அறிவியல்: ஏன் எண்களைத் தலைக்கீழா வரிசைப்படுத்தியிருக்காங்க?
பாபு .பி.கே
டெலிபோன் எண்கள் வரிசையும் இதர கம்ப்யூட்டர், கால்குலேட்டர் எண்கள் வரிசையும் ஏன் எதிர் மறையாக இருக்கின்றன?
ஏன் இது வரைக்கும் யாரும் இந்தக் கேள்வியை என்கிட்ட கேக்கலை…? சரி, அதுக்கு முன்னாடி Benford’s Law அல்லது First-Digit Law அப்டீன்னா என்னன்னு சுருக்கமாகப் பார்த்துருவோம். 1938ல ஃபிராங்க் பெண்போர்டு (Frank Benford)ங்குற ஒரு இயற்பியலாளர் இதை அறிமுகப்படுத்துனாரு. அதுனால இவர் பேராலயே வழங்குறாங்க.
இயல்பு வாழ்முறைகளில், எண்களின் தகவல் பரிமாற்றப் பரவலில் சிறிய மதிப்புள்ள எண்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனவாம். (அட்டவணையைப் பாருங்க.) அன்றாட வாழ்வில், மின்கட்டண மதிப்புகள், தொகைக்கணக்கீடுகள், இயற்பியல் மற்றும் கணிதவியல் மாறிலிகள்…. என்று பல்வேறு எண் பயன்பாடுகளிலும் இது பொருந்தி வரும்.
பெண்போர்டுக்கு முன்னாடியே 1881ல சைமன் நியூ கோம்ப் (Simon Newcomb) என்பவரு இதைப் பத்திச் சொல்லிருக்காரு. இவரு ஒரு கணிதவியல் மற்றும் வானவியல் அறிஞர். மடக்கை அட்டவணை இருக்குல்ல, அதாங்க logarithm table அதைப் புரட்டிப் பார்க்கையில 1ன்னு தொடங்குற பக்கங்கள் மட்டும் மத்த பக்கங்களை விட அதிகமா கசங்கியும், அழுக்காவும் இருந்ததைப் பாத்துட்டு ஒரு அனுமானத்துக்கு வந்தாரு. அதாவது அதிகப்படியான எண்கள்
1 என்ற எண்ணிலேயே தொடங்குகின்றனன்னு. அதுக்கப்புறம் வந்த பெண்போர்டு 20 வெவ்வேறு தளங்கள்ல இதை வச்சு ஆராய்ச்சி பண்ணி அது உண்மைதான்னு உலகத்துக்குச் சொன்னாரு.
சரி, இப்ப நமக்குத் தெரிய வேண்டியது என்னன்னா…. பெரிய எண்களை விட சிறிய எண்கள்தான் நம்மோட பயன்பாட்டுல அதிகம் இருக்குங்குறதுதான். எலக்ட்ரானிக் கருவிகளில், நாம் தகவல்களை எண்களாகப் பதிவு செய்யவும் உள்ளீடு செய்யவும் ஆரம்பிக்கும்போது…. பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்யக்கூடிய விசைகளுக்கு (Keys) மேலேயே 1 2 3…ன்னு எண்களுக்கான விசையையும் வச்சாங்க. அது வசதியா இருந்துச்சு.
அதாவது, விரல்களைப் பயன்படுத்துற விதம் எளிதா இருக்கவும், நேரத்தைக் குறைக்கவும், பிழைகளைக் குறைக்கவும் இந்த அமைப்பு முறை எளிதா இருந்துச்சு. இருங்க இருங்க… அதுக்காக, இப்ப இருக்குற மாதிரி 3 ஜ் 3 அமைப்புல இல்லை. உதாரணமா இந்த ஹெக்சாடெசிமல் அமைப்பைப் பாருங்க. 4 ஜ் 4 அமைப்புல இருக்கும். டெசிமலை 2 ஜ் 5 அமைப்புல கூட பயன்படுத்தியிருக்காங்க.
