துணுக்குச்சீட்டு
விசிறி, விரல், பூஞ்சை → எப்ப்டி→ சுத்துது, சுருங்குது,வீங்குது,வளருது
அபி
நல்ல வெயிலில் வெளியே போய், அந்த உச்சி வெயிலினை ரசிச்சு அனுபவிச்சிட்டு (உங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது, ஆனாலும், மழையை மட்டுமே ரசிச்சா, வெயில் பாவம் துக்கப்படும்ல..) அதனால, அதையும் ரசிப்போமே… வீட்டுக்கு வந்ததும் மின்விசிறியைப் போட்டு அப்பாடான்னு உட்காரும்போது வரும் சுகம் இருக்கே!! சும்மா ஒரு மூன்று இறக்கைகள் சுற்றுகிறது. ஆனா, எப்படி அந்தக் காற்று வருது?
மின்விசிறியில் இருக்குற இறக்கைகள் சமதளமாக -_ தட்டையாக இல்லாம, கொஞ்சம் சாய்ந்து இருக்கும். மின்விசிறி அதற்குக் கீழே இருக்கும் காற்றை மேலிழுத்து மீண்டும் தரைக்குத் தள்ளும். இப்படித் தள்ளுவதால், காற்றோட்டம் அதிகமாகுது. பொதுவா, குளிர்ந்த காற்று மின் விசிறிக்குக் கீழே தரைக்கு அருகிலும், சூடாக இருக்கும் காற்று குளிர்ந்த காற்றுக்கு மேலாகவும் அடுக்கடுக்கா இருக்கும். மின்விசிறி, இப்படி அடுக்கடுக்கா இருக்கும் காற்றை மேலிழுத்து கீழே தள்ளும்போது, இந்த அடுக்குகள் எல்லாம் கலந்துடுது. அதனால, சமஅளவில் காற்றோட்டம் இருக்கிறது.
எல்லாம் சரி, இதுல சாய்வான இறக்கைகளுக்கு என்ன வேலை? அது சமதளமாக -_ தட்டையாகவே இருந்து இருக்கலாமே? அதான் இல்லை. இறக்கைகள் அப்படி இருந்துச்சுனா, அவை சுற்றும்போது, காற்றைக் கிழித்துக்கொண்டு போகும். ஆனால், இதே இறக்கைகள் சற்று சாய்ந்த நிலையில் இருந்தால், அது சுற்றும்போது காற்றை கீழே உத்தித் தள்ளும். இதனால், காற்றோட்டம் உருவாகும்.
நாம் பயன்படுத்தும் கை விசிறியைத் தரைக்குச் சமாந்தரமாக _ இணையாக (Parallel) வச்சு விசிறினால், காற்று வராது. ஏன்னா, அது காற்றைக் கிழித்துக்கொண்டு போகுது. அதுவே, விசிறியை சாய்வா வைத்து விசிறும்போது, காற்று உந்தித் தள்ளப்படுது. அதனாலதான். நமக்குக் காற்று வருது.
இந்த அடிப்படையில் தான் மின்விசிறியின் இறக்கை சுமார் 100 -முதல் 150 வரை சாய்வு நிலையில் வடிவமைக்கப்படுது. அது ஏன் 3 இறக்கைகள் மட்டும் இருக்கு? சொல்லுங்க, ஏன் என்று!
மழைக்காலத்துல, நம்ம துணிகள் மாதிரி நல்ல அஃறிணையைப் பாக்குறது ரொம்பக் கடினமான ஒன்று. ஏன்னா, அது பல உயிர்கள் அதன்மீது வளர உதவும். ஆமாம், நான் ஈரத்துணிகள் மேல இருக்குற பூஞ்சைகளைப் பற்றிதான் சொல்றேன். எப்படி வளருது இந்தப் பூஞ்சைகள்?
பூஞ்சை (Fungi) குடும்பத்தின் விஷீறீபீ எனும் பூஞ்சை வகையின் விதைத்தூள் காற்றில் எங்கும் பரவி இருக்கும். இந்தப் பூஞ்சை வளர விதைத்தூள், உணவு, வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய நான்கும் மிக முக்கியமா இருக்கு. இதுல ஒன்று இல்லைன்னாலும் பூஞ்சை வளராது. துணிகள் மேல வளரும் பூஞ்சையின் பெயர் Aspergillus. இதுவும் Mold வகையைச் சார்ந்தது. மழைக்காலத்தில் ஈரத்துணிகளில், பூஞ்சை வளரத் தேவையான ஈரப்பதம் இருக்கும். பொதுவா பருத்தித் துணியின்மீது பூஞ்சைகளைப் பார்க்க முடியும். ஏனென்றால், பருத்தி, ஒரு கரிமப் பொருள் (Organic material). பூஞ்சைகள், கரிமப் பொருள்களின் மீது நொதிகளைச் (Enzymes) சுரந்து, அவற்றின் சத்தை உறிஞ்சி தங்களுக்கான உணவாக்கிக் கொள்ளுது!
என்னதான், அந்தப் பூஞ்சைக்கு நம்ம துணி உதவினாலும், அவை நமக்கு நுரையீரல் நோய் மற்றும் தோல் நோயை வரவைக்கும். அதனால துவைத்த உடனே, துணிகளை வெயிலில் காயப்போட்டுடுங்க.
விறுவிறு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டு, கதவை வேகமாகச் சாத்தும்போது, கையை நசுக்கிட்டு இருப்போம். அவசரத்துல, கையை உதறிக்கிட்டே போய்விடுவோம். ஆனால் கணநேரத்துல அடிபட்ட விரல், ‘டொய்ங்’ என்று வீங்கிவிடும். எப்படி அவ்வளவு விரைவில் வீங்குது?
உடலில் எந்த இடம் அடிபட்டாலும் அங்கு இருக்கும் தசையில் சேதம் ஏற்படும். அப்படி சேதமடைந்த தசையைக் குணமாக்க நம்ம உடல் வேலைகளை ஆரம்பிக்கும். சேதமடைந்த தசையில் இருக்கும் இறந்த உயிரணுக்கள் உடனடியாக வெளியேற்றப்படும். அப்போது, அந்த இடம், சிவப்பா, சூடா மாறும். இதை அழற்சி (Inflammation) என்று சொல்லுவோம். சேதமடைந்த தசை இருக்கும் இடத்தில் முதலில் இரத்த ஓட்டம் அதிகமாகும். இதனாலதான், அந்த இடம் சிவக்குது. அடுத்து வெள்ளையணுக்கள், புரதம் போன்றவை அந்த இடத்திற்கு மூளையால் விரைந்து அனுப்பப்படும். சேதமடைந்த தசை இருக்கும் பகுதியில் ஒரே இடத்தில் வெள்ளம் போல இந்தத் திரவம் எல்லாம் கணநேரத்தில் வந்து சேர்வதாலதான் அங்க அவ்வளவு சீக்கிரமா வீக்கம் ஏற்படுது.