மீள்வோம் மீட்போம்
சுனாமி
இடர் மீட்பு தொடர்
சுனாமி (Tsunami) என்னும் சொல் ஜப்பானிய மொழிச் சொல் ஆகும் ‘சு’ என்றால் ‘துறைமுகம்’ என்றும் ‘நாமி’ என்றால் ‘அலை’ என்றும் பொருள். ஜப்பான் நாடு அடிக்கடி இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெயர் உலகம் முழுவதும் பரவி விட்டது. தமிழ்நாட்டில் அதை ஆழிப் பேரலை என்றும், கடற்கோள் என்றும் அழைக்கிறோம். “பூமிக்கு அடியில் நகர்ந்து கொண்டே இருக்கும் தளத்தட்டுகள் கிட்டத்தட்ட 75 – 100 கிலோமீட்டர் உயரமும் 1000 கிலோமீட்டர் நீள அகலம் கொண்டவை ஆகும். அவை ஆண்டுக்கு 1 முதல் 12 சென்டிமீட்டர் நகர்ந்து கொண்டே இருக்கும், என்று நிலநடுக்கம் பற்றி கடந்த மாத இதழில் கட்டுரையில் படித்ததை நினைவில் வைத்து உள்ளீர்களா? சரி அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றீர்களா? நிறையவே உள்ளது.
அந்தத் தளத்தட்டுகள் பூமியின் கீழே 60 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 120 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இது உலகின் இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம். இதன் ஆழமே ஒரு கிலோமீட்டருக்கும் குறைவு. உலகில் இதுவரை மூன்று கிலோ மீட்டருக்கும் மேல் தோண்டப்படவே இல்லை. எனவே, பூமிக்குக் கீழே 60 கிலோமீட்டர் ஆழம் என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொலைவு. எனவே, நம்முடைய மனிதச் செயலுக்கும் இந்த நகர்வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவற்றைத் தடுக்கவோ மாற்றவோ தொழில்நுட்பம் இன்னும் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு சுனாமி பற்றிப் பார்ப்போம்.
தளத்தட்டுகள் பூமிக்கும் கீழே நகரும் போது ஒன்றுடன் ஒன்று உராயும்போதோ மோதிக்கொள்ளும் போதோ ஏற்படும் அதிர்வு தான் நிலநடுக்கம் என்று கடந்த கட்டுரையில் பார்த்தோமல்லவா? அதே நிகழ்வு நீருக்கும் கீழே அதாவது கடலுக்கும் கீழே நிகழ்ந்தால் பேரலைகளைத் தோற்றுவிக்கும் அதுவே சுனாமி எனப்படுகிறது. சில சமயங்களில் மிகப்பெரிய மலைகளின் சரிவுகள் (கற்பாறை, பனிப்பாறை) கடலில் ஏற்படும் பொழுதும் விழும், எரிமலை வெடிப்பு நீருக்குள் ஏற்படும் பொழுதும், விண்கல் போன்றவை கடலில் விழும் பொழுதும் உடனடியாக பெரும் அளவில் தண்ணீர் இடம் பெயரும் இதனால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்கள் ஏற்படும். இதையே சுனாமி என்று கூறுவர். கடலுக்கு உள்ளே நிலநடுக்கத்தின் பொழுது ஏற்படும் அலையின் வேகம் மணிக்கு சுமார் 800 – 900 கிலோமீட்டர் இருக்கும். அதுவே கரையை நோக்கி அலை செல்லும் போது படிப்படியாக வேகம் குறைந்து 500, 300, 100, 50 கி.மீ வேகமாக படிப்படியாகக் குறைந்து விடும் கரையைக் கடக்கும் பொழுது 50 – 40 கிலோமீட்டர் வேகத்தில் அலை கரையைக் கடக்கும். கடற்கரையை ஒட்டி சில நூறு மீட்டர்களுக்கு உள்ளேயே இதன் வேகம் குறைந்து அல்லது தடைப்பட்டு விடும். கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களே மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவார்கள். அண்மைக் காலத்தில் சுனாமியால் ஏற்பட்ட அய்ந்து பெரிய பாதிப்புகளைக் காண்போம்.
போர்ச்சுக்கல்
நாள்: 1.11.1755
இறந்தவர்கள்: 1,00,000
இத்தாலி
நாள்: 28.12.1908
இறந்தவர்கள்: 80,000
தெற்கு சீனா
நாள்: 2.6.1982
இறந்தவர்கள்: 40,000
இந்தோனேசியா
நாள்: 27.8.1983
இறந்தவர்கள் 30,000
அண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று காலை 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சுனாமி. இதில் 14 நாடுகள் பாதிப்படைந்தன. 2,30,000 முதல் 2,83,000 மக்கள் வரை மரணம் அடைந்தனர். இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணத்தைத் தழுவினர். தமிழ்நாட்டின் கடற்கரை ஓரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை பகுதிகளில் நானே 100க்கும் மேற்பட்ட சடலங்களைத் தூக்கி வந்து அடக்கம் செய்துள்ளேன். இவையே நாம் கண்ட மிகப்பெரிய சுனாமி பாதிப்புகளில் சில.
“இவ்வளவு பெரிய பாதிப்புகளைப் பார்த்து இனி நாம் பயப்படத் தேவையில்லை ஏனென்றால் கடலில் பல்வேறு இடங்களில் சுனாமியைப் பற்றி முன்னரே அறிவிக்கக்கூடிய அடி அழுத்தத்தைப் பதிவு செய்யும் Bottom Pressure Recorder கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக் கருவி மூன்று நிமிடங்களுக்குள் தகவல் கொடுத்து விடும். அதிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நிறைய நேரம் கிடைத்து விடும். மக்கள் பொறுமையாக நடந்தே ஆபத்தான பகுதியை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று விடலாம். உயிரிழப்புகள் இனி பெரிதாக இருக்காது. பொருட்சேதங்கள் மட்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சங்க இலக்கியங்களில் காணப்பட்ட பஃறுளி ஆறு, அது இருந்த நிலப்பரப்பு முழுவதும் அழிந்து அந்த இடமே கடலுக்குள் போய்விட்டது. அது அப்பொழுது ஏற்பட்ட மிகப்பெரிய கடற்கோளால் ஏற்பட்ட அழிவு ஆகும். தமிழ்நாட்டின் பல பகுதிகள் பல்லாயிரம் ஆண்டுகளாகவே கடல் கோளைச் சந்தித்து வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பே நமது பாதுகாப்பிற்கு உதவக் கூடியதாக விளங்குகிறது.
கடவுள் காப்பாற்றி இருக்கக்கூடும் என்று நினைத்து இருந்தால்… யோசித்துப் பாருங்கள், இத்தனை காலங்களில் ஏற்பட்ட எவ்வளவோ இழப்புகளை ஏன் கடவுள் தடுக்கவில்லை? இந்தக் கருவி வந்த பிறகுதான் அது நம்மை எச்சரிக்கிறது. எச்சரிப்பது அறிவியல்தானே அன்றி, கடவுளால் அல்ல என்பதை தெரிந்துக் கொள்வோம். அடுத்த இதழில் வேறு ஒரு பேரழிவு பற்றிக் காண்போம்.
தே.பொய்யாமொழி,
இயக்குநர், பெரியார் சமூகக் காப்பு அணி,
தஞ்சாவூர்.