• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

2023_feb_9
அறிவியல்பிப்ரவரி2023

கை ரேகைகளைக் கண்டுப்பிடிப்போமா?

நமது இரண்டு கை ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகள் தான் கை ரேகைகள் ஆகும்.
உங்கள் கை விரல்கள், கால் விரல்களில் உள்ள இந்த சிறிய மடிப்புகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. இது உங்கள் அம்மாவுக்குள் நீங்கள் கருவாக வளரும்போதே உருவானது.
அதனால் தான் கை ரேகை என்பதை தனி ஒருவரின் அடையாளமாகப் பதிவு செய்து கொள்கிறார்கள்.
எந்தத் திட மேற்பரப்பையும் நாம் தொட்டால் அங்கு நம் கை ரேகைகள் பதிவதைக் காணலாம். கை ரேகைகளை, அவை காணப்படும் மேற்பரப்பின் வகை மற்றும் அவை கண்ணுக்குத் தெரிகிறதா இல்லையா என்பதைப் பொறுத்து ஆய்வாளர்கள் மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.

மென்மையான மேற்பரப்புகளான சோப்பு, மெழுகு, ஈரமான வண்ணப் பூச்சு, புதிய தாள் போன்றவற்றில் பதியும் கை ரேகைகள் மிக எளிதாக அவற்றில் படிந்துவிடுகின்றன. இதன் மூலம் நம் கைரேகை அச்சு உருவாக்கிய பதிவுகள் மேடு பள்ளங்களோடு அவற்றில் காணப்படும். அதாவது முப்பரிமாண வடிவத்தில் இருக்கும்.
கடினமான மேற்பரப்புகளில் இத்தகைய படிமங்கள் உருவாகாது எனினும், அவற்றில் கண்ணுக்குப் புலப்படும் வகையிலோ (Patent) அல்லது புலப்படாத வகையிலோ (Latent) நிச்சயம் அச்சுகள் பதிவாகும். நம் விரலில் ஒட்டியுள்ள இரத்தம், அழுக்கு, மை, வண்ணப் பூச்சு போன்றவை நாம் தொடும் கடின மேற்பரப்புகளில் பதிவாகும்.
இவை மட்டுமல்லாமல், நம் உடலில் இயற்கையாக உருவாகும் எண்ணெய்ப் பசை, வியர்வை போன்றவை நம் கை ரேகை அச்சுகளை நாம் தொடுமிடங்கள் அனைத்திலும் பதிய வைக்கின்றன. நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவற்றைப் பதியவைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

அதனால்தான் குற்றங்களைக் கண்டுபிடிக்க முதலில் காவல் துறையினர், கை ரேகைகளைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். நேரடியாகத் தெரியும் கை ரேகை அச்சுகளை எளிதில் கண்டுபிடித்து உயர்தரமான ஒளிப்படம் (Photograph) எடுத்துக் கொண்டு, அவற்றை ஆதாரமாகக் கொள்வர்.
கண்ணுக்குத் தெரியாத கை ரேகை அச்சுகளைக் கண்டுபிடிக்கப் பல முறைகள் உள்ளன. கை ரேகைப் பொடிகள், வேதிப் பொருள்கள், புற ஊதாக் கதிர் முறை, மாற்று ஒளி மூலங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அவை பதிவு செய்யப்படுகின்றன.
கை ரேகைகள் பதிவாகியுள்ள இடங்களில், அவற்றைக் கண்டறிவதற்கான பொடியைப் பயன்படுத்தி காணும்படி செய்வார்கள். பின்னர் அதை ஒளிபுகும் ஒட்டும் நாடா (Transparant Tape) கொண்டு ஒற்றி எடுத்து நாடாவில் (tape) பதிவு செய்துகொள்வதன் மூலம் ஆதாரமாகக் கொள்ள முடியும்.
எனவே, இவற்றைப் பதிவு செய்யும்போது பிறரது கை ரேகைகள் அந்த இடத்தில் பதிவாகிவிடாமலும், இருக்கும் கை ரேகைகள் அழிந்துவிடாமலும் பதிவு செய்வது முக்கியம் ஆகும்.
கை ரேகையைப் பதிவு செய்வதற்கான பொடியில் கருப்பு கிரானுலர், அலுமினிய செதில், கருப்புக் காந்தம் ஆகியன இருக்கும். இப்போது, சயனோ அக்ரிலேட் என்ற சூப்பர் பசை உள்ளிட்ட இன்னும் சில புதிய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

