கணக்கும் இனிக்கும்
உமாநாத் செல்வம்
திசையறிவு
எல்லா குழந்தைகளுக்குமே நான்கு திசைகள் எவை என்பது தெரிந்து இருக்கும். அது மிக எளிதாகவும் விளங்கிவிடும். இரண்டாம் வகுப்பிலேயே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று அறிந்திருப்பார்கள். ஆனால் அதனால் என்ன பயன்? அதனை நாம் பயன்படுத்துகின்றோமா? இந்தக் கேள்விகள் எல்லா குழந்தைகளுக்குமே இருக்கும். திசைகள் கணிதத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை.
கணிதக் குறியீடுகள் இல்லாமல் திசைகளை தன்னிச்சையாகச் சொல்லவும் முடியாது. அடிப்படையாக நான்கு திசைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் 90 டிகிரி வித்தியாசம் உள்ளது. மேற்கும் கிழக்கும் எதிரெதிர் திசை. அப்படியானால் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம் 180 டிகிரி. அதேபோல வடக்கும் தெற்கும் 180 டிகிரி வித்தியாசம்.
எதிரும் புதிருமா இருக்காங்க என அடிக்கடி சொல்வார்கள். அது கிழக்கும் மேற்கும்போல, அல்லது வடக்கும் தெற்கும் போல.
வரைபடங்களில் எப்போது வடக்கு திசை மேலே இருக்கும் இந்திய வரைபடத்தினைப் பார்த்தால் மேலே காஷ்மீர் _ வடக்கு முனை. கீழே குமரி முனைதான் தெற்குப் புள்ளி. இனி செய்திகளிலும் கவனியுங்கள். “வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு”-_ அப்படியென்றால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள். தமிழ்நாடு வரைபடத்தை எடுத்து வடக்கு தெற்கு மாவட்டங்கள் யாவை என ஆராயவும்.
சரி, ஒரு சின்ன விளையாட்டினை விளையாடுவோமா? _ திசைகளை நன்றாக பழகிக்கொள்ளவே.
செயல் 1:
நீங்கள் குளத்தில் நண்பர்களோடு விளையாடிக்-கொண்டு இருக்கின்றீர்கள். உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும். எப்படி செல்வீர்கள்? குளத்தில் இருந்து வெளிவர கிழக்குப் பக்கம் மட்டுமே வழி இருக்கின்றது. இரண்டு கட்டம் கிழக்குத் திசையில், பின்னர் வடக்கு நோக்கி அய்ந்து கட்டத்தில் வீட்டினை அடையலாம். சரி இதே குளத்தினைவிட்டு வர வடக்குப் பக்கம் வழி இருக்கின்றது எனில், எப்படி வீட்டினை அடைவீர்கள்?
செயல் 2:
பள்ளியில் இருந்து நூலகம் செல்ல வேண்டும். பள்ளியில் நான்கு பக்கமும் வழி உள்ளது. வீட்டிற்குச் சென்று செல்வதும் நேராக நூலகம் செல்வதும் ஒரே தூரமா? இரண்டிற்கும் எப்படி வழி சொல்வீர்கள்?
செயல் 3:
பள்ளியில் இருந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். இருப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு நிபந்தனை _ குளத்திற்கு அருகே இருக்கும் கட்டங்களிலோ, நூலகத்திற்கு அருகே இருக்கும் கட்டங்களிலோ சென்றால் மாட்டிக்கொள்வீர்கள். அதேசமயம் நடந்த கட்டத்திலேயே மீண்டும் நடக்கக்கூடாது.
(வீட்டிற்கு அருகே இருக்கும் கட்டங்களுக்குச் சென்றாலும் அடுத்து வீட்டிற்குள்தான் நுழைய வேண்டும்)
திசைகள் அறிந்தால், நம்ம வீட்டிற்கு வழி சொல்ல இது உதவும். இன்னும்கூட பெரியவர்கள் நிறைய பேருக்கு ஓர் இடத்தில் இருந்து வீட்டிற்கு வழி சரியாகச் சொல்லத் தெரியாது. ஏனெனில், அவர்களுக்கு அந்த வழி நன்றாகப் பழகிவிட்டிருக்கும். “அப்படியே நேரா வந்தா நம்ம வீடு” என்பார்கள். ஆனால் நான்கைந்து இடது, வலது திரும்பி வரவேண்டி வரும். திசைகள் சரியாகத் தெரிந்தால் வழி சொல்வதும், இடங்களைத் தேடிப்போவதும் எளிதாக இருக்கும்.
இப்போது நம்மிடம் நவீனக் கருவிகள் வந்துவிட்டன.
சென்னையின் ஒரு பகுதியில் இருந்து திருநெல்வேலியின் ஒரு வீட்டிற்குச் செல்ல வழிகாட்டும் அளவிற்குச் தொழில்நுட்பம் வளர்ந்து-விட்டது. Street View என்ற வசதியும் வந்துவிட்டது. அந்தத் தெருவில் நடந்து சென்றால் என்னென்ன பார்க்கலாமோ அதனைப் பார்க்க இயலும். எல்லா இடங்களுக்கும் மெல்ல மெல்ல இது பதியப்படுகின்றது. அது ஒரு துணை மட்டுமே.
துல்லியமாக நம் தேவைகளுக்கு அது உதவாது. திசையறிவை வளர்த்துக்கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் நேரத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் நேரத்தையும்தான்.
கருவிகளும், இணையமும் இல்லா நேரத்தில் அல்லது சிக்னல் இல்லாத இடங்களில் திசையறிவு தானே நம்மைக் காக்க வல்லது.
(இனிக்க இனிக்க…)