செ.நு. தொடர் – 3 : சிந்திக்கும் கணினி
பிஞ்சுத் தோழர்களே,
ஆலன் ட்யூரிங் உருவாக்கிய கணினி. வெற்றிகரமாக ஜெர்மன் அனுப்பிய கடினமான சங்கேதக் கடிதங்களை மிகக் குறைந்த நேரத்தில் எளிதாக மாற்றிவிட்டது. இதனால் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனுக்கு எதிராகப் போய்விட்டது.
1950இல் ஆலன் ட்யூரிங் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதன் தலைப்பு ‘எந்திரங்கள் சிந்திக்குமா?’ என்பது. இந்தக் கட்டுரையில் தான் சிந்தனை என்றால் என்ன? ஓர் எந்திரம் சிந்திக்க என்ன வகையான அமைப்பு தேவை? டிஜிட்டல் கணினிகள் என்றால் என்ன? அவை எப்படிச் செயல்படும்? டிஜிட்டல் கணினிகளின் வருகை எப்படிச் சிந்திக்கும், கணினிகளை உருவாக்கும் என மிக விரிவாக எழுதினார்.
இந்தக் கட்டுரையில் ஆலன் ட்யூரிங் முன்வைத்த இன்னொரு யோசனை ட்யூரிங் சோதனை. நீங்கள் ஒருவேளை சிந்திக்கும் கணினியை உருவாக்கிவிட்டால் அது உண்மையாகவே சரியாகச் சிந்திக்கிறது என எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அதற்கும் ட்யூரிங் ஒரு பரிசோதனையை முன்வைத்தார். அதைத்தான் ட்யூரிங் சோதனை என்று அழைக்கிறோம் (Turing Test).
இந்தச் சோதனையின்படி, இரண்டு அறைகள் பூட்டப்பட்டு இருக்கும். உள்ளே இருப்பவர் யார் என்று நமக்குத் தெரியாது. ஓர் அறையில் சிந்திக்கும் கணினியும், மறு அறையில் மனிதனும் இருப்பார்கள். சோதனை மேற்கொள்ளும் நடுவர் இவர்கள் இருவருடனும் கணினியில் மட்டும் தான் பேசுவார். அதுவும் வார்த்தைகளில் மட்டும்தான் அதாவது தட்டச்சு மட்டும் தான் செய்வார், அவர்களும் பதிலைத் தட்டச்சு மட்டும் தான் செய்ய வேண்டும், நமக்கு உருவமும் குரலும் தெரியவே தெரியாது.
இப்போது நடுவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் பதில் அளிக்க வேண்டும், பதிலை ஆராய்ந்து பார்க்கும் நடுவர் எந்த அறையில் கணினி உள்ளது, எந்த அறையில் மனிதன் உள்ளார் என்று பிரித்தறிய முடியாமல் குழம்பிப் போனால் நம் சிந்திக்கும் கணினி வெற்றி பெற்றதாக அர்த்தம். இன்றளவும் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன ஆனால், உண்மையில் சிந்திக்கும் கணினியைச் சோதிக்க இந்தப் பரிசோதனை முழுமையாக இல்லை என்பது இப்போதைய ஆய்வு முடிவுகளில் நமக்குத் தெரிய வந்துள்ளது.
அதுவரை சிந்திக்கும் எந்திரங்கள் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவு என்பது 1956இல் தான் சமூக வழக்கத்திற்கு வந்தது.
கணிதப் பேராசிரியரான ஜான் மெக்கார்தி 1956 இல் அமெரிக்காவில் உள்ள டார்மவுண்ட் கல்லூரியில் ஒரு கணினி மாநாட்டிற்கு அறிஞர் பலரை அழைத்தார். அந்த மாநாட்டின் சாராம்சம் சிந்திக்கும் கணினிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றித் தான். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிற முக்கியமானவர்கள் மார்வின் மின்ஸ்கி, கிளவுட் ஷெனான், நேத்தன் ராஸ்டர். இந்த மாநாட்டில் தான் முதல்முறையாக ஜான் மெக்கார்தி செயற்கை நுண்ணறிவு எனும் பதத்தைப் பயன்படுத்தினார். இவரைச் செயற்கை நுண்ணறிவின் தந்தை என இதனால் தான் அழைக்கிறார்கள்.
அப்போது கணினி பல துறைகளில் நுழைந்து விட்டது. அதனால் இந்த மாநாட்டில் பங்கேற்ற பலரும் சிந்திக்கும் கணினி என்பது சாத்தியம் என உறுதியாக நம்பினார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் மனிதனுக்கு இணையாகச் சிந்திக்கும் கணினிகளை உருவாக்கிவிடலாம் என அவர்கள் சூளுரைத்தார்கள்.
அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம், இதைப் பயன்படுத்திய மெக்கார்தி, “நாம் சிந்திக்கும் கணினிகளை உருவாக்கினால் உடனடியாக அதை மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்தலாம்” என அமெரிக்க ராணுவத்திடம் கூறினார். ரஷ்யாவிலிருந்து உளவு பார்க்கப்படும் தகவல்களை மொழிபெயர்க்கப் பல நாள்கள் ஆவதால் அமெரிக்க ராணுவத்திற்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மெக்கார்தி சிந்திக்கும் கணினிகளை உருவாக்கினால் மிகக் குறைந்த நேரத்தில் பிழையில்லாமல் கணினிகளே மொழிபெயர்ப்பைச் செய்து விடும். அதற்குத் தேவையான ஆய்வுகளுக்குப் பணம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்க ராணுவமும் சம்மதித்தது. பல பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகள் தொடங்கியது.
ஆரம்பமே ‘நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங்’ எனும் செயற்கை நுண்ணறிவின் முக்கியப் பிரிவில் தான் ஆய்வுகள் தொடங்கின. ரஷ்ய மொழியில் கொடுக்கப்படும் வாக்கியங்களைப் புரிந்து கொண்டு கணினிகள் ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும். சில கணிதங்களின் உதவியுடன் இதைச் செய்து முடித்து விடலாம் என ஜான் மெக்கார்தி நினைத்தார். ஆனால், சில மாதங்கள் கழித்து மனிதச் சிந்தனை என்பது கணிதங்களால் உருவாக்கி விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.
ஆனால், செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகளை அவர் விட்டு விடத் தயாராக இல்லை. இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் செயற்கை நுண்ணறிவு என்பது சாத்தியம். எனவே, அவர்கள் நம்பினார்கள். இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்ய அவர்கள் மீண்டும் மீண்டும் செயற்கை நுண்ணறிவின் புரிதல் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய நிலைப்பாடுகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். மனிதனைப் போலவே பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயல்படும் கணினி தான் இந்த ஆய்வின் உச்சக் குறிக்கோள் என்று வைத்துக் கொண்டால், மனிதர்களால் தீர்க்கக் கூடிய அளவு இந்தச் சிக்கலைச் சிறு சிறு குறிக்கோள்களாக உடைத்துக் கொண்டார்கள். படிப்படியாகத்தான் நாம் முன்னேற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.