நீங்களும் பல திரைப்படங்களில் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் இன்னும் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை ஆர்வமிருந்தால் இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். நமது கை ரேகைகளை அதன் அளவு, வடிவம் போன்றவற்றைக் கொண்டு எளிதில் கண்டு கொள்ளலாம். துல்லியமாக ஆராய்வதற்கு நமக்கு உருப்பெருக்கிக் கண்ணாடிகள் தேவைப்படும்.கை ரேகைகள் எங்கெல்லாம் தேவைப் படுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். =அந்தக் காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாமையால், கையொப்பம் போடத் தெரியாதவர்கள் தங்களது ஒப்புதலைத் தெரிவிப்பதன் அடையாளமாக கை நாட்டு என்னும் பெயரில் கை ரேகை வைப்பார்கள். = குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறை கை ரேகைகளைப் பதிவு செய்யும்.= ஆதார் அட்டை, சில நாடுகளின் விசா பதிவு போன்றவற்றிற்கும் கை ரேகை பதிவு செய்யப்படுகிறது.= நாம் பயன்படுத்தும் செல்பேசியில் கை ரேகைகளைப் பதிவு செய்து இயக்குவதை நீங்கள் அன்றாடம் செய்வீர்கள் தானே! (இந்தச் செல்பேசிகள் நமது கை ரேகைகளை டிஜிட்டலாகப் பதிவு செய்துகொள்கின்றன.)அறிவியல் அடிப்படையில் கை ரேகைகள் இப்படிப் பயன்படுவது போலவே, ‘கை ரேகையை வைத்து ஜோசியம் பார்க்கிறோம்; உங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்கிறோம்’ என்று ஏமாற்றும் பேர்வழிகளும் நம் நாட்டில் உண்டு. அதற்கும் அறிவியலுக்கும் கொஞ்சமும் தொடர்பு கிடையாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
கை ரேகைகளின் வடிவங்களைக் கொண்டு அவற்றை எளிதாகப் பகுத்துப் பார்க்கலாம். வில் வளைவு, வளைவு, சுருள் என்று வகைப்படுத்தி அடையாளம் காணலாம்.

நாம் சோதித்துப் பார்க்கலாமா?
உங்கள் வீட்டில் உள்ளவர்களின் கை ரேகைகளைப் பதிவு செய்து அதில் யாருடையது எந்தக் கை ரேகை என்பதை அடையாளம் காணலாமா?
முதலில், அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து, அவரவர் பெயர் போட்டு ஒரு கோப்பு (File) உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு, உங்களுக்குத் தெரியாமல், ஒரு பொருளை அவர்களில் யாரேனும் ஒருவர் தொட்டு எடுத்து வைக்க வேண்டும்.
அந்தப் பொருளில் பதிவாகியுள்ள கைரேகையை நீங்கள் எடுத்துப் பதிவு செய்துகொண்டு, ஏற்கெனவே உங்கள் கோப்பில் உள்ள கை ரேகைகளில் இந்தக் கை ரேகை யாருடையது என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.

