கோமாளி மாமா-35 : முயல் நீ
மு. கலைவாணன்
கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க பூங்காவிற்கு மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் கோமாளி மாமாவும் வந்துவிட்டார். அவர் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தார்.
அதைப் பார்த்த செல்வம்… “வாங்க… கோமாளி மாமா… இன்னைக்கு இந்தப் புத்தகத்திலே இருக்கிற ஒரு கதையைத்தானே எங்களுக்குச் சொல்லப் போறீங்க?’’ என்று கேட்டான்.
“இல்லை… செல்வம்’’ என்று மறுத்தார் கோமாளி.
“அப்புறம் எதுக்கு இந்தக் கதைப் புத்தகம்?’’ என்றாள் மல்லிகா.
“இந்தப் புத்தகத்தை நூலகத்திலே இருந்து எடுத்துக்கிட்டு வந்தேன். இதோட பேரு பஞ்சதந்திரக் கதைகள்…” என்று கோமாளி சொல்லி முடிப்பதற்குள்.. “மாமா… இதுல உள்ள எல்லாக் கதையும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் மாமா’’ என்றான் மாணிக்கம்.
“உங்களுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியும்னு எனக்கு நல்லாத் தெரியும். இதுல ஒரு கதையிருக்கு…” அது சிங்கமும் முயலும் கதை. அந்தக் கதை… என்று சொல்லும்போதே செல்வம்,
“மாமா ஒரு சிங்கம் எல்லா மிருகத்தையும் கூப்பிட்டு இனி நான் வேட்டையாட மாட்டேன். எந்த மிருகத்தையும் துரத்திப் புடிச்சு அடிச்சுத் தின்னமாட்டேன். நீங்களே” ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என்னோட குகைக்கு வந்திடணும்னு சொல்லும். அதே மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் சிங்கத்தின் குகைக்குப் போகும். அதை சாப்பிட்டுட்டு சிங்கம் குகையிலேயே படுத்துக்கிடந்தது.
ஒருநாள் ஒரு முயல் சிங்கத்தின் குகைக்குப் போகணும். ஆனா… அது சாப்பாட்டு நேரத்துக்குப் போகலே… சிங்கம் பசியோட காத்துக்கிட்டிருந்தது. நேரங் கழிச்சுப் போச்சு முயல். அதைப் பாத்ததும். சிங்கம் பயங்கர கோபத்தோட “ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு வர்றே எனக்கு பசிக்கும்னு உனக்குத் தெரியாதா?” அப்படின்னு தன்னோட சிம்மக்குரல்ல சத்தமா கேட்டுச்சு.
பயந்து நடுங்குன முயல்… “சிங்கராஜா சிங்கராஜா, வர்ற வழியிலே ஒரு சிங்கத்தைப் பாத்தேன். அதுதான் காட்டுக்கு ராஜான்னு சொல்லுச்சு. உங்ககிட்ட உணவா என்னைப் போகவேண்டான்னு சொல்லுச்சு. நான்தான் தப்பிச்சு உங்ககிட்ட வந்தேன்.” அப்படின்னு சொல்லும்.
உடனே சிங்கம், “நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜா அது எப்படி இன்னொரு சிங்கம் இந்தக் காட்டுக்கு ராஜாவா இருக்க முடியும்… வா… என்னோட… அந்தச் சிங்கம் எங்கே இருக்குன்ன காட்டு…” என்று புறப்படும்.
முயல்… சிங்கத்தைக் கொஞ்ச தூரம் கூட்டிக்கிட்டு வந்து ஒரு பாழடைஞ்ச கிணறைக் காட்டி இது உள்ளதான் அந்த சிங்கம் இருக்குன்னு சொல்லும்.
கிணத்துக்குள் எட்டிப்பார்த்த சிங்கம்… கிணறு உள்ள இருக்கிற தண்ணியிலெ தன் பிம்பம் தெரிஞ்சதும்… உள்ளே ஒரு சிங்கம் இருக்கிறதா நினைச்சு… குதிக்கும். கிணத்துக்குள்ள சிங்கம் விழுந்ததும் முயல் மகிழ்ச்சியா காட்டுக்குள்ள போயி எல்லா மிருகத்துக்கும் இந்தச் சேதியை சொல்லும். எல்லா மிருகங்களும் முயலோட செயலைப் பாராட்டும். இது எங்களுக்குத் தெரியும் மாமா’’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் செல்வம்.
“அருமையா இந்தக் கதையைச் சொன்னே செல்வம். பாராட்டுகள்…” என்றார் கோமாளி.
