தெரிந்து கொள்வோம்
அனஸ்தீசியா
– மேகா
நம் கவனக்குறைவால் இடித்துக்கொண்டு உடம்பில் சிறு காயம் ஏற்பட்டாலே நம்மால் வலியைத் தாங்க முடிவதில்லை. பெரிய அளவில் அடிபட்டு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போதோ அல்லது நமது உடம்பில் தோன்றும் கட்டிகள் அல்லது வேறு சில நோய்களைக் குணப்படுத்த நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் வலியை எப்படித் தாங்கிக் கொள்கிறோம்?
மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போது நோயாளியின் உடம்பில் வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுப்பர். மயக்க ஊசி போடுவதை அனஸ்தீசியா என்று கூறுவர். மயக்க ஊசி போட்டதும் குறிப்பிட்ட இடம் மரத்துப் போய்விடும். இந்த மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தவர் சர். ஹம்ப்ரி டேவி என்பவராவார்.
இங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்சு நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தவர் டேவி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார்.
புகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் எழுதினார். அப்போது அங்கிருந்த லார்டு ராம்போர்டு என்பவர் உடனடியாக வரச்சொன்னார். டேவியை நேரில் பார்த்ததும், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது; வயதிலும் மிகவும் சிறியவனாக இருக்கிறாய் என்றார் லார்டு ராம்போர்டு.
தயவுசெய்து என் சொற்பொழிவினைக் கேட்டுவிட்டு, பின்பு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினார். சரி என்று அனுமதி கொடுத்தார் லார்டு ராம்போர்டு. டேவியின் பேச்சினைக் கேட்டுவிட்டுப் புகழ்ந்தார். ரசாயனப் பேராசிரியராக வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறிவியல் கருத்துகளை விதைத்தார் டேவி.
அறுவைச் சிசிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அனுபவிக்கும் துன்பத்தினைக் கண்ட டேவி, வலி தெரியாமலிருக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். கடுமையாக உழைத்தார். வாயு ஒன்றினை வைத்து மட்டுமே வலியினை மரத்துப் போகச் செய்யும் தன்மையினைக் காணமுடியும் என யூகித்தார்.
பல வாயுக்களை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தார். எந்த வாயுவினால் பயன் கிடைக்கும் என்று ஆராய்ந்தார். யாரை வைத்துச் சோதனை செய்வது என்று குழம்பினார். உடன் பணிபுரியும் மருத்துவர்கள், உயிருடன் விளையாடும் இச்செயல் வேண்டாம் என எச்சரித்தனர்.
எனவே, பல உயிர்களைக் காப்பதற்காக தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைத் தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்தார். தலைசுற்றல் ஏற்பட்டு உடம்பு மெதுவாக ஆடத் தொடங்கியது. பின்பு மயக்கமடைந்தார்.
சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியுள்ளது. இவ்வாறு, பலமுறை நுகர்ந்து பரிசோதித்துப் பார்த்தார். பிறகு, சக மருத்துவர்களிடமும் விஞ்ஞானிகளிடமும் சோதனை செய்து விளக்கிக் காட்டினார். பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தன.
மேலும், குளோரினுக்கு வெளுக்கும் சக்தி இருப்பதற்கான விளக்கமளித்தார். கார்பன் எனப்படும் கரியின் வடிவமே வைரம் என்று சுட்டிக் காட்டினார். டேவியின் புகழ் உலகமெங்கும் பரவியது. இத்தாலியிலிருந்து இவரது பெயரை மட்டும் எழுதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் டேவியின் கைகளில் கிடைத்தது என்றால் அவரது உலகப் புகழினை அறிந்து கொள்ளலாம்.
உருகிய எரிசோடாவின் மூலம் மின்சாரத்தைச் செலுத்தி அதிலிருந்து சோடியம் என்னும் உலோகத்தைப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் கண்டார். ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார். எனவே, மின்சார ரசாயனத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவரது கடின உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்த ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தற்போதுள்ள குளோராபார்ம், ஈதர் வாயுக்களை மயக்க மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு டேவிதான் வழிகாட்டி. டேவி மறைந்தாலும், நோயாளிக்கு அனஸ்தீசியா கொடுக்கும் மருத்துவர்கள் டேவியை நினைவுகூர்வர்.