முடநம்பிக்கை போச்சு….
”கிரகணத்தப்ப சாப்ட்ட ….
எந்தப் பிரச்சனையும் இல்ல !
சிறுமி ஆனந்தினியின் நேரடி அனுபவம்
25.10.2022 ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை எடுத்து விட்டு அம்மாவின் ஃபிரண்ட்ஸ் வீட்டிற்கு போகலாம் என கிளம்பினோம். அப்போது என்னோட மாமா போன்ல பாத்துட்டு மாமி கிட்ட இன்று சூரிய கிரகணம் என்று சொல்லி 9 மாதம் கர்ப்பமாக இருந்த எனது மாமியை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறுசொல்லி, “வெளியில் வரக் கூடாது, கிரகணம் பிடிக்கும் போது சாப்பிடக்கூடாது, அந்த நேரத்தில் கை கால்கள் அசைத்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும்” என்றும், “நான் வேலைக்குப் போகாமல் உன்னுடன் இருக்கிறேன்” என்றும் கூறினார்.
வெளியில் செல்கிறோம் என்ற ஆர்வத்தில் கிளம்பி வந்து விட்டோம். எதிர் பாராத விதமா அம்மாவின் நண்பர்கள் கடற்கரை (பீச்சு)க்கு வர, அங்கிருந்து எனது சித்தப்பா மூலம் பெரியார் திடல் வந்தோம். அங்கே வந்து பார்த்தால்… சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா வந்து சூரியனை மறைக்கும் அந்த சூரிய கிரகணச் நேரத்தில் பாப்பாவை வயிற்றில் சுமந்துள்ள எழில் அக்கா, சத்தியா அக்கா இவர்களுடன் ஆசிரியர் தாத்தாவும் எல்லாரும் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
கடந்த முறை சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு சாப்பிட்ட சீர்த்தி அக்கா அவங்க பையனோட அங்க வந்து இருந்தாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. காலைல வீட்ல மாமிக்கு நடந்ததையும் மாலை பெரியார் திடல்ல நடந்ததையும் யோசிக்க வச்சது. மாடிக்குப் போயி டெலஸ்கோப் மூலமா நான், என்னைப் போல நிறைய அக்கா தம்பிமார்கள் எல்லாரும் சூரிய கிரகணத்தைப் பார்த்தோம். எழில் அக்கா தனக்கு பாப்பா பொறந்தா லைவ்ல காட்டுறதா சொன்னங்க. எல்லாமே சாப்பிட்டு முடிச்சிட்டு சத்யா அக்கா, எழில் அக்காவோட பேசிட்டு கிளம்பினோம். “உங்களுக்குப் பயம் இல்லையா?ன்”னு கேட்டேன். “பயம் இல்லை, இதெல்லாம் சும்மா பயமுறுத்துறதுக்காகச் சொன்னாங்க” என்று இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. எனக்கும் மகிழ்ச்சியா இருந்துச்சு.
கிரகணத்தின் பேரால பொய் சொல்லி நம்மள ஏமாத்தறாங்கனு நான் தெரிஞ்சிகிட்டேன். மறுநாள் என் நண்பர்கள் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன். இப்ப (நவம்பர் 17) அந்த எழில் அக்காக்கு பாப்பா பொறந்திருக்குனு கேள்விப்பட்டேன். ஒரு மூடநம்பிக்கையை வைச்சு எத்தனை பேரை பயமுறுத்தியிருப்பாங்க? இப்போ அது பொய்ன்னு நேரடியா நானே தெரிஞ்சுக்கிட்டேன். இதையும் என் நண்பர்கள் கிட்ட சொல்லி அவங்களுக்கும் புரிய வைப்பேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு!
– ஆ.சு.ஆனந்தினி, 5ஆம் வகுப்பு,
கீகீஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒரத்தூர்.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் சுந்திரன் (நிலா) வரும்போது, ஏற்படும் ஒளிமறைப்பு ஆகும்.
பூமியிலிருந்து பார்க்கும் போது தெரியும் சூரியனை, நடுவில் வரும் நிலா மறைக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும் இதனால் பூமியில் எந்த பாதிப்பும் மாற்றமும் ஏற்படுவதில்லை.