கற்போம் பணி செய்வோம்
நன்றே நீயும் சிந்தனைசெய்
நாளும் அறிவை வந்தனைசெய்!
கன்றே இதுதான் நேரமடா
கற்பது பெருமை சேர்க்குமடா!
கல்வியைக் கற்றார் மேலோராம்
கல்வியைத் தடுப்போர் கீழோராம்
சொல்லிச் சென்றார் சான்றோர்கள்
சொன்னதைக் கேட்க வேண்டுமடா!
கற்றவர் கண்ணே கண்ணென்பார்
கல்லார் கண்கள் புண்ணென்பார்
நற்றமிழ் வள்ளுவன் வாக்கதனை
நம்தந்தை பெரியார் ஆதரித்தார்!
படிப்பில் கவனம் செலுத்திடனும்
பண்பையும் கூடவே வளர்த்திடணும்
நடிப்பில் லாமல் எப்போதும்
நலப்பொதுப் பணிகள் புரிந்திடணும்!
பெற்றோர் சொல்லைக் கேட்டிடணும்
பேரும் புகழும் ஈட்டிடணும்!
அற்றார் அழிபசி தீர்த்திடணும்
அன்பின் வழியைப் போற்றிடணும்!
– பாவலர் மலரடியான்,
கல்லக்குறிச்சி