சிறார் கதை
வசீகரன்
லாலு, லூலூ இரண்டும் நல்ல நண்பர்கள், நட்புக்கு இலக்கணமாக வாழும் அன்பு முயல்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர். கிடைக்கும் உணவை சரிசமமாக பங்கு வைத்து உண்பர். அந்த இரண்டு முயல்களுக்கும் இடையே பிணக்கே வந்தது கிடையாது.
அன்று லாலூ, லூலூ இரண்டுக்கும் கடுமையான பசி. லாலூ சொன்னது, “வா… களத்து மேட்டுக்குப் போவோம். அங்கே கேரட் வயல் காய்த்துக் கிடக்கிறது. நாம் வயிறு நிரம்ப உண்ணலாம்.”
லாலூவும், லூலூவும், “உலகம் பிறந்தது எனக்காக… ஓடும் நதிகளும் எனக்காக” என்று பாடிக்கொண்டே ஓடின. லூலூ பாட்டைத் திருத்தியது. “எனக்காக’ என்று அல்ல. ‘நமக்காக’ என்று பாடுவோம்” என்றது. லாலூவும் அதை ஏற்றுக்கொண்டது.
கேரட் வயலை அடைந்தன. அடுத்த நிமிடமே ஏமாந்துபோயின. அங்குள்ள செடிகளில் கேரட்டுகள் அறுவடை செய்யப்பட்டு இருந்தன. கேரட் இல்லாததால் வருந்தின.
அப்பொழுது லூலூ குரல் கொடுத்தது. “லாலூ… இங்கே பார். ஒரே ஒரு காரட் செடி மட்டும் இருக்கிறது” என்றது.
லாலூ ஓடிப்போய் பார்த்தது. அதன் கண்களில் பெருத்த மகிழ்ச்சி, மண்ணை இரண்டு பேரும் சேர்ந்து கிளறிக் கிளறி எப்படியோ கேரட்டை வெளியே எடுத்தன.
அருகில் உள்ள ஓடையில் கேரட்டைக் கழுவி சத்தம் செய்தன. லூலூவும் உடம்பைக் கழுவிவிட்டு வந்தது.
“லாலூ… எனக்கு செமபசி” என்றது லூலூ.
“அப்படியா… அப்படியானால் இந்த கேரட்டை பங்கு வைக்க வேணாம். இது சிறிய கேரட்தான். உனது பசிக்கே பத்தாது. நீயே இதை முழுசா சாப்பிட்டுவிடு” என்றது லூலூ.
“இல்லை இல்லை… எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாகப் பசிக்கவில்லை. ஆளுக்குப் பாதி பாதி சாப்பிடலாம்” என்றது லூலூ.
“நீ பாதி… நான் பாதி சாப்பிட்டால் உனக்கும் பசி தீராது. எனக்கும் பசி தீராது, எனக்கும் பசி தீராது. கேரட்டை நீதான் கண்டுபிடித்தாய். நீதான் சேற்றில் விழுந்து பறித்தும் வந்தாய். நீதான் நல்ல பசியிலும் இருக்கிறாய். எனவே நீயே சாப்பிடு லூலூ… என் பேச்சைக் கேள்.”
“இல்லை லாலூ. உன்னைப் பார்க்க வைத்துவிட்டு நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். இது சிறிய கேரட்தான். இதை முழுதாய் நீயே சாப்பிட்டுவிடு. உனக்காகத்தான் நான் சேற்றில் குதித்து பறித்து வந்தேன். மறுக்காமல் சாப்பிடு” என்றது லூலூ.
“நான் மட்டும் உன்னைப் பார்க்க வைத்து சாப்பிடுவேனா என்ன?” என்றபடி செல்லமாக முறைத்துக்கொண்டது லாலூ.
அப்போது அங்கே நொண்டியபடி ஆதன் வந்தது. ஆதன் என்பது குட்டிக் குரங்கு. அதன் காலில் அடிபட்டிருந்ததால் சில நாள்களாக நொண்டிக்கொண்டு இருக்கிறது.
“லாலூ, லாலூ… உங்களுக்குள் என்ன பிரச்சினை? ஆ… நல்ல இளஞ்சிவப்பு கேரட் வைத்திருக்கிறீர்களே. அதை எனக்குத் தந்தால் சாப்பிட்டுப் பசியாறுவேன். என் காலில் காயம்பட்டு இருப்பதால் இரண்டு நாள்களாக சரியாகச் சாப்பிடவில்லை. அடிபட்ட காலால் உணவு தேடி எப்படி அலைய முடியும்?” என்றது.
“ஆதன்… கவலப்படாதே. இந்தக் கேரட் உனக்குத்தான். உன் கால் குணமாகும் வரை உனக்கு நாங்களே கேரட் பறித்துத் தருகிறோம்” லாலூ, லூலூ இரண்டும் ஒருமித்த குரலில் கூறின.
“நீங்கள்தான் உண்மையான நண்பர்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. உங்கள் கண்கள் வாடி இருக்கின்றன. உங்கள் பசியைப் பொறுத்துக்கொண்டு கேரட்டை எனக்குத் தந்துவிட்டீர்களே” என்றது ஆதன்.
“ஆதா… நீயும் எங்கள் நண்பன்தான். பசித்தவருக்கு உதவுவதுதானே உண்மையான நட்பு” என்றன இரண்டும்.
“அதோ சோழமேடு தெரிகிறதே. அங்கே நிலத்தில் சர்க்கரைக்கிழங்கு இருக்கிறது. கொஞ்சம் மண்ணைக் கிளறினால் கிழங்கு கிடைத்துவிடும். போய் எடுத்து உண்டு மகிழுங்கள். உங்களால்தான் அந்த மேட்டில் ஏற முடியும்” என்றது ஆதன்.
“லூலூ… நமக்கு நல்ல வேட்டைதான். பிடி ஓட்டம்” என்றபடி இரண்டும் தாவிக் குதித்து ஓடின.