிறாய் என்னை? நான் ஒரு சுதந்திரத் தவளை’’ என்றது கண்ணு.
அதைக் கேட்டதும், சிலிக்கு அழுகை வந்துவிட்டது. “நீ மட்டும் குளத்துக்கு வெளியே ஜாலியாகச் சுற்றிவிட்டு வருகிறாய். என்னை ஏன் கூட்டிச் செல்ல மறுக்கிறாய்? நான் உன் நண்பன் இல்லையா?’’ என்று கேட்டது சிலி.
அதைக் கேட்டதும் கண்ணுவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. “என்ன சொல்கிறாய் நீ? உன்னை எப்படி வெளியே கூட்டிச் செல்ல முடியும்? அது உன் உயிருக்கே ஆபத்து’’ என்றது கண்ணு.
சிலி அதை எற்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுதது. மீன் கண்ணீர் வடிப்பதை அன்றுதான் முதல்முறையாகப் பார்த்தது, கண்ணு. அதன் கண்ணீர் குளத்தில் கலந்து குளத்து நீரே சூடாகிவிட்டது.
சிலிக்கு ஆதரவாக சிலியின் நட்பு மீன்கள் எல்லாம் கூடிவிட்டன.
“கண்ணு… ஒழிக! சிலியை சுற்றிப் பார்க்கக் கூட்டிச் செல்!’’ என்று முழக்கமிட்டன.
கண்ணுவுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. இந்தச் சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்றே புரியவில்லை.
சிலி மற்றும் அதன் நட்பு மீன்கள் எல்லாமே குட்டி மீன்கள். எனவே, அவற்றுக்கு உலகம் புரியவில்லை. ‘தண்ணீரை விட்டு வெளியே வந்தால் மீன் இனமாகிய நாம் செத்துவிடுவோம். தவளை இனத்தால்தான் நீர், நிலம் இரண்டிலும் வாழ முடியும்’ என்பது புரியவில்லை.
“சரி, சரி’’ என்று சமாதானப்படுத்தியது கண்ணு. “நான் சிலியை நீருக்கு வெளியே கூட்டிச் செல்கிறேன்’’ என்றது.
அனைத்துக் குட்டி மீன்களும் வாலோடு வால்களைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தன.
“சரி… இன்று கரைக்கு வெளியே ஒரு நிமிடம் மட்டும் சிலியை கூட்டிச் செல்கிறேன். நாளையில் இருந்து என் உடனேயே எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்கிறேன். இதற்கு ஒப்ப வேண்டும்’’ என்றது. குட்டி மீன்கள் எல்லாம் “சரி சரி’’ என்று குதூகலித்தன.
கண்ணு கரையேறி நின்றபடி “சிலி எங்கே வா வெளியே…’’ என்றது. சிலி நீருக்கு வெளியே வந்தது. அவ்வளவுதான். உடல் வெட்டி வெட்டித் துடித்தது. சுவாசிக்க இயலாமல் தவித்தது.
உடனே கண்ணு துள்ளிக் குதித்து சிலியைத் தூக்கி நீரில் போட்டது. அப்போதுதான் சிலிக்கு உயிரே வந்தது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லாக் குட்டி மீன்களும் திகிலடைந்துவிட்டன.
“இப்ப என்ன சொல்றீங்க?’’என்று கேட்டது கண்ணு.
“கண்ணு அண்ணா, நீ எங்க நல்லதுக்காகத்தான் சொன்னாய். எங்க மீன் மண்டைக்குத்தான் புரியவில்லை. இனி எப்போதும் இப்படிக் கேட்க மாட்டோம்’’ என்றன.
“ஆசைப்படுவது தவறு இல்லை. இயல்புக்கு மீறி அடுத்தவர்களைப் பார்த்து ஆசைப்படக் கூடாது’’ என்று அறிவுரை கூறிய கண்ணு தவளை தண்ணீரில் சிலியைக் கட்டித் தழுவிக்கொண்டு நீந்தியபடி மகிழ்ச்சியாகச் சென்றது.