புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?
‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
பிஞ்சுத் தோழர்களே,
இந்த உலகில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க் கிருமி முதல் பெரிய யானை வரை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், அத்தனை உயிரினங்களையும் விட மனிதன் ஒன்றில் மட்டும் சிறப்பானவனாக இருக்கிறான். எதில்?
பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதில்.
இந்தப் பகுத்தறியும் நுண்ணறிவு மனிதனின் அன்றாட வாழ்விற்கும் புதியனவற்றைக் கண்டு பிடிக்கவும், உருவாக்கவும் இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
ஆனால், இந்தச் சிந்திக்கும் நுண்ணறிவு மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது.
மனிதன் தன் வாழ்க்கையை எளிமையாக்கவும் அவன் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் பல கருவிகளை உருவாக்கினான். புதிய கருவிகள் அவன் கைகளை விரிவாக்கியன. சக்கரம் அவனுக்கு ஆயிரம் கால்களைக் கொடுத்தது. புதுப்புதுக் கருவிகள் உருவாக்க உருவாக்க மனிதனின் வாழ்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு உணவு என்பது காட்டில் வேட்டையாடினால் மட்டும்தான் கிடைக்கும். வேட்டையாடவும் அவனிடம் கைகள் மட்டும்தான் இருந்தது. புதுப் புதுக் கருவிகளை உருவாக்கி உருவாக்கி காலப்போக்கில் அவன் விவசாயம் செய்யத் தெரிந்துகொண்டான். விவசாயம் அவன் உணவுத் தேவையை உறுதிப்படுத்தியது. நேரம் மிச்சம் ஆகியது. சும்மா இருந்த நேரத்தில் இன்னும் இன்னும் இன்னும் இந்த உலகைப் பற்றி அறிந்து கொண்டான். மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகள்.
கருவிகளும் கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தினவே தவிர ஒரு போதும் அவனை வீழ்த்தவில்லை. அவன் வாழும் நாள்களையும் அதிகரித்துக் கொடுத்தன.
இன்று நம்மைச் சுற்றி பல ஆயிரம் புதிய கருவிகள் உள்ளன. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தி விட்டன. இன்று இணையத்தின் உதவியுடன் உலகமே ஒரு கிராமம் – ஒரு வீடு எனச் சுருங்கிவிட்டது .
கையின் வேலையைப் பார்க்க ஒரு கருவி உள்ளது. கால்களின் வேலையைப் பார்க்க ஒரு கருவி உள்ளது. இதயத்தின் வேலையைப் பார்க்கவும் சிறுநீரகத்தின் வேலையை பார்க்கவும் கூட கருவிகள் உள்ளன. ஆனால், மூளையின் வேலையைப் பார்க்க?
நிற்க. கருவிகள் பல உள்ளன. கால்குலேட்டர் நொடிப்பொழுது கணக்குகளைச் செய்து விடும். கணினி மூளையில் பல வேலைகளை எளிதாகச் செய்து முடித்து விடும். ஆனால்?
மனிதனின் சிறப்பான சிந்தனையையும் நுண்ணறிவையும் படைப்பாற்றலையும் செய்ய ஒரு கருவி இல்லையே!
பல நூறு ஆண்டுகளாக தன் மூளை எப்படிச் சிந்திக்கிறது என்பதைப் பற்றி மனித சமூகத்தின் தத்துவவியலாளர்கள், அறிஞர்கள் விளக்க முனைந்து கொண்டே இருக்கிறார்கள். அதன் முதல் நோக்கம் மனிதனின் சிந்தனையையும் நுண்ணறிவையும் புரிந்து கொள்வது; மற்றொரு நோக்கம் மனிதனைப் போலவே சிந்திக்கும் கருவிகளை உருவாக்குவது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி உள்ள கருவிகள் உங்களைப்போலவே சிந்தித்தால் எப்படி இருக்கும்?
சிந்திக்கும் புத்தகம். நீங்கள் மறந்து விட்டாலும் உங்களைத் தேடி வரும் சூட்கேஸ். காரில் ஏறி உட்கார்ந்தால் போதும் தாமாகவே வண்டியை ஓட்டும் ஓட்டுநர் இல்லா வண்டிகள். புரியாத ஊருக்குச் சென்றால் உங்கள் மொழியில் நீங்கள் சொல்வதைத் துல்லியமாக அந்த ஊர்க் காரர்களின் மொழிக்கு மாற்றிப் பேசும் மென்பொருள்கள். கணக்குப் பாடத்தில் கேள்வியைக் கொடுத்தால் மட்டும் போதும், அந்தக் கணக்கை அப்படியே படிப்படியாகத் தீர்த்து விடும் கணினி. உங்களுக்கு உதவியாகவும் உற்ற தோழனாகவும் ஒரு ரோபோட்… இப்படி கற்பனை செய்து கொண்டே போகலாம். நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இப்போதே உங்களைச் சுற்றி இருக்கும் கருவிகள் சிந்திப்பதால் வரப் போகும் ஆபத்துகளைப் பற்றியும் கற்பனை செய்து இருப்பீர்கள்.
மனிதனைப் போலவே சிந்திக்கும் கருவி களை அல்லது கணினிகளை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), – தமிழில் செயற்கை நுண்ணறிவு என்று அழைப்பார்கள்.
அண்மையக் காலமாக கணினி உலகில் சில மென்பொருள்கள் செயற்கை நுண்ணறிவுடன் மிகத் துல்லியமாகச் செயல்படுவதாகவும் அதனால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிஞர்களும் பல தனியார் நிறுவனங்களும் கூறி வருகின்றன.
ChatGPT என்னும் மென்பொருள் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மனிதனைப் போலவே அட்டகாசமாகப் பதில்கள் கொடுத்தும், கட்டுரைகள் எழுதியும், கவிதைகள் சொல்லியும், சினிமாவிற்கான திரைக்கதைகள் எழுதியும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதன் வருகைக்குப் பின் சிந்திக்க கூடிய கணினிகளை இன்னும் 20 ஆண்டுகளில் உருவாக்கி விடுவோம் என நம்பிக்கை அளிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏன் இப்போது இந்தக் கட்டுரையையே நான் செ.நு. தொழில்நுட்ப உதவியுடன், Voice Typing செய்து தான் உருவாக்கியுள்ளேன்.
ஆனால், இந்தச் செயற்கை நுண்ணறிவின் (இனிமேல் இந்தக் கட்டுரை முழுவதும் புரிதலுக்காக செயற்கை நுண்ணறிவு என்பதை செ.நு. என்று எழுதப் போகிறேன்) வரலாறு 1956இல் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் 1980களில் செ.நு. சாத்தியமே இல்லை என இந்த ஆய்வுகள் பரணை மேல் போடப்பட்டது. ஆனால், இன்று செ.நு. நம் வாழ்வுடன் அன்றாடம் கலந்து விட்டது.
செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜான் மெக்கார்தி என்பவர். இவர் ஒரு கணிதவியல் அறிஞர். ஆனால் செ.நுவின் ஆரம்பம் முதல் அதன் அறிவியல் வளர்ச்சி வரை அதில் பெரும் பங்கு – நாவல் எழுதிய கதாசிரியர்களுடையது தான். இனி நாம் பார்க்கப் போவது மிகவும் விறுப்பான, பல திருப்பங்கள் நிறைந்த, நல்ல கதையம்சம் கொண்ட பலப்பல நாவல்களைப் பற்றித் தான்.
(பார்ப்போம்…)