இப்ப ஏன், கம்ப்யூட்டர், கால்குலேட்டர்ல எல்லாம் எண் வரிசை கீழ் இருந்து மேல் நோக்கி போகுதுன்னு தெரிஞ்சிடுச்சா. இப்ப அடுத்து டெலிபோனுக்கு வருவோம். இதுல மட்டும் ஏன் மேல இருந்து வரிசையா கீழ் நோக்கி வருது…?
இதுக்கு பல காரணங்கள் சொல்றாங்க. என்னென்னன்னு பார்ப்போம்.
முதலாவது, 1950ல தொடுபலகைத் தொலைப் பேசிகளோட(Touch Pad Telephones) tone-recognition டெக்னாலஜி ரொம்ப அடாசு மாடலா இருந்துச்சாம். அதுலயும் கால்குலேட்டர் மாதிரி கீழ இருந்துதான் எண்களைத் தொடங்கிருக்காங்க. ஆனா, இந்த டேட்டா என்ட்ரி எக்ஸ்பர்ட்லாம், (Data entry experto) இந்த சுழல் முறைக்கு (Dial Pad) பழக்கங்குறதுனால, செம வேகமா இந்த போன்ல டயல் பண்ணிருக்காங்க. போனோட டோன் ரெகக்னிஷன் டெக்னாலஜியினால அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து என்ன நம்பர்னு கன்வெர்ட் பண்ணிக்க முடியலையாம். அதுனால, இந்த வரிசை அமைப்பை மாத்தி வச்சாங்களாம். அதுக்கப்புறம் யாரும் வேகமா டயல் பண்ணாததால பிரச்சனை இல்லாமப் போச்சாம். என்னங்க ரொம்ப மொக்கையான காரணமாத் தெரியுதா…? ஃப்ரீயா விடுங்க.
அடுத்த காரணத்தைப் பாக்கலாம். 1960ல பெல் லெபாரட்டரிகாரங்க பலவிதமான தொடுபலகை அமைப்பை ஆராய்ச்சி பண்ணிப் பாத்துருக்காங்க. அவங்கதான் 3 x 3 அமைப்பு பொருத்தமா இருக்கும்னு முடிவுக்கு வந்தாங்க. அதுலயும் எண்களை எந்த வரிசையில அமைக்கிறதுன்னும் பலவாறு யோசிச்சுப் பார்த்துருக்காங்க.
டயலிங் முறை இருந்தப்ப 0 9 8 7 6 5 4 3 2 1 ன்னு வலமிருந்து இடமாத்தான் நம்பர் இருந்துச்சுன்னு 3 x 3 அமைப்புல நம்பர்களை வலமிருந்து இடமால்லாம் வச்சுப் பார்த்துருக்காங்க. ஆனா, பெரும்பாலான மக்கள் இடமிருந்து வலமாத்தான் எழுதுறாங்கங்குறதுனால, இப்ப இருக்குற டெலிபோன் அமைப்புல நம்பர்களை அமைச்சுட்டாங்க.
போகவும், அதுல A B C ன்னு எழுத்துகளையும் பயன்படுத்துறதுக்கு 1ஆம் விசையில A B C யும் 2ஆம் விசையில் D E Fஉம் வச்சுப் பயன்படுத்துறது கொஞ்சம் அர்த்தமுள்ளதா இருக்கும்.
1960ல இந்த பெல் லெபாரட்டரிகாரங்க Human Factor Engineering Studies of the Design and Use of Push-button Telephone Sets
ன்னு ஓர் ஆய்வு உரை வெளியிட்டுருக்காங்க.
அந்தக் கட்டுரை இங்கே இருக்கும். http://www3.alcatel-lucent.com/bstj/vol39-1960/articles/bstj39-4-995.pdf
ஆக, சாதாரண மக்கள் அதிகமாப் பயன்படுத்துறதுக்கு எளிதாவும் வசதியாவும் இருக்குறது இப்ப இருக்குற டெலிபோன் எண் வரிசை அமைப்புதான். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி வேலை செய்யுறவங்களுக்கு பழைய கால்குலேட்டர் அமைப்பு அப்புடியே தொடரட்டும்னு விட்டுட்டாங்க.