ஆற்றல் அறிவோம்
சிறகை விரித்துப் பறவைகள் எல்லாம்
சிகரத்தின் மீதிலும் பறக்கின்றன!
இரையை இழுத்து எறும்புகள் எல்லாம்
இமயத்தில் சாதனை பொறிக்கின்றன!
தரையைத் துளைத்துக் கறையான்கள் எல்லாம்
தமக்கென மாளிகை அமைக்கின்றன!
இருளைக் கிழித்து மின்மினிகள் எல்லாம்
இரவினில் ஒளியை உமிழ்கின்றன!
வரும்நீர் எதிர்த்துச் சிறுமீன்கள் எல்லாம்
வலிவுடன் நீச்சல் அடிக்கின்றன!
விரைவாய்த் தாவிக் குரங்குகள் எல்லாம்
தூரத்துக் கிளையையும் பிடிக்கின்றன!
பிறக்கும் அனைத்து உயிர்களுள் எல்லாம்
பெரிதொரு ஆற்றல் இருக்கிறது!
அறிந்து நடக்க முயல்பவர் எல்லாம்
அடைகிற வாழ்க்கை சிறக்கிறது!
– தளவை இளங்குமரன்,
திருநெல்வேலி.