துணுக்குச் சீட்டு : மச்சம் எப்படி உருவாகிறது
அபி
1. சுடச்சுட உப்பிய பூரி தட்டுல இருக்கும்போது அதுக்கு நடுவுல விரலால் ஒரு ஓட்டை போடுறதும் சப்பாத்தியிலேயும் உப்பி இருக்குற இடத்தை ஓட்டை போடுறதும் எனச் செய்து மகிழ்வோம், அல்லவா! எப்படி இந்தப் பூரி, சப்பாத்தி அப்படி உப்பி வருது என்று பார்ப்போமா?
கோதுமை மாவு பிசையும்போது அதுல தண்ணீர் சேர்த்து பிசைவாங்க. அப்போ, அந்த சப்பாத்தி மாவுல தண்ணீர் இருக்கும். தண்ணீரோட கொதிநிலை 100- டிகிரி. அதாவது 100 டிகிரியில தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். பொதுவாக, சமைக்கும் எண்ணெயோட கொதிநிலை 100 டிகிரியவிட அதிகமா இருக்கும். எண்ணெயோட கொதிநிலை அதிகமா இருக்குறதால, பூரியில் இருக்கும் தண்ணீர் இரண்டு மூன்று வினாடியிலேயே ஆவியாக மாறிடும். ஆவியாக மாறிய தண்ணீர் வெளியேற வழியில்லாததால், பூரிக்குள்ளேயே இருக்கும். அதனாலதான், பூரி, சப்பாத்தி வேகும்போது உப்புது. சரி, இது எல்லாம் இருக்கட்டும். உங்க தட்டுல இருக்குற பூரியில ஓட்டை போடுறத விட, பக்கத்துல இருக்கிறவங்களோட பூரியில அவங்களுக்கு முன்னாடி ஓட்டை போடுறது இன்னும் நல்லா இருக்கும். இதை நான் சொன்னேன்னு யாருகிட்டையும் சொல்லிடாதீங்க!
2. ஹால்ஸ், போலோ போன்ற புதினா கலந்த மிட்டாய் சாப்பிட்டா வாயெல்லாம், ஒரே குளுகுளுன்னு இருக்குது. என் அப்படி ஆகுது?
நம்ம உடலில் நடக்குற ஒவ்வொரு செயலும், மூளை கொடுக்குற கட்டளைப்படி நடக்குது. மூளைக்கு, உடலில் ஏற்படும் மாற்றங்கள், நரம்பணு (Neurons) மூலமாக தகவல்களாக அனுப்பப்படுது. இது அப்படியே இருக்கட்டும். நாம உணரும் சுவையெல்லாம், சுவை அரும்புகளின் உதவியோடு நடக்குது. அதுபோல, வாயில் ஏதாச்சும் குளிர்ச்சியாகப் பட்டால், அதை உணர வாயில் உள்ள புரதம் (Protein) மற்றும் நரம்பணுக்கள் உதவுகின்றன. அப்படி, TRPM8எனும் புரதம், வாயில் குளிர்ச்சியை உணர வைக்கிறது. புதினாவில், மென்தால் (Menthol) எனும் பகுதிப் பொருள் உள்ளது. இது புரதத்தில் பட்டவுடன், உடனடியாக நரம்பணுக்கள் மூளைக்கு செய்தி அனுப்புகின்றன. வாயும், குளிர்ச்சியாக உள்ளது என மூளையும் ஏமாந்துவிடுகிறது. இவ்ளோ நாளா, நல்லா நம்ப வச்சு இருக்கிறது இந்த புதினா கலந்த மிட்டாய்.
3. சளி இருக்கும்போது இருமிக்கிட்டே இருப்போம். அதனால், இரவு நேரத்துல அதிகமாக இருமுவோம். அந்த நேரத்தில் ஏன் என்று யோசிச்சிருக்க மாட்டீங்க. ஆனால், அதுக்கு அப்புறம் ஏன் என்று யோசிச்சி இருக்கீங்களா? இது ஏன் என்று சொல்றதுக்கு முன்னாடி, இதுல இயற்பியலும் சம்பந்தப்பட்டு இருக்குன்னா நம்ப முடியுதா?
ஆமா! நாம நின்னுட்டு இருக்கும்போது புவியீர்ப்பு விசையின் கீழ்நோக்கு இழுப்பால, (இயற்பியலே!) தொண்டையில சளி இருக்க முடியாது. ஆனால், படுத்துக்கிட்டு இருக்கும்போது, சளி தொண்டையில் கட்டிக்கொண்டு இருமலை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில், சளி இல்லை என்றாலும் இருமல் வந்துக்கிட்டே இருக்கும். அதுக்குக் காரணம், வயிற்றில் இருக்கும் அமிலம், உணவுக்குழாயில் வந்து தங்குவதுதான். அப்படி அமிலம் தங்கும்போதுதான் இருமல் வருகிறது.
4. உடல் முழுக்க ஒரு நிறம் இருக்கும்-போது, மச்சம் எப்படி உருவாகுது?
நம்மளோட தோலில் பல செல்கள் உள்ளன. அதில் மெலனோசைட்ஸ் (Melanocytes) எனும் செல் தோல் முழுவதும் பரவி இருக்கும். இந்த செல்தான் மெலனின் (Melanin) எனும் நிறமியைச் சுரக்கிறது. நமது நிறத்திற்கு இந்த நிறமியே காரணம். ஒரு சில இடங்களில், மெலனோசைட்ஸ் செல்அதிக அளவில் கொத்துக் கொத்தாக இருக்கும். அதை மச்சம் என்கிறோம்.