“போதும் மாமா… நீங்கள் கதை சொல்லுங்க’’ என்றான் மாணிக்கம்.
“இன்னைக்கு நான் கதை சொல்லப்போறதில்லே. இப்ப செல்வம் சொன்ன சிங்கமும் முயலும் கதையிலே சில கேள்விகள் கேட்கப்போறேன்’’ என்றார் கேமாளி.
“அய்யய்யோ… கேள்வியா?” எனப் பயந்தபடி செல்வம் பின் வாங்கினான்.
“பயப்படாதே’ செல்வம் நீ சொன்ன சிங்கமும் முயலும் கதையிலே சின்ன முயல் செய்த தந்திரத்தாலே சிங்கம் கிணத்துல விழுந்துடுச்சு. கிணத்து தண்ணியிலே பிம்பம் தெரியும்னு சின்ன முயலுக்குத் தோன்றுன இந்தச் சிந்தனை பெரிய மிருகமான காட்டுராஜா சிங்கத்துக்கு ஏன் வரலே?’’ என்றார் கோமாளி.
“ஆமா… ஏன் வரலே?’’ என்றான் மாணிக்கம்.
“அப்ப இந்தக் கதையே நாம் எப்படி மாத்தலாம்ன்னு நீங்க கொஞ்சம் சிந்திச்சுச் சொல்லுங்களேன்” என்றார் கோமாளி.
“கொஞ்சம் நேரம் குடுங்க! “என்றாள் மல்லிகா “சரி பத்து நிமிடம் நேரம் எடுத்துக்குங்க’’ என்றார் கோமாளி மாமா.
நேரம் கடந்து கொண்டே இருந்தது. கோமாளி வழக்கமாக அமர்ந்து கதை செல்லும் பாறை மேல் அமர்ந்தபடி மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தலையைச் சொறிந்தபடி அங்கும்இங்கும் நடந்து கொண்டு இருந்தனர்.
திடீரென மல்லிகா, “மாமா! வழக்கம் போல முயல் சிங்கத்தை பாழடைஞ்ச கிணத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்து இதோ இதுக்குள்ளதான் இன்னொரு சிங்கம் இருக்குன்னு காட்டுது… எங்க அந்த சிங்கம்? அப்படின்னு எட்டிப் பாத்த சிங்கம், பிம்பத்தில் தன் உருவத்தைப் பாத்ததும் குதிக்கும்… அப்ப சட்டுன்னு முயல் தடுத்து… ‘நில்லுங்க சிங்க ராஜா… அது இன்னொரு சிங்கம் இல்லே, கிணத்துத் தண்ணியிலே தெரியிற உங்களோட பிம்பம். சின்ன முயலான எனக்குத் தெரிஞ்ச இந்த உண்மை…. காட்டுக்கே ராஜாவா இருக்கிற பெரிய மிருகமான உங்களுக்குத் தெரியாமப் போனதுக்கு ரொம்ப நாளா உக்காந்த இடத்திலேயே உணவு தின்னதுதான் காரணம். வழக்கம்போல நீங்க ஓடி, தேடி வேட்டையாடி விலங்குகளைப் புடிச்சுத் தின்னிருந்தா இப்படி மூளை மழுங்கிப்போகாமல் தெளிவா இருந்திருக்கும். எப்பவும் போல நீங்க சுறுசுறுப்பா இயங்கி இருந்தா இந்தச் சின்ன விவரம் உங்களுக்கும் தெரி¢ஞ்சு இருக்கும்.
சோம்பேறித்தனத்தை விட்டுப்புட்டு சுறுசுறுப்பா இருக்க முயல் நீ…, அப்படின்னு சின்ன முயல் சொல்ல பெரிய சிங்கம் தன் தவறை உணர்ந்து சின்ன முயலைப் பார்த்து சிரிச்சுதுன்னு… கதையை மாத்தலாமா? என்றாள் மல்லிகா.
“அடடா! அருமையாச் சொன்னே மல்லிகா!’’ என்றான் மாணிக்கம்.
“நல்ல வேளை நீ சொல்லிட்டே’’ என்றான் செல்வம்.
“மல்லிகா! நீ சிந்திச்ச மாதிரி குழந்தைகள் எல்லாருமே பழைய கதைகளை இன்னைக்கு இருக்கிற புதுமையான கருத்துகளோட சேர்த்துச் சிந்திச்சா… இன்னும் நிறைய கதைகள் உங்களை மாதிரி குழந்தைகளுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்றார் கோமாளி.
(மீண்டும் வருவார் கோமாளி)