நிலா
பருத்துக் கருத்த யானையின்
பற்கள் நீளும் கொம்புபோல்
கருத்தில் கொள்க இதனைநீ
தந்தம் என்று கூறுவார்.
வானில் தெரியும் பிறைநிலா
வளைந்தி ருக்கும் தந்தம்போல்.
ஊனம் போன்ற கூனலும்
உண்மை யல்ல, உணர்கநீ!
தேய்ந்து மீண்டும் வளர்வதாய்
திங்கள் தெரியும் கண்களில்.
ஆய்ந்து கூறும் அறிவியல்
அதை நமக்கு விளக்குமே!
அன்னை நிலவைக் காட்டியே
அன்னம் சேய்க்கு ஊட்டுவாள்
பின்னர் தொட்டிலில் இட்டுமே
பிள்ளை தூங்க ஆட்டுவாள்.
எரியும் பரிதி ஒளியினை
எதிரொ ளித்துக் குளுமையாய்
இரவு நிலவு ஒளிருது
இதையும் விளக்கும் அறிவியல்.
பகலில் நிலவை விண்ணிலே
பார்க்க முடிவ தில்லையே!
இதனை விளக்கும் அறிவியல்
இன்னும் நிறைய அறியலாம்!
– கவிஞர் சி.விநாயகமூர்த்தி,
ஸ்ரீவில்லிபுத்தூர்.