இதே விளையாட்டை வேறு வகையிலும் விளையாடலாம். ஒவ்வொருவரையும் ஒரு பொருளைத் தொடச் சொல்லி, அவை அனைத்தையும் நீங்கள் எடுத்து ஆராய்ந்து, எந்தப் பொருளை யார் தொட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லலாம்.
அதற்கு முதலில் கை ரேகைக் கோப்பு உருவாக்க வேண்டும் அல்லவா?
தேவையான கருவிகள்:
பென்சில், முத்திரை மை, காகிதம், தெளிவான ஒளிபுகும் ஒட்டும் நாடா, கையுறைகள், பவுடர்
செய்முறை:
பென்சிலை ஒரு காகிதத்தின் சிறிய பகுதியில் முன்னும் பின்னும் தேயுங்கள்.
உங்கள் அப்பா அல்லது அம்மாவின் இடது கட்டை விரலைப் பென்சில் தேய்த்த பகுதியில் நன்கு ஒற்றி எடுக்கச் செய்யுங்கள். இப்போது அந்த பென்சில் துகள்கள் உங்கள் விரலில் ரேகைப் பகுதியில் பதிவாகி இருக்கும்.

இப்போது அந்த ஒளிபுகும் ஒட்டும் நாடாவை (Transparent tape) அம்மா/அப்பாவின் விரலின் மீது ஒட்டி, அதை உரித்து எடுத்துவிடுங்கள். (இப்படிச் செய்யும்போது உங்கள் கை ரேகை அதில் பதிந்துவிடாமல் கவனமாகச் செய்யுங்கள்)
அந்த நாடாவை வேறெதுவும் தொட்டுவிடாமல், தெளிவாகத் தெரியும்படி ஒரு தாளில் ஒட்டிக் கொள்ளுங்கள்.
இப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகைகளையும் எடுத்துக் கோப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது மையை விரலில் தடவி, நேரடியாகவே தாளில் அதனைப் பதிவு செய்துகொள்ளலாம்.
இனி, அந்த விளையாட்டை விளையாடுங்கள்.
நீங்கள் கையுறையை அணிந்து கொள்ளுங்கள். யாரேனும் தொட்ட பொருளை எடுத்து, அதில் உள்ள கை ரேகையை பவுடர் கொண்டோ, அல்லது நேரடியாக நாடாவைக் கொண்டு ஒற்றி எடுத்தோ அந்தக் கை ரேகையைப் பதிவு செய்யுங்கள்.
பிறகு அதனைக் கவனமாக ஆராய்ந்து, நீங்கள் முன்பே பதிவு செய்து வைத்துள்ள கை ரேகைகளுடன் ஒப்பிட்டு, பொருளைத் தொட்டது யார் என்று கண்டுபிடியுங்கள்.
முதலில் அந்தக் கை ரேகை வில் வளைவா? வளையமா? சுருளா? என்பதைப் பார்த்து, அதன் பின் நுணுக்கமாக ஆராயலாம்.
செய்து பார்த்துவிட்டு, உங்கள் அனுபவத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.
* * *
கை ரேகைகளைக் கொண்டு குற்றம் இழைத்த குற்றவாளிகளையும் அடையாளம் காணலாம். கை ரேகைகளைக் கொண்டு ’ஜோசியம் பார்க்கிறேன்’ என்று ஏமாற்றும் குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
நீங்களும் அடையாளம் காண்பீர்கள் தானே!

23
விண்ணியல்  : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!2nd February 2023
கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்2nd February 2023கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்

மற்ற படைப்புகள்

2022_feb_v2
அறிவியல்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!

Read More
2023_feb_20
கதைபிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

தொடர் கதை – 2 : வழக்குரைஞரிடம் வாதிட்ட எலுமிச்சை

Read More
2023_feb_7
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!

Read More
7
அக்டோபர் 2024அறிவியல்பிஞ்சு 2024
4th October 2024 by சரவணா இராஜேந்திரன்

அறிவியல் சாதனை: பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும் இனி உலகைப் பார்க்கலாம்

Read More
23
2024அறிவியல்ஜூலை 2024பிஞ்சு 2024
15th July 2024 by ஆசிரியர்

அறிவியல் – கரையான் புற்று கோவிலாகுமா?

Read More
2023_feb_4
கதை கேளு கதை கேளுபிப்ரவரி2023
2nd February 2023 by விழியன்

சாக்லேட் மரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p