அசத்தும் அறிவியல்
ஓடு இல்லாத முட்டை செய்வோமா?
அறிவழகன்
முட்டைக் கூடுகள் மிகவும் வலுவானவை. முட்டை ஓட்டை உருவாக்கும் கால்சியம் கார்பனேட் மிகவும் கடினமானது.
ஓர் ஆரோக்கியமான பறவையின் உடல் கால்சியம் கார்பனேட்டை தன்னுள்ளே உற்பத்தி செய்கிறது. முட்டை இடுவதற்கு சற்று முன்பு மஞ்சள், வெள்ளைக் கருக்களைச் சுற்றி ஒரு படலமாகப் பூசுகிறது. அந்த முட்டை ஓட்டை உடைக்காமல், உள்ளே இருக்கும் முட்டையை எப்படி பார்ப்பது? நோ… நோ… முட்டையை அவிக்கவும் கூடாது. முட்டையை உடைக்கவும் கூடாது. முட்டையின் வடிவம் மாறவும் கூடாது. ஆனால் முட்டையின் ஓட்டை மட்டும் நீக்க வேண்டும். செய்து பார்க்கலாமா?
தேவையான பொருள்கள்:
= முட்டைகள்
= புளிக்காடி (Venegar)
= ஒரு தெளிவான கண்ணாடி ஜாடி
வழிமுறைகள்:
முதலில் கண்ணாடி ஜாடியில் வினிகரை ஊற்றவும்.
பிறகு கவனமாக கண்ணாடி ஜாடியில் உள்ள வினிகரில் ஒரு முட்டையை முழுமையாக மூழ்கியிருக்கும்படி வைக்கவும்.
பொறுமையாகக் காத்திருக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு, முட்டை ஓட்டில் குமிழிகள் உருவாவதை நீங்கள் கவனிப்பீர்கள். வினிகரில் உள்ள அமிலம் முட்டை ஓட்டில் உள்ள கால்சியம் கார்பனேட்டுடன் வினைபுரிந்து கார்பன்-டை-ஆக்சைடு என்ற வாயுவை உருவாக்குகிறது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, வினிகர் கரைசலில் இருந்து முட்டைகளை அகற்றவும். அதில் ஒரு மெல்லிய அழுக்குப் படலம் படிந்திருக்கலாம். குளிர்ந்த நீரில் அதைக் கழுவவும்.
பின்பு பழைய வினிகரை வடிகட்டி, ஜாடியைச் சுத்தம் செய்து, முட்டையை மீண்டும் ஜாடியில் வைத்து, வினிகரால் ஜாடியை நிரப்பவும். ஜாடியை ஒரு வாரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
ஏழு நாள்களுக்குப் பிறகு, ஜாடியை வடிகட்டி, குளிர்ந்த நீரில் முட்டையை அலசவும். கடின முட்டை ஓடு கரைந்து முட்டையின் உள்ளிருக்கும் வெள்ளை மஞ்சள் கரு ஒரு மெல்லிய, ரப்பர் சவ்வினால் சூழப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
வினிகர் பரிசோதனையில் கண்ட வேதியியல் வினை:
முட்டை ஓட்டை மென்மையாக்கி நெகிழச் செய்யும் வகையில் என்ன நடந்தது? முட்டை ஓடு கால்சியம் கார்பனேட் (CaCO3) என்னும் கனிமத்தால் ஆனது. அசிட்டிக் அமிலம் (CH3COOH) கொண்ட வினிகரில் முட்டையைச் சேர்க்கும்போது, வினிகரில் உள்ள அமிலம் முட்டை ஓட்டில் உள்ள கால்சியம் கார்பனேட்டுடன் வினைபுரிகிறது. இது ஒரு காரமாகும். கால்சியம் கார்பனேட்டுக்கும் வினிகருக்கும் இடையிலான இந்த வேதிவினை கார்பன்-டை-ஆக்சைடு (CO2) என்னும் வாயுவை உருவாக்குகிறது. இந்த வினை, முட்டையை விட்டுவிட்டு முட்டை ஓட்டைக் கரைக்கிறது.
கால்சியம் கார்பனேட்டின் கார்பனேட் (CO3) பகுதி அசிட்டிக் அமிலத்தால் புரோட்டானேற்றம் செய்யப்பட்டு கார்போனிக் அமிலத்தை (H2CO3) உருவாக்குகிறது.
CH3COOH+CaCO3=H2CO3 + Ca(CH3COO)2.
அடுத்த கட்டமாக, கார்போனிக் அமிலம் உடைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை உருவாக்குகிறது. H2CO3=H2O+CO2.
ஒட்டு மொத்த வினையானது கொடுக்கப் பட்டுள்ள இரண்டு வினைகளின் கூட்டுத்தொகை ஆகும்.
CH3COOH+CaCO3 = H2O+CO2+Ca(CH3COO)2.
Caco3(S)+2CH3COOH(L) =
Ca(CH3COO)2(S) + H2O(L) + CO2(G)
(S-Solid, L-liquid G-Gas)
வினையின் போது கார்பன்-டை ஆக்சைடு (ஒரு வாயு) வெளியாகி காற்றில் கலந்துவிடுகிறது.
முட்டை ஓடுக் கரைந்த பிறகு, முட்டைக் கரு ஒரு சவ்வினால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். (உண்மையில், அவை இரண்டு சவ்வுகள். ஆனால் அவை இறுக்கமாக ஒன்றாக இருக்கின்றன.)
ஓடு இல்லாத முட்டை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தீங்களா?
வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
ஆனால், முட்டை எப்படி பெரிதாகியது?
வினிகரில் முட்டை அமிழ்ந்திருப்பதால், வினிகரில் உள்ள நீர் முட்டையின் சவ்வு வழியாக உறிஞ்சப்படுகிறது. சவ்வூடு பரவல் என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை, சவ்வின் இருபுறமும் நீரின் செறிவைச் சமப்படுத்துகிறது வினிகரில் உள்ள நீர் சவ்வு வழியாக இந்த ஓடு இல்லாத முட்டையில் பரவுவதால் முட்டையின் அளவு பெரிதாகிறது.
உங்கள் சிந்தனைக்குச் சில கேள்விகள்:
1. முட்டை கடினமாக இருக்கிறதா? அல்லது மென்மையாக இருக்கிறதா?
2. இந்த ஓடு இல்லாத முட்டைக்கும் ஓடு உள்ள முட்டைக்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா?
3. வினிகரால் மூடப்பட்டிருந்த முட்டைக்கு என்ன நடந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
4. Egg-in-Venegar சோதனையை நடத்தியதிலிருந்து நீங்கள் புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டீர்களா?