தொடர் கதை – 2 : வழக்குரைஞரிடம் வாதிட்ட எலுமிச்சை
வழக்குரைஞர் வீட்டிற்கு வந்து சேர்ந்த பழனிவேல், எலுமிச்சைப்பழத்தை எடுத்து மேசைமீது வைத்தார்.
“என்ன பழனிவேல், எலுமிச்சையோடு வந்திருக்கீங்க!’’ வழக்குரைஞர் கேட்டார்.
“எலுமிச்சைப்பழம் பொதுநல வழக்கு போடப்போகுதாம். அதுக்குத்தான் உங்களிடம் வந்தேன்!’’ பழனிவேல் சொல்ல, வியப்போடு நோக்கினார் வழக்குரைஞர்.
ஆமாம் அய்யா, நான் பொதுநல வழக்குப் போடத்தான் உங்களிடம் வந்தேன்!’’ என்று இடையில் குறுக்கிட்டு எலுமிச்சை கூறியதும், வழக்குரைஞருக்கு மேலும் அதிர்ச்சி!
“என்ன வழக்கு?’’ வழக்குரைஞர் கேட்க, “உணவுக்குப் பயன்படவேண்டிய என்னை, பலி, காவு, திருஷ்டி கழிப்பு என்று தெருவில் நசுக்கிப் பாழாக்குகிறார்கள். உணவுப் பொருளைப் பாழாக்குவது குற்றம் என்பதால், பொதுநலன் கருதி இச்செயல்களைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரவேண்டும்’’ என்றது எலுமிச்சைப்பழம்.
“விசித்திர வழக்காக இருக்கிறதே!’’ வழக்குரைஞர் திகைத்துப் பேசினார்.
“விசித்திர மனிதர்கள் வாழும் நாட்டில் வழக்கும் விசித்திரமாகத்தானே இருக்கும்! நான் வழக்குத் தொடுப்பது நல்ல நோக்கத்தில் தானே?’’ எலுமிச்சை விளக்கம் அளித்து வினாவும் எழுப்பியது.
“உனது வழக்கு நியாயமானது! ஆனால், புதுமையானது. இப்படியொரு வழக்கை எந்த வழக்குரைஞரும், எந்த நீதிமன்றமும் சந்தித்தது இல்லை!’’
இதற்கு முன்னுதாரணம் இருக்கு.
“தன் கன்றைத் தேரேற்றிக் கொன்ற இளவரசனுக்கு எதிராய், மன்னனிடம் பசு நீதி கேட்டது என்று கதை கூறப்படுகிறது அல்லவா?’’
“ஆமாம்’’
“இப்போது எலுமிச்சை நீதி கேட்கிறது. காலவளர்ச்சிக்கு ஏற்ப இது நடக்கத்தானே செய்யும்!”
“சிறப்பாக வாதம் செய்கிறாயே! உனக்கு வழக்குரைஞரே தேவையில்லையே!’’ என்று வழக்குரைஞர் கூற,
“உண்மைதான். ஆனால் சட்டப்படி சிலவற்றைச் செய்துதானே வழக்குத் தொடர முடியும்? அதற்கு வழக்குரைஞர் தேவைதானே!’’ என்றது எலுமிச்சை.
“உண்மைதான். வழக்கில் நீ கேட்கும் தீர்வு என்ன? நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்க வேண்டும்!’’
“எலுமிச்சைப் பழத்தைக் காவு, பலியென்கிற பெயரில் பாழாக்குவதை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்’’ இதுதான் எனது முதன்மையான வேண்டுகோள்.
“சரி. நான் வழக்குக்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுகிறேன். நீதிமன்றத்திற்கு வந்துவிடுங்கள்’’ என்று வழக்குரைஞர் கூற,
எலுமிச்சை விடைபெற்றது.
வழக்குரைஞர் பழனிவேலுவிடம், “வழக்குத் தேதி குறிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்திற்கு எலுமிச்சையோடு வந்துவிடுங்கள்.” என்றார்.
***
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஏற்கப்பட்டு, தேதியறிவிக்கப்பட்டதும், பழனிவேலுவிடம் வழக்குரைஞர் தெரிவிக்க, எலுமிச்சையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார் பழனிவேல்.
செல்லும் வழியில் ஒரு பூசணிக்காய் எலுமிச்சையைப் பார்த்து வணக்கம் சொன்னது. பதிலுக்கு எலுமிச்சையும் வணக்கம் சொன்னது.
“எங்கே புறப்பட்டுப் போறீங்க!’’
“நான் நீதிமன்றத்திற்குப் போறேன்!’’
“என்ன, நீதிமன்றத்திற்கா!’’
“ஆமாம். என் வழக்கு இன்று விசாரணைக்கு வருது. அதுக்குத்தான் பழனிவேல்கூட போய்க்கிட்டிருக்கேன்.’’
“எனக்கு ஒண்ணும் புரியலையே! கொஞ்சம் புரியும்படி சொல்லேன்!’’
உணவுக்குப் பயன்படுற என்னை, சாலையில் நசுக்கிப் பாழாக்கிறத தடைசெய்யணும்னு பொதுநல வழக்குப் போட்டிருக்கிறேன். அதுக்குத்தான் போறேன்.
“அப்படியா! நல்ல வழக்காச்சே! “அப்படின்னா நானும் இந்த வழக்கிலே சேர்ந்துக்கிறேன். என்னையுந்தானே சாலையில் உடைத்துப் பாழாக்குறாங்க! அதையும் தடுக்க நானும் வழக்கில் சேர்ந்துகொள்கிறேன். பழனிவேல் அய்யா, என்னையும் வழக்குரைஞரிடம் அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றது பூசணிக்காய்.
“சரி, நீயும் எங்களோட வா! வழக்குரைஞரிடம் சொல்வோம்.’’
மூவரும் நீதிமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒருவர் எதிர்ப்பட்டார். மண்டை உடைந்து கிடந்த அவரைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
(வழக்கு வளரும்)